Election bannerElection banner
Published:Updated:

`எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்தும் கமல், ரஜினி...’ ஏன் பதறுகிறார் எடப்பாடி?

பழனிசாமி - கமல் - ரஜினி - எம்.ஜி.ஆர்
பழனிசாமி - கமல் - ரஜினி - எம்.ஜி.ஆர்

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் பரப்புரை தொடங்கியிருக்கும் இந்த நேரத்தில், 33 ஆண்டுகளுக்கு முன்பாக மறைந்துவிட்ட முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் பெயர் அதிகமாக விவாதிக்கப்படுகிறது.

அ.தி.மு.க-வின் நிறுவனரும், தமிழகத்தின் முன்னாள் முதல்வருமான எம்.ஜி.ஆர் மறைந்து, அ.தி.மு.க-வின் அடுத்த தலைமையாக ஜெயலலிதா உருவெடுத்த பிறகு, அந்தக் கட்சியின் விளம்பரங்களிலும் மேடைகளிலும் எம்.ஜி.ஆருக்கான முக்கியத்துவம் படிப்படியாகக் குறைய ஆரம்பித்தது. பிறகு, முழுக்க முழுக்க ஜெயலலிதா மட்டுமே முன்னிலைப்படுத்தப்பட்டார். அ.தி.மு.க-வின் போஸ்டர்களில் ஜெயலலிதாவின் படம் பிரமாண்டமாகவும், எம்.ஜி.ஆரின் படம் ஸ்டாம்ப் சைஸிலும் இருக்கும் நிலை ஏற்பட்டது. ஜெயலலிதா மறைந்த பிறகு தற்போது நடைபெற்றுவரும் ஆட்சியை `அம்மா ஆட்சி’ என்றுதான் அ.தி.மு.க-வினர் கூறிவருகிறார்கள். எம்.ஜி.ஆருக்கு அ.தி.மு.க-வினர் எந்த முக்கியத்துவமும் கொடுப்பதில்லை. அவர்களுக்கு முழுக்க முழுக்க அம்மாதான்.

எம்.ஜி.ஆர்
எம்.ஜி.ஆர்

ஆனால், எம்.ஜி.ஆர் மறைந்து 33 ஆண்டுகள் கடந்தநிலையிலும், ஒவ்வோர் ஆண்டு அவரின் பிறந்தநாளிலும், மறைந்த நாளிலும் தமிழகம் முழுவதும் வீதிகளில் அவரது புகைப்படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செய்துகொண்டிருக்கிறார்கள் எம்.ஜி.ஆரின் ரசிகர்களும் தொண்டர்களும். எம்.ஜி.ஆரின் புகழ் இன்னும் மங்காமல் இருக்கிறது என்பதற்கு சாட்சி இது. ஆகவேதான், தற்போதைய தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் பற்றிய விவாதங்கள் முன்னுக்கு வந்திருக்கின்றன. எம்.ஜி.ஆர் பெயரைச் சொன்னாலே வாக்குகள் வந்து விழும் என்று புதிதாகக் கட்சி தொடங்குபவர்கள் கணக்கு போடுகிறார்கள்.

நடிகர் விஜயகாந்த் கட்சி ஆரம்பிதது அரசியலில் நுழையும்போதே `நான் கறுப்பு எம்.ஜி.ஆர்’ என்று சொல்லிக்கொண்டுதான் நுழைந்தார். அரசியல் கட்சி ஆரம்பிக்கப்போவதாக பரபரப்பைத் தொடங்கியவுடனேயே, எம்.ஜி.ஆர் சிலையைத் திறந்துவைத்துப் பேசிய நடிகர் ரஜினிகாந்த், `எம்.ஜி.ஆர் கொடுத்த ஆட்சியை என்னால் கொடுக்க முடியும்’ என்றார். எம்.ஜி.ஆருக்கு எந்தச் சம்பந்தமும் இல்லாத பா.ஜ.க-வினர் வேல் யாத்திரையில் எம்.ஜி.ஆர் படத்தைப் பயன்படுத்துகிறார்கள். எம்.ஜி.ஆரின் சிலைக்குக் காவி வர்ணம் பூசுகிறார்கள். இன்றைக்கு, `எம்.ஜி.ஆரின் நீட்சி நான்’ என்று சொல்கிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவரான நடிகர் கமல்ஹாசன்.

விஜயகாந்த்
விஜயகாந்த்

கமலுக்கு எதிராகக் கொந்தளித்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி. `கமல்ஹாசன் புதிதாகக் கட்சி ஆரம்பித்திருக்கிறார். அவருக்கு என்ன தெரியும்... சினிமாவில் ஓய்வுபெற்றவர். அவருக்கு எழுபது வயதாகிறது. இந்த வயதில் டி.வி நிகழ்ச்சியை நடத்திக்கொண்டிருக்கிறார். டி.வி நிகழ்ச்சி நடத்துபவர் அரசியல் செய்தால் என்னவாகும்... அப்படிப்பட்ட ஒரு தலைவன் சொல்லக்கூடிய கருத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்... அவர் நாட்டு மக்களுக்கு நன்மை செய்வதாக இல்லை. நன்றாக இருக்கக்கூடிய குடும்பத்தைக் கெடுப்பதுதான் அவரது வேலை. நாடு நலம்பெற எத்தனையோ நல்ல திட்டங்கள் இருக்கின்றன. அவை பற்றி அவர் கூறலாம். மாணவச் செல்வங்களுக்கு நல்ல அறிவுரைகள் கூறலாம். பாடல்கள் மூலம் எவ்வளவோ நல்ல கருத்துகளை எம்.ஜி.ஆர் கூறினார். கமல்ஹாசன் ஒரு படத்திலாவது நாட்டு மக்களுக்கு நல்ல கருத்துகளைக் கூறியிருக்கிறாரா... நன்மை செய்யக்கூடிய பாடல்களைப் பாடியிருக்கிறாரா?’ என்று பாய்ந்திருக்கிறார் முதல்வர்.

`அ.தி.மு.க-வைத் தவிர வேறு யாரும் எம்.ஜி.ஆரை உரிமை கொண்டாட முடியாது’ என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

இந்த விவகாரம் குறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த பேராசிரியர் அருணனிடம் பேசினோம். ``எம்.ஜி.ஆர்., திராவிட இயக்கத்துக்குச் சொந்தக்காரர். கமல், ரஜினியைப்போல சினிமா வாழ்க்கையின் இறுதிக்கட்டத்தில் அரசியலுக்கு வந்தவர் அல்ல எம்.ஜி.ஆர். 1950-களில் தி.மு.க மேடைகளில் தோன்றி கடைசிவரை அதில் எம்.ஜி.ஆர் இருந்தார். அ.தி.மு.க-வைத் தொடங்குவதற்கு முன்பாக, தி.மு.க-வின் பொருளாளராக இருந்தவர் அவர். அதற்கு முன்பாக எம்.எல்.சி-யாகவும், எம்.எல்.ஏ-வாகவும் அவர் இருந்தார். அந்த மரபுக்கும் இவர்களுக்கும் என்ன சம்பந்தம்?

அருணன்
அருணன்

பா.ஜ.க-வும், ரஜினியும், கமலும் ஒரு விஷயத்தில் ஒற்றுமையாக இருக்கிறார்கள். அதாவது, திராவிடக் கட்சிகள் ஆட்சிக்கு வரக் கூடாது என்று நினைக்கிறார்கள். ஆனால், அந்த திராவிட இயக்கத்தை உருவாக்கிய எம்.ஜி.ஆரைச் சொந்தம் கொண்டாடுகிறார்கள். இது மிகப்பெரிய சித்தாந்தத் தில்லுமுல்லு. ஒருபுறம், திராவிடக் கட்சிகளால்தான் தமிழ்நாடு கெட்டுவிட்டது என்று சொல்கிறார்கள். அந்த நிலைப்பாட்டில் அவர்கள் உறுதியாக இருந்தால், அந்த திராவிடக் கட்சிகளில் ஒன்றை உருவாக்கிய எம்.ஜி.ஆரை அவர்கள் சொந்தம் கொண்டாடக் கூடாது.

