அரசியல்
அலசல்
Published:Updated:

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவுக்கு எதிரான எடப்பாடியின் சதி!

ராமச்சந்திரன்
பிரீமியம் ஸ்டோரி
News
ராமச்சந்திரன்

சொல்கிறார் எம்.ஜி.ஆர் வாரிசு ராமச்சந்திரன்

பொன்விழா ஆண்டில் அல்லோலகல்லோலப்பட்டிருக்கிறது அ.தி.மு.க. அதில் எம்.ஜி.ஆரின் ராமாவரம் தோட்டமும் தப்பவில்லை. இந்தப் பின்னணியில், எம்.ஜி.ஆரின் வாரிசுகளில் ஒருவரான ராமச்சந்திரனைச் சந்தித்தோம். ஓ.பி.எஸ் அணியில் மாநில இளைஞரணித் துணைச் செயலாளராகவும் இருக்கிறார். இனி பேட்டி...

``மற்ற விஷயங்களுக்குள் செல்வதற்கு முன்பாக, உங்களைப் பற்றிச் சொல்லுங்கள்?’’

``எம்.ஜி.ஆர் பேரன் நான். எம்.ஜி.ஆர் வளர்ப்பு மகளாகத் தத்தெடுத்த வர்களில் ஒருவரான சுதா விஜய குமாரின் மகன். என்னை ‘ஜூனியர் எம்.ஜி.ஆர்’ என்றும் அழைப்பார்கள். ‘வெள்ளை யானை’, ‘சங்கத்தலைவன்’, ‘இடும்பன்’ எனப் பல படங்களில் நடித்திருக்கிறேன். அரசியல்ரீதியாக ஐயா ஓ.பி.எஸ்-ஸின் ‘உண்மையான’ அ.தி.மு.க-வில் இருக்கிறேன்.’’

``ஆனால், ‘ஓ.பி.எஸ் தி.மு.க-வுடன் சேர்ந்துகொண்டு எம்.ஜி.ஆர் உருவாக்கிய கட்சியை அழிக்கப்பார்க்கிறார்’ என்று பலர் குற்றம்சாட்டுகிறார்களே?’’

``அவர்மீது வேறு குற்றச்சாட்டுகள் இல்லை. அதனால்தான் இது போன்ற அவதூறுகளைப் பரப்புகிறார்கள். ‘முதல்வரைச் சந்தித்து தனியாகப் பேசினேன் என்று எடப்பாடி நிரூபித்தால் அரசியலைவிட்டே விலகிவிடுகிறேன்’ என ஓ.பி.எஸ் சவால் விட்ட பிறகு எடப்பாடியிடமிருந்து எந்தப் பதிலும் இல்லையே... `குறைகுடம் கூத்தாடும்’ என்பதைப் போன்ற செயல்தான் அது.’’

``ஓ.பி.எஸ் அணியில் இருந்தாலும் சசிகலாவையும் ஆதரிப்பவர்கள் நீங்கள்... ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவைக் குற்றம் சாட்டியிருக்கிறதே?’’

``குற்றம் செய்திருந்தால் அதற்கான தண்டனையை அவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால், என்ன நடந்தது என்பது இன்னும் யாருக்குமே முழுமையாகத் தெரியவில்லை. ஆஞ்சியோ சிகிச்சை வேண்டாம் என்று அம்மாவேகூட சொல்லியிருக்கலாம். அது இயற்கையான மரணமாகவும் இருக்கலாம். அதை அரசாங்கம் விசாரித்து ஒரு முடிவுக்கு வரும்.’’

``சசிகலா குற்றம் செய்திருக்க மாட்டார் என்று உறுதியாகச் சொல்கிறீர்களா?’’

‘`அப்படிச் சொல்லவில்லை. குற்றம் செய்திருந் தால் நிச்சயமாக தண்டனையை அனுபவிப்பார். கடவுள் இருக்கிறார், மக்கள் திலகம் எம்.ஜி.ஆர் மேலிருந்து பார்த்துக்கொண்டிருக்கிறார். தக்க பதிலடியை நிச்சயம் கொடுப்பார்கள்.’’

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவுக்கு எதிரான எடப்பாடியின் சதி!

``ஆணையத்தில் ஆஜரான ஓ.பி.எஸ்., சசிகலாவுக்கு ஆதரவாகப் பேசியிருந்தார். ஆனால், இப்போது ஆணையம் சசிகலாவைக் குற்றம்சாட்டியிருக்கிறது. இது அரசியல்ரீதியாக ஓ.பி.எஸ்-ஸுக்குப் பின்னடைவு இல்லையா?’’

``சசிகலா குற்றம் செய்திருந்தால் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்பதுதான் ஓ.பி.எஸ்-ஸின் நிலைப்பாடும். நீதியரசர் ஆறுமுகசாமி விசாரித்து ஒரு ரிப்போர்ட் மட்டும்தான் கொடுத்திருக்கிறார். அதை விவாதத்துக்குக் கொண்டுவர முடியாது. அரசாங்கம்தான் அடுத்தடுத்த பணிகளைச் செய்ய வேண்டும்.’’

``இப்போதிருக்கும் சூழ்நிலையில் சசிகலாவுடன் ஓ.பி.எஸ் இணைந்தால், அதை அ.தி.மு.க தொண்டர்கள், பொதுமக்கள் ஏற்றுக்கொள்வார்களா?’’

``சசிகலா அம்மாவின்மீது ஆணையம் குற்றம்சாட்டியிருப்பது, அவரின் ஆதரவாளர்களுக்கு வருத்தம் தரக்கூடிய விஷயம்தான். ஆனால், இந்த அறிக்கையே சசிகலாவுக்கு எதிரான எடப்பாடியின் சதி என்றும் சொல்கிறார்கள்.’’

`` ‘எடப்பாடியின் சதி’ என்று எப்படி சொல்கிறீர்கள்?’’

``அரசாங்கத்துடன் சேர்ந்துகொண்டு எடப்பாடிதான், ஆறுமுகசாமி ஆணையத்தின் மூலம் சசிகலா அம்மாமீது குற்றச்சாட்டைச் சுமத்துகிறார். காரணம், அவருக்குத்தான் சசிகலா அம்மாவின்மீது காழ்ப்புணர்ச்சி இருக்கிறது. முதல்வர் ஸ்டாலினுடன் சேர்ந்துகொண்டு அனைத்தையும் செய்துவிட்டு, ‘ஓ.பி.எஸ் தி.மு.க-வுடன் கூட்டாக இருக்கிறார்’ என மாற்றிப் பேசுகிறார்.’’

ஆறுமுகசாமி ஆணைய அறிக்கை சசிகலாவுக்கு எதிரான எடப்பாடியின் சதி!

``இது என்ன புதுக்கதை?’’

``அதற்கான வாய்ப்பிருக்கிறது... எம்.ஜி.ஆர் ஐயா வீட்டுக்கு வருபவர்களில் பலரும் அப்படித்தான் சொல்கிறார்கள். எனவே, அந்தக் கோணத்திலும் விசாரிக்க வேண்டும் என்கிறேன்.’’

``ஓ.பி.எஸ்-ஸின் அடுத்தகட்ட திட்டம் என்ன... அமைதியாகவே இருக்கிறாரே?’’

``அனைவரும் ஒன்றிணைய வேண்டும் என்றுதான் நினைக்கிறார். அவர் சுயநலமாக இருந்திருந்தால் அவரும் தனியாகப்போய் செயல்பட்டிருக்க முடியும். அவர், சின்னம்மா, டி.டி.வி-யை மட்டும் கூப்பிடவில்லை. எடப்பாடி ஐயாவையும்தான் அழைக்கிறார். இதுவரை பல விஷயங்களில் விட்டுக்கொடுத்திருக்கிறார், அதற்காக ஒற்றைத் தலைமை விவகாரத்திலும் விட்டுக்கொடுக்க வேண்டிய அவசியமில்லை. அவருக்கும் தன்மானம், சுயமரியாதை இருக்கிறதுதானே?’’

``உங்கள் குடும்பத்துக்குள்ளேயே எடப்பாடி அணி, ஓ.பி.எஸ் அணி, பா.ஜ.க ஆதரவு என ஏன் இவ்வளவு முரண்பாடுகள்?’’

``ஒரே குடும்பமாக இருந்தாலும் நிறைய பேருக்கு மாறுபட்ட கருத்துகள் இருக்கின்றன. நான் அ.தி.மு.க-வை ஆதரிப்பதற்குக் காரணம், நாங்கள் எம்.ஜி.ஆர் வீட்டில் இருக்கிறோம், அவர் எங்கள் ரத்தத்தில் கலந்திருக்கிறார். அதனால் என் உயிருள்ளவரை என் தாத்தா உருவாக்கிய கட்சியில்தான் இருப்பேன். ஆனால், பா.ஜ.க தமிழ்நாட்டில் ஆட்சிக்கு வரப்போகிறது, அந்தக் கட்சி வளர்ந்துகொண்டிருக்கிறது என நினைத்து எங்கள் குடும்பத்தில் சிலர் அந்தக் கட்சியில் இருக்கலாம். ஆனால், தமிழ்நாட்டு மக்கள் எப்போதும் பா.ஜ.க-வை ஆதரிக்க மாட்டார்கள் என்பதுதான் உண்மை.’’

``ஆனால், ஓ.பி.எஸ்-ஸை வைத்து அ.தி.மு.க-வை உடைத்து பா.ஜ.க-வை தமிழ்நாட்டில் வளர்க்கப் பார்க்கிறார்கள் என்கிற விமர்சனங்கள் இருக்கின்றனவே?’’

``தான் தப்பிப்பதற்காக எடப்பாடி சொல்கிற குற்றச்சாட்டுகள் இவை. பா.ஜ.க தலைவர்களைச் சந்திக்க அவர் நேரம் கேட்டும் கொடுக்கப்படவில்லை. அதனால், இப்படிச் சொல்கிறார். உண்மையைச் சொன்னால், பா.ஜ.க-வுடன் கூட்டணிவைக்க ஓ.பி.எஸ் ஐயாவுக்கு விருப்பமே இல்லை. எடப்பாடிதான் அந்த முடிவை எடுத்தார்.’’