Published:Updated:

“இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்ஸை புழல் ஜெயிலில் தள்ளுவேன்!”

‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன்

- ‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன் சீரியஸ்

“இ.பி.எஸ் - ஓ.பி.எஸ்ஸை புழல் ஜெயிலில் தள்ளுவேன்!”

- ‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன் சீரியஸ்

Published:Updated:
‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன்
பிரீமியம் ஸ்டோரி
‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன்
இது தேர்தல் சீஸன்... மழைக்காலத்துக் காளான்களாக, புதிது புதிதான ‘லெட்டர் பேட் கட்சி’களும் காமெடிக் காட்சிகளுமாகத் தேர்தல் களம் கலகலக்கும். இந்த வரிசையில், அண்மையில் ‘டார்ச் லைட்’ சின்னம் பெற்று, அனைவரின் கவனத்தையும் ஈர்த்த ‘எம்.ஜி.ஆர் மக்கள் கட்சி’யின் நிறுவனத் தலைவர் ‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதனை நேரில் சந்தித்துப் பேசினேன்...

“எம்.ஜி.ஆரின் ரசிகர் என்பதால், பெயருக்கு முன்னால் ‘எம்.ஜி.ஆர்’ என்ற அடைமொழியைச் செருகிவிட்டீர்களா?’’

“இப்படித்தான் எல்லோருமே கேட்பார்கள்... விமர்சிப்பார்கள். ஆனால், என் தாத்தா முருகப்பன், பாட்டி கங்கம்மா, அப்பா ரங்கநாதன் ஆகியோரின் பெயர்களின் முதல் எழுத்துகளையே ஒன்று சேர்த்து ‘எம்.ஜி.ஆர்’ என்று போட்டிருக்கிறேன். இது என் மரபுப் பெயர்!’’

“அப்படியென்றால், எம்.ஜி.ஆர் பெயரில் எதற்காகக் கட்சி தொடங்கியிருக்கிறீர்கள்?’’

“என் படிப்புக்குப் பண உதவி செய்து, படித்து முடித்ததும் ஆசிரியர் வேலை வழங்கி, என் திருமணத்தைத் தலைமை தாங்கி நடத்தி வைத்தது வரையிலாக என் வாழ்க்கையின் வழிகாட்டி, கடவுள் எம்.ஜி.ஆர். அவரின் வளர்ப்புத் தொண்டனாகிய(?!) நான், எம்.ஜி.ஆர் ஆட்சியை மீண்டும் அமைப்பதற்காகவே கட்சி தொடங்கினேன்!’’

“எம்.ஜி.ஆர் ஆரம்பித்த கட்சியான அ.தி.மு.க-வின் ஆட்சிதானே தற்போது நடந்துவருகிறது?’’

“எம்.ஜி.ஆருக்குப் பிறகு, அவரது கொள்கை வழியில் ஆட்சியை யாருமே இங்கு நடைமுறைப்படுத்தவில்லை. அதனால்தான் 2016-லேயே ‘அனைத்துலக எம்.ஜி.ஆர் மக்கள் முன்னேற்றக் கழகம்’ தொடங்கி ஜெயலலிதாவை எதிர்த்து ஆர்.கே.நகரில் போட்டியிட முடிவெடுத்தேன். ஆனால், ‘அம்மாவுக்காக விட்டுக்கொடுங்கள்’ என்று அ.தி.மு.க-வினர் கேட்டுக்கொண்டதால், என் முடிவை மாற்றிக்கொண்டு அம்பத்தூர் தொகுதியில் போட்டியிட்டேன்.’’

“டெபாசிட் கிடைத்ததா?’’

“கிடைக்கவில்லை... 166 ஓட்டுகள்தான் கிடைத்தன. அதன் பிறகு, 2017-ல் அதே ஆர்.கே.நகரில் டி.டி.வி. தினகரனை எதிர்த்துப் போட்டியிட்டு, 88 வாக்குகள் கிடைத்தன. சென்னை மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், ‘88 ஓட்டு என்பது 88 லட்சம் வாக்குகளுக்குச் சமம்’ என்று சொல்லி ‘தம்ஸ் அப்’ காட்டி என்னைப் பாராட்டினார். ஆனால், 2019 தேர்தலில் என்னைப் போட்டியிடவிடாமல் சதி செய்துவிட்டனர். எனவே, வருகிற தேர்தலில், 234 தொகுதிகளிலும் எங்கள் கட்சி போட்டியிடும்!’’

“234 தொகுதிகளிலும் போட்டியிடுவதற்கு உங்கள் கட்சியில் வேட்பாளர்கள் இருக்கிறார்களா..?’’

“ஏன் அப்படிக் கேட்கிறீர்கள்... தமிழ்நாடு முழுக்க எங்கள் கட்சிக்கு 60 லட்சத்துக்கும் அதிகமான எண்ணிக்கையில் தொண்டர்கள் இருக்கின்றனர்(!?). இது தவிர, வெளிநாடுகளிலும் எங்கள் ஆதரவாளர்கள் இருக்கிறார்கள். அ.தி.மு.க-விலுள்ள தொண்டர்களிலேயே மூன்றில் ஒரு பங்கினர் எங்களுக்கு ஆதரவாகத்தான் இருக்கின்றனர். எனவே, 234 தொகுதிகளுக்கும் வேட்பாளர்களைத் தயார் செய்துகொண்டிருக்கிறேன்!’’

‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன்
‘எம்.ஜி.ஆர்’ விஸ்வநாதன்

“வேறு கட்சிகளோடு கூட்டணி சேரும் எண்ணமெல்லாம் இல்லையா?’’

“கூட்டணி சேரும் எண்ணமே இல்லை. தேர்தல் வெற்றிக்குப் பிறகு, எம்.ஜி.ஆர் பெயரைச் சொல்லி இதுவரை ஊழல் செய்துவந்திருக்கும் இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இருவரையும் புழல் ஜெயிலுக்குள் தள்ளுவேன்!’’

“இப்படியெல்லாம் நீங்கள் பேசினால், மிரட்டல்கள் வருமே..?’’

“இதுவரை என்னை யாரும் மிரட்டியதில்லை. ‘எம்.ஜி.ஆரோடு நெருங்கிப் பழகியவர்... இவரை ஏன் நாம் எதிர்க்க வேண்டும்’ என்று அமைச்சரில் ஆரம்பித்து இ.பி.எஸ் - ஓ.பி.எஸ் வரை அனைவருமே என்னைக் கண்டு பயந்து ஒதுங்கி நிற்கிறார்கள்!’’

“பயந்துவிட்டார்களா அல்லது ‘இவரையெல்லாம் மிரட்டி என்னவாகப்போகிறது...’ என்று நினைத்துவிட்டார்களா?’’

“அப்படியும் நினைத்திருக்கலாம். மாறாக, என்னைக் கண்டுகொள்வதாகக் காட்டிக் கொண்டால், எங்கே நான் பெரிய ஆளாகி விடுவேனோ என்றும் நினைத்திருக்கலாம்!’’

“அதுசரி... ம.நீ.மய்யத்தின் ‘டார்ச் லைட்’ சின்னத்தை ஏன் நீங்கள் தேர்ந்தெடுத்தீர்கள்?’’

“தேர்தல் பிரசாரத்தின்போது, கையில் எளிதாக எடுத்துச் செல்லக்கூடிய பொருள்களான தொப்பி, கண்ணாடி, சாக்லேட், டார்ச் லைட் மாதிரியான சின்னங்களை நாங்கள் ‘டிக்’ செய்து கொடுத்திருந்தோம். தேர்தல் ஆணையம் எங்களுக்கு ‘டார்ச் லைட்’ சின்னத்தைக் கொடுத்துவிட்டது!’’

“ `டார்ச் லைட் சின்னத்தை யாருக்கும் விட்டுக்கொடுக்க மாட்டேன்’ என்று ஆரம்பத்தில் கூறிவந்த நீங்கள், தற்போது பணம் வாங்கிக்கொண்டு மனம் மாறிவிட்டதாகச் சொல்கிறார்களே..?’’

“கோடி ரூபாய் வரையிலும் நான் கமல்ஹாசனிடம் பணம் வாங்கிவிட்டதாகக்கூடச் சிலர் சொல்லிவருகிறார்கள். கட்சி நடத்துவதற்குப் பணமின்றி நானே தெருக்கோடியில் நிற்கிறேன். ஆரம்பத்தில், டார்ச் லைட் சின்னம் கிடைத்தது சந்தோஷமாகத்தான் இருந்தது. ஆனால், கட்சி நிர்வாகிகள் ‘இது வேறொரு கட்சியின் சின்னம். நமக்கு எம்.ஜி.ஆர் பயன்படுத்திய கண்ணாடி, தொப்பி, டை போன்ற பொருள்களைச் சின்னமாகப் பெற்றுக்கொள்வோம்’ என்று கூறியதன் அடிப்படையிலேயே ‘டார்ச் லைட்’ சின்னத்தைத் தேர்தல் ஆணையத்திடம் ஒப்படைக்கும் முடிவெடுத்து, கடிதம் எழுதியிருக்கிறோம்!’’

“டார்ச் லைட் சின்னத்தைத் திருப்பிக் கொடுக்கும்படி யாரேனும் உங்களை மிரட்டினார்களா?’’

“கமிஷன் தொகை கிடைக்கும் என்ற லாப நோக்கத்தோடு, ‘சின்னத்தைத் திருப்பிக் கொடுத்துவிடுங்கள்’ என்று சிலர் என்னிடம் பேசினார்கள். ஆனால், யாரிடமும் பொருள்களைக் கொடுத்து, அதற்கு ஈடாகப் பணம் வாங்கிக்கொள்ளும் பழக்கம் எனக்குக் கிடையாது. ஏனெனில் நான் எம்.ஜி.ஆரின் உண்மைத் தொண்டன். சின்னத்தைப் பார்த்து யாரும் வாக்களிப்பதில்லை. உதாரணமாக, எம்.ஜி.ஆர் இறந்த பிறகு, இரட்டை இலைச் சின்னமே கடந்த காலத்தில் தோல்வி அடைந்திருக்கிறது. இந்த விவரம்கூட கமல்ஹாசனுக்குத் தெரியவில்லை. அவருக்கு வழிகாட்டவும் சரியான ஆள் இல்லை!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism