Published:Updated:

அ.தி.மு.க யாருக்கு... என்ன சொல்கிறது எம்.ஜி.ஆரின் உயில்?

எம்.ஜி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் உயிரோடிருந்தபோது 28.04.1986-ல் முதலில் ஓர் உயில் எழுதினார். பின்னர் அதை ரத்து செய்துவிட்டு, 18.01.1987-ல் வேறொரு புதிய உயில் எழுதினார்

அ.தி.மு.க யாருக்கு... என்ன சொல்கிறது எம்.ஜி.ஆரின் உயில்?

எம்.ஜி.ஆர் உயிரோடிருந்தபோது 28.04.1986-ல் முதலில் ஓர் உயில் எழுதினார். பின்னர் அதை ரத்து செய்துவிட்டு, 18.01.1987-ல் வேறொரு புதிய உயில் எழுதினார்

Published:Updated:
எம்.ஜி.ஆர்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஜி.ஆர்

எம்.ஜி.ஆர் மறைந்த பின்னர் 1987-லும், ஜெயலலிதா மறைந்த பின்னர் 2017-லும் அ.தி.மு.க பிளவுபட்டது. மூன்றாவது முறையாகப் பிளவை நோக்கி அ.தி.மு.க சென்றுகொண்டிருக்கும் சூழலில், எம்.ஜி.ஆரின் உயிலில் இந்தப் பிரச்னைக்குத் தீர்வு இருப்பதாகச் சொல்கிறார்கள். எம்.ஜி.ஆரின் உயிலில் அப்படி என்னதான் இருக்கிறது?

‘அ.தி.மு.க-வில் பிளவு ஏற்பட்டால், தற்போதிருக்கும் உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் ஆதரவைப்பெற்றவர்கள் தலைமையில் கட்சி வழிநடத்தப்பட வேண்டும்” என்று 1987-ல் அ.தி.மு.க நிறுவனர் எம்.ஜி.ஆர் தனது உயிலில் குறிப்பிட்டிருப்பதை ட்விட்டரில் பதிவிட்டிருக்கிறார் அ.தி.மு.க-விலிருந்து நீக்கப்பட்ட முன்னாள் எம்.பி கே.சி.பழனிசாமி. கூடவே, “இதனடிப்படையில் எம்.ஜி.ஆர் தொண்டர்களால் ஒரு தலைமையைத் தேர்ந்தெடுப்போம்” என்றும் கருத்திட்டிருக்கிறார் அவர்.

அவரிடம் எம்.ஜி.ஆரின் உயில் குறித்துப் பேசினோம். “23 பக்கங்கள்கொண்ட முழுமையான உயில், நீதிமன்றத்தில் இருக்கிறது. அதிலிருந்த முக்கியமான பகுதிகளை மட்டும் உள்ளடக்கிய, நான்கு பக்க உயில் என்னிடம் இருக்கிறது. அதில், ராமாவரம் தோட்டம், அடையாறு சத்யா ஸ்டூடியோ, தி.நகர் நினைவில்லம், சாலிகிராமத்திலுள்ள தோட்டம், ஆலந்தூரிலுள்ள கட்டடம் உள்ளிட்ட அசையும், அசையா சொத்துகளும், விலையுயர்ந்தப் பரிசுப் பொருள்களும் யாருக்குச் சேர வேண்டும், எப்படி நிர்வகிக்கப்பட வேண்டும் என்பது பற்றி விரிவாக அந்த உயிலில் குறிப்பிட்டிருக்கிறார் எம்.ஜி.ஆர்.

