Published:Updated:

தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலை... வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வியாபாரிகள்!

இடிக்கப்படும் கடைகள்

திருநெல்வேலி- தென்காசி இடையிலான நான்குவழிச் சாலைப் பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தன. தற்போது இத்திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 45.6 கி.மீ. இருவழிப் பாதை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.

தென்காசி - திருநெல்வேலி நான்குவழிச் சாலை... வாழ்வாதாரம் இழந்து தவிக்கும் வியாபாரிகள்!

திருநெல்வேலி- தென்காசி இடையிலான நான்குவழிச் சாலைப் பணிகள் கடந்த எட்டு ஆண்டுகளாகக் கிடப்பில் போடப்பட்டிருந்தன. தற்போது இத்திட்டப் பணிகள் மீண்டும் தொடங்கப்பட்டிருக்கின்றன. மொத்தம் 45.6 கி.மீ. இருவழிப் பாதை நான்கு வழிச்சாலையாக மாற்றப்படுகிறது.

Published:Updated:
இடிக்கப்படும் கடைகள்

திருநெல்வேலி - தென்காசி சாலை தமிழகம், கேரளாவை இணைக்கும் மிகமுக்கியச் சாலை. இச்சாலை வழியாக தினசரி 500-க்கும் மேற்பட்ட சிமென்ட், மரத்தடி, காய்கறி, சரக்கு லாரிகளும், தூத்துக்குடி துறைமுகத்திலிருந்து வரும் பொருள்களும் வந்து செல்கின்றன. இரு மாநிலங்களுக்கு இடையிலான பொருளாதாரத் தொடர்புக்கு இந்தச் சாலை மிகமுக்கியமானது.

இந்த நிலையில் கடந்த 2018-ல் நான்குவழிச் சாலைப் பணியை நெடுஞ்சாலைத்துறை தொடங்கி சாலையோரத்திலிருந்த பழைமையான மரங்கள் வெட்டப்பட்டன. இதற்கு எதிர்ப்பு கிளம்பவே அதை நவீன முறையில் மறுநடவு செய்ய மாவட்ட நிர்வாகம் உத்தரவிட்டது. பிறகு சாலையோரத்திலுள்ள மின்கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டன.

இடிக்கப்பட்ட  கடைகள்
இடிக்கப்பட்ட கடைகள்

அடுத்த கட்டமாகச் சாலையோரத்தில் நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் உள்ள கடைகள் மற்றும் கட்டடங்களை அப்புறப்படுத்தும் பணி தொடங்கியது. கடை உரிமையாளர்களுக்கு நெடுஞ்சாலைத்துறை சார்பாக இழப்பீட்டுத் தொகையும் வழங்கப்பட்டது. அடுத்ததாகத் தென்காசி மாவட்டம், ஆலங்குளத்தில் சாலையோரத்தில் சர்வே எண் 424-ல் உள்ள நெடுஞ்சாலைத்துறைக்குச் சொந்தமான இடத்தில் கட்டப்பட்ட கடைகளும் கட்டடங்களும் கடந்த புதன்கிழமை இடிக்கப்பட்டன. ஆலங்குளம் பேருந்து நிலையத்தை ஒட்டிய காய்கறிக்கடை, பழக்கடை, கறிக்கடை, பாத்திரக்கடை உள்ளிட்ட கடைகளும் இடிக்கப்பட்டதால் பொதுமக்களும் பாதிக்கப்படுகின்றனர்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருசில வியாபாரிகள் பிழைப்பிற்காக வெயிலில் அமர்ந்து வியாபாரம் செய்கின்றனர். கடைகள் இடிக்கப்பட்டதால் சுமார் 100-க்கும் மேற்பட்ட வியாபாரிகளின் வாழ்வாதாரம் கேள்விக்குறியாகியுள்ளது. இது குறித்து அங்கு பழக்கடை வைத்திருக்கும் வியாபாரியிடம் பேசினோம். ``பத்து வருசத்துக்கு மேல இங்க பழக்கடை, பூக்கடைவெச்சிருக்கேன். இப்போ ரெண்டு கடையையும் இடிச்சுட்டாங்க. இதுல ரெண்டு லட்சம் நஷ்டம். இழப்பீட்டுத் தொகை தந்துட்டாங்க. ஆனாலும் வியாபாரம் பண்ணுறதுக்குக் கடை இல்லை. ரோட்டுல டேபிள் போட்டுத்தான் பூ, மாலை வியாபாரம் பண்ணுறோம். ஊரடங்கு காலத்துல வருமானத்துக்கு ரொம்ப கஷ்டப்பட்டதால கடைக்கு நிறையா வியாபாரிங்க வாடகை கொடுக்கலை. இப்போ வாடகை மட்டுமே லட்சக்கணக்கா வருது. பேரூராட்சிலயிருந்து வாடகை கொடுத்தாத்தான் அடுத்த ஏற்பாடு பண்ணுவோம்னு சொல்றாங்க. 100 கடைக்கு மேல இடிச்சதுனால கடை ஓனர், வேலை பார்க்குறவங்கன்னு மொத்தம் 300 குடும்பம் பாதிக்கப்பட்டிருக்கு" என்றார்.

இடிக்கப்பட்ட  கடைகள்
இடிக்கப்பட்ட கடைகள்

இது குறித்து ஆலங்குளம் பேரூராட்சித் தலைவர் சுதாமோகன்லால், ``சர்வே எண் 424-ல் 84 கடைகளும், ஆலங்குளம் பேருந்து நிலையத்தையொட்டி 22 கடைகளும் இதுவரை இடிக்கப்பட்டிருக்கு. வியாபாரிகளுக்கு இழப்பீட்டுத் தொகை கொடுத்தாச்சு. பல வியாபாரிகள் வாடகை தராததால் பேரூராட்சிக்கு ரொம்ப நஷ்டம். மாற்று ஏற்பாடாக கடை கட்டித்தர பேரூராட்சியில் போதுமான இடவசதி இல்லை. தென்காசி மாவட்ட நிர்வாகத்தில் மனு கொடுத்திருக்கிறோம். நிச்சயமா மாற்று ஏற்பாடு செய்து தருவோம்" என்றார்.

அரசு சார்பில் விரைவில் அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து தர வேண்டும் என்பது வாழ்வாதாரத்தை இழந்து தவிக்கும் அந்த மக்களின் கோரிக்கையாக உள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism