Published:Updated:

எடப்பாடி பழனிசாமியைத் தெரியும்... அவருடைய மாஸ்டர் மைண்ட் டீமைத் தெரியுமா?

எடப்பாடி பழனிசாமி
News
எடப்பாடி பழனிசாமி

நடந்துமுடிந்த இடைத்தேர்தலில் அதிரடி வெற்றியைப் பெற்று, `நான் தலைமைக்குத் தகுதியான நபர்தான்' என்று நிரூபித்துள்ளார் எடப்பாடி பழனிசாமி. நல்ல அணி அமைந்தால்தானே இதெல்லாம் சாத்தியம்... அப்படி பழனிசாமியின் நம்பிக்கைக்குரிய `பிரெய்ன் டீம்’ இதுதான்.

`மணி'அமைச்சர்கள் - (நம்பிக்கை நட்சத்திரம்)

எடப்பாடிக்கு வலதும் இடதும் யார் என்று அ.தி.மு.க-வில் உள்ள சாதாரணத் தொண்டனிடம் கேட்டாலும் உடனே சொல்லும் பெயர்கள் வேலுமணி, தங்கமணி பெயர்களைத்தான். ஜெயலலிதா இருந்தபோதே எடப்பாடியுடன் இந்த இருவரும் தனிப்பட்ட முறையில் நெருக்கமாக இருந்தனர். ஒரே சமூகம் என்பது கூடுதல் பலம். எடப்பாடியை கூவத்தூரில் முதல்வராகத் தேர்வு செய்தது சசிகலா என்றாலும் அதற்குத் திரைக்கதை எழுதியது வேலுமணி. முதல்வரான பிறகு எடப்பாடியின் கண்அசைவு தெரிந்து காரியம் செய்பவர்கள் இவர்களிருவரும். கூட்டணிக் கட்சிகளின் பேச்சுவார்த்தை முதல், கரன்சி சப்ளை வரை எல்லாம் இவர்கள் மூலமே எடப்பாடி மேற்கொள்வார். பழனிசாமிக்கு எதிராக வரிந்து கட்டி நின்ற பன்னீரைப் பக்குவமாகப் பேசி பக்கத்தில் கொண்டு வந்ததில் இந்த மணியான அமைச்சர்களின் பங்குதான் பிரதானம்.

வேலுமணி, தங்கமணி
வேலுமணி, தங்கமணி

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

சென்னை மருத்துவமனையில் பன்னீரை இந்த இரண்டு அமைச்சர்கள் சந்தித்த பிறகுதான் ஒரே நாளில் இரண்டு அணிகளின் இணைப்பே சாத்தியமானது. ஏன்... இந்த இடைத்தேர்தல் வெற்றியில் இந்த இரண்டு மணிகளின் பங்கும் மிக முக்கியமானது. அரசியல் முடிவாக இருந்தாலும், ஆட்சியில் எடுக்கப்படும் நிர்வாக முடிவாக இருந்தாலும் முதல் நாள் இரவு தன் வீட்டில் இரண்டு மணிகளையும் அழைத்து ஆலோசனை செய்யாமல் எடப்பாடி முடிவெடுப்பதில்லை. எடப்பாடிக்கு நம்பிக்கை நட்சத்திரங்கள் இந்த இருவர்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

நிரஞ்சன் மார்டி (காரியதரிசி)

நிரஞ்சன் மார்டி
நிரஞ்சன் மார்டி

எடப்பாடி, நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோதே அவருக்கு கீழ் பணியாற்றியவர். இப்போது உள்துறைச் செயலாளர் என்ற பவர்ஃபுல் பதவியில் அமர்த்தப்பட்டுள்ளார். தலைமைச் செயலாளராக சண்முகம் இருந்தாலும் எடப்பாடிக்குத் தலைமைச்செயலாளர் என்றால் அது மார்டிதான். நிர்வாக ரீதியாக எடப்பாடி எடுக்கும் முடிவுகள், அரசின் கொள்கை முடிவுகள், திட்டங்கள் அறிவிப்பு என்று முதல்வர் அலுவலகத்தில் நடக்கு ஒவ்வொரு ஃபைல் மூவ்களிலும் மார்டியின் ஒப்புதல் அல்லது `ஒப்பீனியன்’ இல்லாமல் இருக்காது என்கிறார்கள் முதல்வர் அலுவலகத்தினர். அமைச்சராக இருந்தபோதே இவரின் மீது தனி மரியாதை வைத்திருந்த எடப்பாடி, இப்போது அவரை முழுமையாகப் பயன்படுத்திக்கொள்கிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