கே.சி.பழனிசாமி
கே.சி.பழனிசாமி

அவ்வாறு எழுதப்பட்ட சொத்துகள் தொடர்பாகப் பிற்காலத்தில் பிரச்னை ஏற்பட்டபோது, சிலர் நீதிமன்றத்துக்குச் சென்று, உயில் அடிப்படையில் தீர்ப்பும் பெற்றுவிட்டனர். கட்சி தொடர்பாக உயிலில் எழுதப்பட்டிருப்பது குறித்து யாரும் நீதிமன்றத்துக்குச் செல்லவில்லை. அதனால், நான் நீதிமன்றம் செல்லவிருக்கிறேன். ‘சத்யா படப்பிடிப்பு நிலையக் கட்டடங்கள், அங்கிருக்கும் பொருள்கள் எல்லாவற்றையும் அ.தி.மு.க-வே கைப்பற்றி, நிர்வாகம் செய்து அதில் வரும் வருவாயைக் கட்சிப் பணிக்காக எடுத்துக்கொள்ள வேண்டும். இப்போது கட்சி அங்கத்தினர்களில் குறைந்தபட்சம் 80 சதவிகிதம் பேர் சேர்ந்திருக்க வேண்டும். ஒருக்கால் கட்சி பிளவுபட்டாலோ, கலைக்கப்பட்டாலோ சத்யா படப்பிடிப்பு நிலைய ஷேர்கள், நிர்வாகம் எல்லாம் `என்னுடைய நிறைவேற்றுபவர்கள்’ கைப்பற்றி எம்.ஜி.ஆர் ஊமைகள் இல்ல அறக்கட்டளைச் செலவுகளுக்கு எடுத்துக்கொள்ள வேண்டும்’ என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இதை மேம்போக்காகப் பார்த்தால் சொத்துகள் பற்றிக் குறிப்பிட்டாலும், அந்த உயில் எழுதப்பட்ட காலகட்டத்தில் இருந்த நிர்வாகிகளில் 80 சதவிகிதம் பேர் சேர்ந்து தலைமையைத் தேர்வு செய்திட வேண்டும் என்பதுதான் அர்த்தம் ஆகிறது. உயில் எழுதப்பட்ட காலம் 18.01.1987. நான் 1984 முதல் 1988 வரை எம்.எல்.ஏ-வாக இருந்தேன். செம்மலை, செங்கோட்டையன், வளர்மதி போன்றோரும் இருந்தனர். அப்போது ஓ.பி.எஸ்-ஸோ, இ.பி.எஸ்-ஸோ இல்லை. எதிர்காலத்தில் கட்சிக்குள் பிளவு ஏற்படலாம் என்பதை எம்.ஜி.ஆர் அன்றே யூகித்திருக்கிறார். அவரை நம்பிக் கட்சிக்குள் வந்தவர்கள், அவருக்குப் பின்னால் பொறுப்புக்கு வருபவர்களால் கட்சி பாதிக்கப்படாமல் காப்பாற்றப்பட வேண்டும் என்று நினைத்திருக்கிறார். உதாரணமாக, என்னை எடப்பாடி கட்சியைவிட்டு நீக்கியதாகச் சொல்கிறார் அல்லவா... இப்படி என்னைப் போன்ற தொண்டர்களைப் பாதுகாக்கத்தான் அன்றே எம்.ஜி.ஆர் உயில் எழுதியிருக்கிறார்.

அ.தி.மு.க யாருக்கு... என்ன சொல்கிறது எம்.ஜி.ஆரின் உயில்?

உயில் எழுதப்பட்டபோது எம்.ஜி.ஆருடன் இருந்தவர்களில் இன்று குறைந்தபட்சம் ஒரு லட்சம் பேர் மட்டும்கூட இருக்கட்டுமே... அதிலிருந்து 80 சதவிகிதம் பேரின் ஆதரவோடு ஒருவரைப் பொதுச்செயலாளராகத் தேர்வுசெய்ய எங்களுக்குத் தகுதி இருக்கிறது. ஓட்டுப்போடுவதற்கும், போட்டியிடுவதற்கும் எங்களுக்குத்தான் உரிமையுள்ளது. அதனால், நீதிமன்றத்துக்கு இதை எடுத்துச் சென்று, நானும் பொதுச்செயலாளர் பதவிக்குப் போட்டியிடவிருக்கிறேன்” என்றார்.