எம்.ஜி.ஆருக்குக் கடவுள் நம்பிக்கை உண்டு என்பது உண்மை. ஆனால், அவர் ஒருபோதும் மதவெறிக்கு ஆட்பட்டவர் இல்லை. திரைப்படங்களில் அவரின் நண்பர்களாக கிறிஸ்தவர்களும் இஸ்லாமியர்களும் வருவார்கள். சில பாடல்களில் மத ஒற்றுமையை வலியுறுத்துவது போன்ற காட்சியமைப்புகள் அமைந்திருக்கும். இந்தக் குறியீடுகளை லேசாக எடுத்துக்கொள்ள முடியாது. அவை மக்களுக்கு நல்ல செய்திகளைச் சொல்கின்றன. அரசியலிலும் அப்படித்தான் அவர் இருந்தார். வகுப்புவாத அரசியல், மதவெறி அரசியலை அவர் செய்ததே கிடையாது.

ஆர்.எஸ்.எஸ்., இந்து முன்னணியை எதிர்த்து சட்டமன்றத்தில் அவர் பேசிய பேச்சுகள் ஆதாரபூர்வமாக இருக்கின்றன. பா.ஜ.க-வின் சிந்தனைக்கு எம்.ஜி.ஆர் நேரெதிரானவர். பிறகு எப்படி எம்.ஜி.ஆரை பா.ஜ.க சொந்தம் கொண்டாடுகிறது... வகுப்புவாத அரசியலுக்காக எம்.ஜி.ஆர் படத்தைப் போட்டு யாத்திரை போகிறார்கள். அடிப்படையில் ரஜினியும், கமலும், பா.ஜ.க-வும் செய்வது நேர்மையற்ற செயல்.

கமல்
கமல்

இவர்களெல்லாம் எம்.ஜி.ஆரைத் தூக்கிப் பிடிப்பதற்கு அ.தி.மு.க தரப்பு செய்த தவறு முக்கியக் காரணம். எம்.ஜி.ஆர் மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதா தனது தலைமையை நிலைநாட்டியவுடன், எம்.ஜி.ஆர் பற்றிப் பேசுவதையே அந்தக் கட்சியின் தலைவர்கள் விட்டுவிட்டார்கள். எல்லாமே ஜெயலலிதா என்ற நிலை என்று வந்துவிட்டது. தங்கள் மரபையே மறந்துவிட்டார்கள். அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்பது கட்சிப் பெயராக இருந்தாலும், பெரியாரைப் பற்றியோ, அண்ணாவைப் பற்றியோ ஜெயலலிதா அதிகம் பேச மாட்டார். பிறகு, எம்.ஜி.ஆரைப் பற்றியும் அதிகம் பேசவில்லை.

ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, எடப்பாடி பழனிசாமியோ, பன்னீர்செல்வமோ ஜெயலலிதாவைப் பற்றி மட்டும்தான் பேசுகிறார்கள். எனவே, எம்.ஜி.ஆரை மற்றவர்கள் `ஹைஜாக்’ பண்ணப் பார்க்கிறார்கள். அதைப் பார்த்து அ.தி.மு.க-வினர் புலம்புகிறார்கள். எம்.ஜி.ஆரைக் கையிலெடுத்து அடிமடியில் கைவைக்கிறார்களே என்று அ.தி.மு.க-வினர் அலறுகிறார்கள். இப்போது புலம்பி என்ன பயன்... எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி அ.தி.மு.க-வின் வாக்குகளை ஆளுக்குக் கொஞ்சம் பிய்த்துக்கொண்டு போகப்போகிறார்கள் என்று தெரிகிறது. அ.தி.மு.க-வில் என்ன மிஞ்சப்போகிறது என்பது தேர்தலுக்குப் பிறகு தெரிந்துவிடும்” என்றார் அருணன்.

இது குறித்து மூத்த பத்திரிகையாளர் துரை கருணாவிடம் பேசினோம். ``தமிழக அரசியலில் எம்.ஜி.ஆர் ஒரு தவிர்க்க முடியாத சக்தி என்பது இன்றும் நிரூபிக்கப்பட்டுவருகிறது. எம்.ஜி.ஆர் என்கிற பிம்பம் வலுவாகக் கட்டமைக்கப்பட்டிருக்கிறது. இன்றைய இளைஞர்களுக்கும் எம்.ஜி.ஆர் மீதான ஈர்ப்பு இருக்கிறது. `அன்பே வா' திரைப்படம் தமிழகம் முழுவதும் தற்போது திரையிடப்பட்டிருக்கிறது. கொரோனா தளர்வுகளுக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் திரைப்படங்கள் திரையரங்குகளில் நிறைய திரையிடப்பட்டுள்ளன. அந்தப் படங்களைப் பார்ப்பதற்கு அதிகமான கூட்டம் வருகிறது. அந்த அளவுக்கு மக்கள் சக்தியாக எம்.ஜி.ஆர் இருப்பதால், அவரை எல்லோரும் தூக்கிப்பிடிக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஜெயலலிதா காலத்தில், எம்.ஜி.ஆரின் பெயரையும் புகழையும் மறைக்கக்கூடிய நடவடிக்கைகள் நடைபெற்றன. அந்த ஆதங்கமும் கோபமும் அ.தி.மு.க-வின் எம்.ஜி.ஆர் ரசிகர்களிடம் இருக்கின்றன.