எழில் ( வெளிச்சம்)

 எழில்
எழில்

செய்தித் துறையில் பணியாற்றியவர் எழில். ஜெயலலிதாவினால் பணிநீட்டிப்புப் பெற்றவர், இப்போது எடப்பாடியிடம் புதிய பணியைப் பெற்றுள்ளார். எடப்பாடியின் மீடியா முகமாக முதலில் வலம் வந்தவர், இப்போது எடப்பாடியின் நம்பிக்கைக்குரிய நபர்களில் ஒருவராகத் திகழ்கிறார். எடப்பாடிக்கு எதிராக எந்த நெகட்டிவ் செய்திகளும் வராமல் பார்த்துக்கொள்வது, முதல்வரின் `புரோமோஷன் ஒர்க்' என்று பம்பரமாகச் சுழன்று வருபவர். சமீபத்தில் எடப்பாடி பழனிசாமி வெளிநாட்டுப் பயணம் மேற்கொண்டபோது அவரது கோட் சூட் படங்கள் வைரலானதே... அந்தப் புரமோஷனின் பின்னால் இருந்த மூளை எழில்தான். அமைச்சர் பெருமக்களே, இப்போது எழில் என்றால் கொஞ்சம் அச்சத்தோடு பார்க்கும் நிலைதான் இருக்கிறது.

கிரிதரன் (நிழல்)

முதல்வரின் தனிச்செயலாளர் என்றாலும் `எடப்பாடியின் நிழல்' என்றே கிரிதரனை அழைக்கிறார்கள். எடப்பாடி அமைச்சராக இருந்த காலம் முதலே அவருடைய செயலாளராக இருந்து வருபவர்.

கிரிதரன்
கிரிதரன்

முதல்வருக்கு நான்கு பேர் செயலாளர் அந்தஸ்தில் இருந்தாலும் எடப்பாடி முதலில் அழைப்பது கிரிதரனைத்தான். எடப்பாடியின் மனசாட்சியே இவர்தான் என ஐ.ஏ.எஸ்கள் மத்தியிலும் பேச்சு உண்டு. முதல்வர் அலுவலகத்திலிருந்து எந்த ஃபைல் உள்ளே வருவது என்றாலும், வெளியே போவது என்றாலும் சிலரின் பார்வைக்கு நிச்சயம் போகுமல்லவா.. அந்தப் பார்வை பட்டியலில் கிரிதரன் தவறாமல் இடம்பெறுவார்.

இளங்கோவன்- எடப்பாடி
இளங்கோவன்- எடப்பாடி

இளங்கோ (ஆல்ரவுண்டர்)

முதலமைச்சரின் அறைக்குள் அனுமதியின்றி நுழையும் அளவுக்கு அதிகாரம் பெற்ற நபர். இளங்கோ என்று சொன்னால் யாருக்கும் தெரியாது. `சேலம் இளங்கோ' என்றால் தமிழகத்தின் அனைத்து மட்டங்களிலும் அறிந்த பெயர். எடப்பாடியின் அந்தரங்கக் காரியதரசி. எந்த வேலையை எடப்பாடி ரகசியமாக முடிக்க வேண்டும் என்று நினைக்கிறாரோ அந்த வேலையை இளங்கோ வசம் ஒப்படைப்பதுதான் வழக்கம். டெண்டர் முதல் டீலிங் வரை எடப்பாடியை அணுகுவதற்கு முன்பு இளங்கோவை அணுகுவதையே பலரும் வாடிக்கையாக வைத்துள்ளார்கள். `இளங்கோவிடம் பேசிக்கொள்ளுங்கள்’ என்று நம்பிக்கையோடு எடப்பாடி சொல்லும் நபர் இந்த `ஆல்ரவுண்டர்’ இளங்கோ.