எம்.ஜி.ஆர் காலத்திலிருந்து பத்திரிகைத்துறையில் இருந்துவரும் மூத்த பத்திரிகையாளர், அரசியல் விமர்சகர் ‘தராசு’ ஷ்யாமிடம் பேசினோம். “9.1.1988 சனிக்கிழமை எம்.ஜி.ஆர் மறைந்த 16-வது நாள். வி.என்.ஜானகி அம்மையாரின் அழைப்பில் நாங்கள் (பத்திரிகையாளர்கள்) அ.தி.மு.க தலைமைக் கழகத்துக்குச் சென்றோம். அப்போதைய அ.தி.மு.க அவைத்தலைவர் ஈ.வெ.அ.வள்ளிமுத்து, மூத்த துணைப் பொதுச்செயலாளர் ராகவானந்தம், பொருளாளர் மாதவன் உட்பட சில மூத்த நிர்வாகிகள் அமர்ந்திருந்தனர்.

அன்றுதான் எம்.ஜி.ஆரின் வழக்கறிஞரும், நிறைவேற்றுபவருமான என்.சி.ராகவாச்சாரி பத்திரிகையாளர்கள் மத்தியில் உயில் சாசனத்தை வாசித்தார்.

எம்.ஜி.ஆர் உயிரோடிருந்தபோது 28.04.1986-ல் முதலில் ஓர் உயில் எழுதினார். பின்னர் அதை ரத்து செய்துவிட்டு, 18.01.1987-ல் வேறொரு புதிய உயில் எழுதினார். அவர் இரண்டாவது முறையாக மெடிக்கல் செக்கப்புக்காக அமெரிக்கா செல்லவேண்டிய தருணத்தில், தான் நீண்டநாள் வாழப்போவதில்லை என்று அப்போதே அவர் மனம் சொல்லியிருக்க வேண்டும். அதனால்தான் கட்சியின் பிளவு பற்றியும் அவர் சாசனத்தில் சேர்த்திருக்கிறார். எந்தத் தலைவரும் தனது உயில் சாசனத்தில் தன் கட்சி பிளவுபட்டால் என்ன ஆகும் என்றோ, தனது கட்சிப் பராமரிப்புக்குச் சொத்துகளை விட்டுச் செல்கிறேன் என்றோ உயில் எழுதியதாகப் பதிவுகளே இல்லை.

‘தராசு’ ஷ்யாம்
‘தராசு’ ஷ்யாம்

கட்சிக்குள் சர்ச்சையும் பிளவும் முற்றினால் என்ன செய்வது என்று எம்.ஜி.ஆரே தீர்க்க தரிசனத் தீர்வு ஒன்றை 35 வருடங்களுக்கு முன்பே சொல்லியிருக்கிறார் என்பது ஆச்சர்யமே! உயிலை நிறைவேற்றுபவர்கள் இல்லாத காரணத்தால், அதை நிறைவேற்றும் பொறுப்பு, இப்போது சட்டப்படி சென்னை உயர் நீதிமன்றத்திடமே இருக்கிறது. கட்சியின் அடிப்படை உறுப்பினர்களில் 80 சதவிகிதம் பேர் யார் பக்கம் இருக்கிறார்களோ, அவரே கட்சியின் உண்மையான தலைவர். ‘இப்போது’ என்ற வார்த்தை எம்.ஜி.ஆரால் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அந்தக் காலக்கெடு மட்டும்தான் நிர்ணயிக்கப்பட வேண்டும். அதாவது, எந்த ஆண்டு வரையிலான உறுப்பினர்கள் என்ற வரையறை மட்டுமே இப்போது தேவை. அது மட்டுமே நீதிமன்றம் முடிவு செய்யவேண்டிய விஷயம்” என்றார்.

எடப்பாடி பழனிசாமி, அடுத்து எம்.ஜி.ஆரின் உயிலையும் ‘சேலஞ்ச்’ செய்ய வேண்டும்போல!