கட்டுரைகள்
Published:Updated:

பெண்கள்தான் சுயமரியாதையை சமரசம் செய்துகொள்கின்றனர்...

குஷ்பு
பிரீமியம் ஸ்டோரி
News
குஷ்பு

சொல்கிறார் ‘தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர்’ குஷ்பு

தேசிய மகளிர் ஆணைய உறுப்பினராக நியமிக்கப்பட்டிருக்கும் குஷ்புவுக்கு, தொலைபேசி வழியாக வாழ்த்துச் சொல்லி பேட்டிக்குத் தயாரானோம். ‘அரசியல் கேள்விகள் வேண்டாமே...’ என்ற நிபந்தனையோடு பதிலளிக்கத் தொடங்கினார்.

“ ‘உலகிலேயே பெண்களுக்கு மிகவும் ஆபத்தான நாடு இந்தியா’ என்கிற ஆய்வுகளுக்கு நடுவே உங்களின் பணி என்னவாக இருக்கும்?”

‘‘பெண்களுக்கு எங்கெல்லாம் பாலியல் அத்துமீறல்கள், பிரச்னைகள் இருக்கின்றனவோ அவற்றையெல்லாம் கண்காணித்து, ஆய்வுசெய்து அவற்றுக்கான தீர்வுக்குக் கோரிக்கை வைப்பேன்.”

குஷ்பு
குஷ்பு

‘‘பாதிக்கப்பட்ட பெண்கள் பெரும்பாலும் புகார் கொடுக்க முன்வருவதில்லை என்கிறார்களே?”

‘‘கிராமப்புறப் பெண்களுக்கு இப்படி ஓர் அமைப்பு இருப்பதே தெரியவில்லை. குடும்ப வன்முறைக்கு ஆளாகும் நிறைய பெண்களுக்கு எங்கு புகாரளிக்க வேண்டும் என்பதுகூடத் தெரியவில்லை. எனவே, அது குறித்த விழிப்புணர்வுப் பணிகளை முன்னெடுக்கவிருக்கிறேன்.”

“அப்படியென்றால், தேசிய மகளிர் ஆணையம் குறித்து மக்களிடையே போதிய விழிப்புணர்வு இல்லை என்கிறீர்களா?”

‘‘அப்படியில்லை... யாருக்குத் தெரிய வேண்டுமோ அவர்களுக்குத் தெரியாமலிருக்கிறது. இன்று எல்லோர் கைகளிலும் செல்போன் இருக்கிறது. அந்த செல்போனைப் பயன்படுத்தி 24 மணி நேரமும் தொடர்பு எண், இணையதளம், வாட்ஸ்அப் உள்ளிட்ட மீடியம்கள் வழியாகப் புகார்கள் தெரிவிப்பது குறித்து பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த முயல்வேன்.”

“ `தமிழக பா.ஜ.க-வில் பெண்களுக்கு பாதுகாப்பில்லை’ என்று காயத்ரி ரகுராம் வெளியேறினார். அவர் புகார் கொடுத்தால் நடவடிக்கை இருக்குமா?”

‘‘தேசிய மகளிர் ஆணையத்துக்கும், அரசியலுக்கும் சம்பந்தம் கிடையாது. அரசாங்கத்துக்காகத்தான் வேலை செய்கிறோமே தவிர, குறிப்பிட்ட கட்சிக்கு வேலை செய்யவில்லை. என்னைப் பற்றித் தவறாக ஒருவர் பேசியபோது, அது குறித்து ஆதாரபூர்வமாக தேசிய மகளிர் ஆணையத்தில் புகார் கொடுத்தேன். அப்படிக் கொடுத்த புகாரின் அடிப்படையில், அந்த நபர் நேரில் ஆஜராகி, ‘நான் செய்தது தவறு. அப்படி பேசியிருக்கக் கூடாது’ என்று எழுத்துபூர்வமாக மன்னிப்புக் கேட்டிருக்கிறார். எனவே, யாராக இருந்தாலும் யார்மீது புகார் சொன்னாலும், அது ஆதாரபூர்வமாக உண்மையாக இருந்தால், நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்.”

குஷ்பு
குஷ்பு

“தமிழகத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் அஸ்ஸாமில் கொலைசெய்யப்பட்ட சம்பவத்தில், ராணுவ அதிகாரி கைதுசெய்யப்பட்டிருக்கிறார். இது குறித்து தானாக முன் வந்து தேசிய மகளிர் ஆணையம் விசாரிக்குமா?”

‘‘அந்தச் சம்பவம் குறித்து முதலில் புகார் வர வேண்டும். கிடைக்கப்பெறும் புகாரின் அடிப்படையில்தான் விசாரிக்க முடியும். சில விஷயங்களில் எங்கள் குழு முதலில் பிரச்னையின் அடிப்படையை ஆராயும். அந்த வகையில் அது நீதித்துறை தலையிட வேண்டிய விஷயமாக இருந்தால், அதை நாங்கள் கையிலெடுக்க மாட்டோம்.”

“பெண்ணுரிமை குறித்து உங்கள் கருத்து என்ன?’’

‘‘எனக்கான உரிமையை நான் ஓர் ஆணிடம் கேட்க மாட்டேன். ஏனென்றால், எனக்குப் பிறந்ததிலிருந்து கொடுக்கப்பட்ட அடிப்படை உரிமை அது. அதை எடுத்தேதான் தீருவேன். ஆனால், பெரும்பாலும் பெண்கள்தான் சுயமரியாதையைச் சமரசம் செய்துகொள்கின்றனர். ஆணாதிக்க மனநிலையிலேயே தங்கள் பிள்ளைகளையும் வளர்க்கின்றனர். அது மாற வேண்டும்.”