கோவை செல்வராஜ் ( ஆலோசகர்)

கோவை செல்வராஜ்
கோவை செல்வராஜ்

விவாத நிகழ்ச்சிகளில் அதிகம் தெரியும் இவர், அடிக்கடி எடப்பாடி வீட்டிலும் தென்படுவார். குறிப்பாக எடப்பாடி சேலம் மாவட்டத்தில் சுற்றுப்பயணம் செய்தால் இரவு தங்கும் இடங்களில் செல்வராஜ் கண்டிப்பாக இருப்பார். அரசியல் நிலையைப் பற்றியும் மக்களின் மனதையும் எடப்பாடியிடம் உள்ளது உள்ளபடி எடுத்துவைப்பதில் வல்லவர் இந்த கோயம்புத்தூர்க்காரர். கட்சிரீதியான முடிவாக இருந்தாலும்சரி, நலத்திட்டங்கள் அறிவிப்பாக இருந்தாலும் சரி `ஒருமுறை செல்வராஜிடம் கேட்டுவிடலாம்' என்று சக அமைச்சர்களிடமே எடப்பாடி சொல்லும் அளவுக்கு அவரின் இதயத்தில் இடம் பெற்றிருக்கிறார். ஆனால், முதல்வர் பெயரை வைத்து பல விவகாரங்களிலும் தலையிடுகிறார் என்ற முணுமுணுப்பும் இவரைப் பற்றி நிறையவே கேட்கிறது.

குமரகுரு எம்.எல்.ஏ. (ஆலோசகர்)

விழுப்புரம் தெற்கு மாவட்டச் செயலாளரும், உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ-வுமான குமரகுரு, முதல்வர் எடப்பாடிக்கு பரம நெருக்கம். மாலை நேரங்களில் கடலையைக் கொறித்தபடி குமரகுருவோடு முதல்வர் அமர்ந்துவிட்டால், நேரம்போவது கூடத் தெரியாமல் பேசிக்கொண்டிருப்பார் என்கிறது கிரீன்வேஸ் சாலை வட்டாரம்.

Kumaraguru MLA
Kumaraguru MLA

சில அரசியல் அசைன்மென்ட்களும் குமரகுருவிடம் ஒப்படைக்கப்பட்டு முடிக்கப்படுமாம். விழுப்புரத்தில் அமைச்சர் சி.வி.சண்முகத்தின் ஆதிக்கத்தையும் மீறி குமரகுரு வளர்வதற்கு எடப்பாடியின் ஆதரவுதான் காரணம் எனக் கூறும் சீனியர் அமைச்சர்கள், இந்த நெருக்கத்தால்தான் அவருக்கு திருப்பதி தேவஸ்தான போர்டு உறுப்பினர் பதவி கிடைத்தது என்கின்றனர்.

இவர்களைத் தவிர்த்து, எடப்பாடியின் குடும்ப வட்டாரத்திலும் அவரின் அதீத நம்பிக்கைக்குப் பாத்திரமான சிலர் இருக்கிறார்கள். அவரின் சமுதாயத்தைச் சேர்ந்த இரண்டு ஐ.பி.எஸ் அதிகாரிகளும் அவருக்குப் பலவிதமான ஆலோசனைகளையும் தந்து, தகவல் பரிமாற்றங்களையும் செய்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் யாரும் தங்கள் முகத்தையோ முகவரியையோ காண்பிக்க விரும்புவதில்லை. ஜெயலலிதாவைப் பல விஷயங்களிலும் பின்பற்றும் எடப்பாடி பழனிசாமி, அவரின் பாணியிலேயே தனக்கென ஒரு நம்பிக்கை வட்டத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர்களில் எத்தனை பேர் இவரின் பெயரையும் இவர் தந்திருக்கும் அதிகாரத்தையும் சரியாகப் பயன்படுத்தியிருக்கிறார்கள் என்பது கேள்விக்குறி. இவர்களெல்லாம் எடப்பாடியின் ஆட்சிக்கு பக்கபலமாக இருந்திருக்கிறார்களா அல்லது பக்காவாக, பலமாக சம்பாதித்திருக்கிறார்களா என்கிற கேள்விகளுக்கெல்லாம் காலம்தான் விடை சொல்ல முடியும்.