துரை கருணா
துரை கருணா

எம்.ஜி.ஆரை அ.தி.மு.க மட்டுமே உரிமை கொண்டாட முடியாது. ஏனென்றால், அவர் ஒரு தேசியத் தலைவர் ஆகிவிட்டார். அ.தி.மு.க-வை எம்.ஜி.ஆர் தொடங்கியபோதே, அண்ணாவின் மனைவி ராணி அண்ணாதுரையைவைத்து நீதிமன்றத்தில் வழக்கு போட வைத்தார் கருணாநிதி. அண்ணா தொடங்கிய தி.மு.க எங்களிடம் இருக்கும்போது அவரது பெயரில் இன்னொரு கட்சி இருக்கக் கூடாது என்று காரணம் சொன்னார்கள். அதற்கு, `அண்ணா ஒரு மாபெரும் மக்கள் தலைவர். அண்ணா வழியிலிருந்து தி.மு.க திசைமாறியதால்தான் அவரது பெயரில் ஒரு கட்சியை நாங்கள் தொடங்க வேண்டிய வந்தது’ என்று எம்.ஜி.ஆர் கூறினார். எனவே, அண்ணா பெயரைக் கட்சியில் பயன்படுத்த எம்.ஜி.ஆருக்குத் தடையில்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

`சமூகநீதியை ஒழிக்க முயற்சி’... ரஜினி மீது அமைச்சர் சி.வி.சண்முகம் பாய்வது ஏன்?

ஆர்.எம்.வீரப்பன், திருநாவுக்கரசு, எஸ்.டி.சோமசுந்தரம் ஆகியோர் எம்.ஜி.ஆரின் பெயரைப் பயன்படுத்தினார்கள். அதற்கு ஜெயலலிதா எதுவும் சொல்லவில்லை. இவர்களெல்லாம் எம்.ஜி.ஆரால் வளர்க்கப்பட்டவர்கள், எம்.ஜி.ஆரின் கட்சியில் இருந்தவர்கள். ஆனால், எம்.ஜி.ஆர் பெயரை விஜயகாந்த் பயன்படுத்தியபோது, அதை ஜெயலலிதா கடுமையாகக் கண்டித்தார்.

ஜெயலலிதா
ஜெயலலிதா

எம்.ஜி.ஆர் ஒரு தேசியத் தலைவர் ஆகிவிட்டதால், அவரது பெயரை யாரும் பயன்படுத்தக் கூடாது என்று சொல்வதற்கு அ.தி.மு.க-வுக்கு உரிமை இல்லை. வேண்டுமென்றால், நீங்கள் அவரது பெயரை அதிகமாகப் பயன்படுத்துங்கள். எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் மிகப்பெரிய தலைவர்கள். இருவரும் இறந்துவிட்டார்கள். இவர்கள் இருவருக்குமே அ.தி.மு.க சமமான முன்னுரிமை கொடுக்க வேண்டும். அதுதான் நியாயம். அதுதான் அ.தி.மு.க-வுக்கு நல்லது” என்றார் துரை கருணா.

எம்.ஜி.ஆர் பெயரைப் பயன்படுத்தி அ.தி.மு.க-வின் வாக்குகளை அபகரிக்கவும் சிதறடிக்கவுமான முயற்சி ஒருபுறம் நடந்துகொண்டிருக்கிறது. எம்.ஜி.ஆரின் பத்தாண்டு கால ஆட்சி எப்படிப்பட்டதாக இருந்தது என்பது பற்றிய விவாதமும் சத்தமின்றி நடந்துகொண்டிருக்கிறது.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு