Published:Updated:

பறக்கும் படையா... பறிக்கும் படையா?

பறக்கும் படையா... பறிக்கும் படையா?
பிரீமியம் ஸ்டோரி
பறக்கும் படையா... பறிக்கும் படையா?

பரிதவிக்கும் வியாபாரிகள், பொதுமக்கள்...

பறக்கும் படையா... பறிக்கும் படையா?

பரிதவிக்கும் வியாபாரிகள், பொதுமக்கள்...

Published:Updated:
பறக்கும் படையா... பறிக்கும் படையா?
பிரீமியம் ஸ்டோரி
பறக்கும் படையா... பறிக்கும் படையா?

தேர்தலின்போது வாக்காளர்களுக்கு விநியோகிக்க எடுத்துச் செல்லப்படும் லஞ்சப் பணம், தங்கம் உள்ளிட்ட பரிசுப்பொருள்களைப் பிடிக்கும் நோக்கத்துடன் தேர்தல் கமிஷனால் உருவாக்கப்பட்டதுதான் பறக்கும் படை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக இவர்களால் எந்தத் தேர்தலிலும் பணப்பட்டுவாடாவைத் தடுக்க முடியவில்லை. மாறாகச் சிறு வியாபாரிகள், விவசாயிகள் மற்றும் பொதுமக்களிடம் இவர்கள் காட்டும் கெடுபிடிகள் தேர்தலுக்குத் தேர்தல் அதிகரித்துவருகின்றன என்கிற புகார்கள் வலுத்துவருகின்றன. இதற்கு, கடந்தகால உதாரணங்களே சாட்சி.

பறக்கும் படையா... பறிக்கும் படையா?

கடந்த 2016 சட்டமன்றத் தேர்தலின்போது, கரூரில் பிரபல தொழிலதிபர் அன்புநாதன் வீட்டில் 10 லட்சம் ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது. இது தொடர்பான வழக்கு கிணற்றில் போட்ட கல்லாக இருக்கிறது. ஆர்.கே.நகர் தேர்தலின்போது நடந்த அலப்பறைகள் கொஞ்ச நஞ்சமல்ல... அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வீட்டில் நடந்த ரெய்டும்... உதவியாளர் ஒருவர் ஃபைல்களைத் தூக்கிக்கொண்டு ஓடிய காட்சிகளையும் அவ்வளவு சீக்கிரம் மறக்க முடியாது. அப்போது அ.தி.மு.க அமைச்சர்கள் 89 கோடி ரூபாய் பட்டுவாடா செய்ததற்கான ஆவணங்களை வருமான வரித்துறையினர் கைப்பற்றினர். அந்த வழக்கு என்னவானது என்றே தெரியவில்லை.

அதே தேர்தலின்போது திருப்பூர் அருகே மூன்று கன்டெய்னர்களில் 570 கோடி ரூபாய் பிடிபட்டது. அந்தப் பணம் தமிழகத்தைச் சேர்ந்த பிரபல அரசியல் புள்ளிக்குச் சொந்தமானது என்று அப்போது பரபரப்பாகப் பேச்சு எழுந்தது. கடைசியில், ஸ்டேட் பேங்க் பணம் என்று கணக்கு சொல்லி வழக்கை முடித்துவைத்துவிட்டனர். இப்படி தமிழகத்தின் அரசியல்வாதிகள் பலரும் தேர்தல் நேரத்தில் கையும் களவுமாகப் பிடிபட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்கள் மீதான நடவடிக்கைகள் என்னவென்று பார்த்தால்... ம்ஹும்... ஒன்றுமேயில்லை.

பறக்கும் படையா... பறிக்கும் படையா?

“அரசியல்வாதிகளிடம் கரிசனம் காட்டும் பறக்கும் படை எங்களைப் போன்ற வியாபாரிகள், விவசாயிகள் என யாரையும் விடுவதில்லை. நாங்கள் தேர்தல் சீஸனில் வியாபாரத்துக்காகப் பொருள்களை எடுத்துச் சென்றால் பாய்ந்துவந்து பிடிப்பவர்கள், உரிய ஆவணங்கள் கைவசம் இல்லையென்று, அரசு கஜானாவில் ஒப்படைத்துவிடுகிறார்கள். சட்ட சம்பிரதாயங்களை முடித்து அவற்றை வாங்குவதற்கே பல மாதங்களாகிவிடுகின்றன. அதற்குள் நாங்கள் வியாபாரத்துக்கு வாங்கிய கடனுக்கான வட்டியும் பலமடங்கு உயர்ந்து, எங்கள் வியாபாரமே சீரழிந்துவிடுகிறது.

இந்தியா போன்ற அமைப்புசாரா தொழில்கள் அதிகமிருக்கும் ஒரு நாட்டில், சிறு வியாபாரிகளும் விவசாயிகளும் ஆவணங்களுக்கு எங்கே போவார்கள்? உதாரணத்துக்கு சாதாரண காய்கறி மார்க்கெட்டில் நூறு ரூபாய்க்கு காய்கறி வாங்கும் தேர்தல் ஆணையர், அந்தக் கடையில் ரசீது கேட்டு வாங்குவாரா அல்லது அந்த வியாபாரி, தான் சரக்கு வாங்கிய விவசாயிக்குத்தான் ரசீது தருவாரா? இதுதான் நடைமுறை. சட்டம் தனது கடமையைச் செய்யும்தான்... ஆனால், மேற்கண்ட நடைமுறைச் சிக்கல்களுக்கெல்லாம் தேர்தல் கமிஷன் என்ன தீர்வு வைத்திருக்கிறது?” என்று நம்மிடம் பொங்கினார் சிறு வியாபாரி ஒருவர்.

இவர்களின் கதை இப்படியென்றால், அடிக்கடி பயணம் மேற்கொள்ளும் பொதுமக்களின் புலம்பல் வேறு மாதிரியாக இருக்கிறது. உதாரணத்துக்கு சேலத்திலிருந்து ஒருவர் சென்னைக்கு காரில் பயணமாகும்போது, வழியில் கிட்டத்தட்ட 10-க்கும் மேற்பட்ட இடங்களில் காரை நிறுத்தி, சோதனை என்கிற பெயரில் பாடாய்ப்படுத்திவிடுகிறார்கள். அதற்கு பதிலாக முதன்முறை பரிசோதிக்கும்போதே பிரச்னை எதுவுமில்லை என்றால், அவரது பெட்டிக்கோ அல்லது காரின் டிக்கிக்கோ சீல் வைத்துவிடலாம். வேறெங்கும் பரிசோதனைகள் தேவைப்படாது. இதனால், பயணிகளுக்கான சிரமங்கள் குறைவதுடன் பறக்கும் படையினரின் பணிச்சுமையும் குறையும்.

பறக்கும் படையா... பறிக்கும் படையா?

வரும் நாள்களில் இந்த ரெய்டுகளால் பொதுமக்களும் வியாபாரிகளும் கடுமையாக பாதிக்கப்படுவோம் என்ற அச்சத்தில் இருக்கிறார்கள்.

தமிழ்நாடு தங்கம், வைர நகைகள் வியாபாரிகள் சங்கத் தலைவர் ஜெயந்திலால் சலானியிடம் இது குறித்துக் கேட்டபோது கொட்டித் தீர்த்துவிட்டார்... ‘‘சென்னையை `ஜுவல்லரி தொழிலுக்கான ஹப்’ என்றே கூறலாம். அந்த அளவுக்குத் தங்க நகைப் புழக்கம் இருக்கும். ஏற்கெனவே கொரோனாவால் பாதிப்பிலிருந்த நகைக்கடைகளுக்கு, இப்போது தேர்தல் என்ற பெயரில் கடும் டார்ச்சர் கொடுக்கிறார்கள். ஏதோ கள்ளக்கடத்தல் தங்கத்தைப் பிடித்ததுபோல மாயையை உருவாக்குகிறார்கள். சிறு வியாபாரிகள் உருக்கி எடுத்துச் செல்லும் வெள்ளியைக்கூட விடுவதில்லை. பெரும்பாலானோர் உற்பத்தியை நிறுத்திவிட்டார்கள். தினப்படி தொழிலாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள். இதனால், தேர்தல் தேதி வரை கடையை மூடிவிடலாமா என்றுகூட யோசிக்கிறோம். இது பற்றித் தேர்தல் கமிஷனிடம் பலமுறை பேசிவிட்டோம். எந்த விடிவும் கிடைக்கவில்லை’’ என்றார்.

தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகுவிடம் பேசினோம். ‘‘கட்சியினர், பொதுமக்கள் என்று பறக்கும் படையினர் பாகுபாடு காட்டுவதில்லை. கடந்த தேர்தலின்போது ஆளுங்கட்சியினர் மீதான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் இருக்கின்றன. சட்டத்துக்கு உட்பட்டுத்தான் சோதனைகள் நடக்கின்றன. பிடிபடும் பொருள்கள் தொடர்பாக முதற்கட்ட விசாரணைக்காக மாவட்ட அளவில் கமிட்டி வைத்திருக்கிறோம். கைப்பற்றப்படும் பொருள்கள் விஷயத்தில் உரிய ஆவணங்களைப் பரிசீலித்து அவர்கள் முடிவெடுக்கிறார்கள்’’ என்றவரிடம், ‘‘திருமணம், சாதாரண வியாபாரிகள் என்று அன்றாடச் செலவுக்குப் பணம் எடுத்துச் செல்பவர்களும் அவதிக்குள்ளாகிறார்களே?” என்றோம்.

பறக்கும் படையா... பறிக்கும் படையா?

‘‘50,000 ரூபாய்க்கு மேல் எடுத்துச் செல்லும்போது ஏடிஎம் ரசீது அல்லது செக் ரசீது இருக்க வேண்டும். அதிகப்படியான நகை எடுத்துச் சென்றால், நகை வாங்கியதற்கான ரசீது இருக்க வேண்டும்’’ என்றார் கறாராக.

இப்படிப் பறிமுதல்கள் ஒருபுறம் நடந்தாலும், எந்தத் தேர்தலிலும் வாக்காளர்களுக்குப் பணப்பட்டுவாடா நின்றபாடில்லை. ஓட்டுக்காகப் பணம் கொடுப்பவர்கள், கொடுத்துக்கொண்டேதான் இருக்கிறார்கள். அதைத் தடுக்கத் தவறிய அதிகாரிகள்மீதும் எந்த நடவடிக்கையும் இல்லை. இந்தத் தேர்தலிலாவது, பணப்பட்டுவாடாவை தடுக்கத் தவறிய அதிகாரிகள்மீது நடவடிக்கை எடுக்குமா தேர்தல் கமிஷன்?

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism