Published:Updated:

`தழும்பைப் பார்க்கும்போதெல்லாம் சேச்சா ஞாபகம்' - எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக தானம் தந்த லீலாவதி மரணம்!

எம்.ஜி.ஆருடன் லீலாவதி
News
எம்.ஜி.ஆருடன் லீலாவதி

எம்.ஜி.ஆரை வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்.ஜி.ஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது.

மறைந்த முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் அண்ணன் மகளும், எம்.ஜி.ஆருக்குத் தனது சிறுநீரகத்தைத் தானமளித்தவருமான லீலாவதி சென்னையில் நேற்று காலமானார். இக்கட்டான சூழலில் எம்ஜி.ஆரின் உயிரைக் காப்பாற்றியவர் என்று சொல்லப்படும் லீலாவதியின் மறைவுக்கு அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துவருகின்றனர்.

புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்
புரூக்ளின் மருத்துவமனையில் எம்.ஜி.ஆர்

லீலாவதியின் மறைவுக்கு, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி இணைந்து வெளியிட்டுள்ள இரங்கல் அறிக்கையில்,

``எம்.ஜி.ஆரின் மூத்த சகோதரர் எம்.ஜி.சக்கரபாணியின் மகள் லீலாவதி அம்மையார் உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி மரணமடைந்துவிட்டார் என்ற செய்தி கேட்டு ஆற்றொணா துயரமும், மிகுந்த மனவேதனையும் அடைந்தோம். எம்.ஜி.ஆர் 1984-ல் நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் புரூக்ளின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தபோது, அவருக்குத் தன்னுடைய சிறுநீரகத்தை அளித்து, எம்.ஜி.ஆரை வாழவைத்த லீலாவதி அம்மையார் 37 ஆண்டுகள் இப்பூவுலகில் ஒரு சிறுநீரகத்தோடு வாழ்ந்து இன்று இயற்கை எய்தியதை அறிந்த எம்.ஜி.ஆரின் கோடானுகோடி அன்புத் தொண்டர்கள் அனைவரது நெஞ்சங்களும் மிகுந்த வேதனை கொள்கிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

இவர்கள் தவிர, அமமுக பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன், சசிகலா ஆகியோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

இந்த நிலையில் லீலாவதி எம்.ஜி.ஆருக்கு சிறுநீரகம் தானம் அளித்த சூழல் குறித்து சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார், மூத்த பத்திரிகையாளர் தராசு ஷ்யாம்.

``1984-ல் உடல்நிலை சரியில்லாமல் அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார் எம்.ஜி.ஆர். இரண்டு நாள்களில் சரியாகி, டிஸ்சார்ஜ் ஆகிவிடுவார் என்று சொல்லப்பட்டுவந்த நிலையில், உடல்நிலை மோசமாகி உயர் சிகிச்சைக்காக அமெரிக்காவின் புரூக்ளின் மருத்துவமனைக்கு இந்திரா காந்தி ஏற்பாடு செய்துகொடுத்த தனி விமானத்தில் அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவருக்கு சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று மருத்துவர்கள் சொல்லிவிட்டார்கள். எம்.ஜி.ஆர் ரத்த சம்பந்தமுள்ள யாருடைய சிறுநீரகமும் எம்.ஜி.ஆரின் உடலுக்குப் பொருந்திப் போகாத சூழலில், அவரின் அண்ணன் சக்கரபாணியின் மகளான லீலாவதியின் சிறுநீரகம் மட்டுமே பொருந்திப்போனது. உடனே அவர் அமெரிக்காவுக்கு அழைத்துச் செல்லப்பட்டார். அங்கே அவர் தனது சிறுநீரகத்தை எம்.ஜி.ஆருக்கு தானமாக அளித்தார். அதற்குக் கைம்மாறாக அவருக்குப் பல உதவிகளைச் செய்தார் எம்.ஜி.ஆர்.

தராசு ஷ்யாம்
தராசு ஷ்யாம்

அரசியல்ரீதியாகப் பார்த்தால், எம்.ஜி.ஆரின் மறைவுக்குப் பிறகு ஜா அணி, ஜெ அணி என அதிமுக இரண்டாகப் பிளவுபட்டபோது, முதலில் ஜெயலலிதா அணியில் இருந்தார் லீலாவதி. பின்னர், திருநாவுக்கரசர் தலைமையில் பிரிந்த நால்வர் அணிக்குச் சென்று பிறகு மீண்டும் ஜெ அணிக்கே திரும்பினார். எம்.ஜி.ஆர் உயிரைக் காப்பாற்றியவர் என்கிறரீதியில் தனக்குக் கட்சியில் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள் என எதிர்பார்த்தார். ஆனால், 1991-ல் அதிமுக ஆட்சி அமைந்த பிறகு அவருக்குப் பெரிய அளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அதனால், ஜெயலலிதாவை எதிர்த்து மிகக் கடுமையாகப் பேசிவந்தார். 2006 சட்டமன்றத் தேர்தலில் ஆண்டிப்பட்டியில் ஜெயலலிதாவை எதிர்த்து தேர்தலில் நிற்கப்போவதாகவும் அறிவித்தார். பின்னர், வேட்புமனுத் தாக்கல் தேதி முடியும்வரை அதிமுக-வினர் தன்னைக் கடத்தி வைத்திருந்தார்கள் என்கிற பரபரப்புப் புகார் ஒன்றை எழுப்பினார். அதிமுக-வினர் தன்னை மிரட்டுவதாக ஜனாதிபதிவரை புகார் அளித்திருக்கிறார். ஆனால், தற்போது அவரின் மறைவுக்கு அதிமுக சார்பில் இரங்கல் தெரிவித்திருப்பதை நல்ல விஷயமாகப் பார்க்கிறேன்'' என்கிறார் அவர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தன் சித்தப்பா எம்.ஜி.ஆருக்கு சிறுநீரக தானம் செய்தது குறித்து, லீலாவதி ஒரு பேட்டியில்,

``அப்போலோவில் அட்மிட்டாகி இருந்த சேச்சாவுக்கு சர்க்கரை நோய் காரணமா கிட்னி ஃபெயிலியர் ஆகிவிட்டதாகவும் `டிரான்ஸ்ப்ளான்ட்’ பண்றதுக்கு கிட்னி தேவைப்படுறதாகவும் சொன்னாங்க. எங்க குடும்பத்தில் நாங்க எல்லோருமே அவருக்கு கிட்னி கொடுக்குறதுக்கு ரெடியாக இருந்தோம். நான் போறதுக்கு முன்னாலயே, எல்லாருக்கும் டெஸ்ட் பண்ணிப் பார்த்திருக்காங்க. அதில் எங்க சுகுமார் அண்ணனுடையது 98% பொருந்தியிருந்தாலும், அவருக்கும் லேசா சர்க்கரை அறிகுறி இருந்ததால, நிராகரிச்சுட்டாங்க. எனக்கு டெஸ்ட் பண்ணிப் பார்த்து, என்னுடைய கிட்னியைப் பொருத்தலாம்னு சொன்னப்போ எனக்கு ரொம்ப சந்தோஷம். என் கணவரும் மகிழ்ச்சியோடு சம்மதிச்சார். நாங்க 10 பிள்ளைங்கள்ல நான்தான் அவருக்குக் கிட்னி தரப்போறேங்கிறது எனக்குப் பெரிய பெருமையா மட்டுமில்லாம, நன்றிக்கடனாகவும் தோணுச்சு!

ஆனா, இதெல்லாம் சேச்சாவுக்குத் தெரியாது. ஆபரேஷனுக்காக அவரை அப்போலோவிலிருந்து, நியூயார்க் புரூக்ளின் ஹாஸ்பிட்டலுக்கு மாத்தினப்போ... நானும் போனேன். சர்ஜரிக்கு முன்னே என்னை அங்கே பார்த்தப்போ, ‘நீ ஏன் இங்கே வந்திருக்கே... உனக்கு என்ன உடம்புக்கு?’ன்னு சைகையிலேயே கேட்டார். ‘உங்களைப் பார்க்கத்தான்னு சொல்லிச் சமாளிச்சிட்டேன். 30 வருஷம் முன்னால, அது பெரிய மருத்துவ முயற்சி. நல்லபடியா முடிஞ்சது.

லீலாவதி
லீலாவதி

அமெரிக்காவில், ஆபரேஷன் பண்ணின டாக்டர் ஃப்ரீட்மேன் ஏற்பாடு செய்திருந்த ‘கெட் டுகெதர்’ல, ‘உறுப்பு தானம் செய்ததன் மூலமாக, தமிழ்நாட்டு மக்களுக்கு நீங்க ஒரு நல்ல மெசேஜை எடுத்துட்டுப் போறீங்கன்னு அவர் சொன்னதை என்னால மறக்கவே முடியாது. எவ்வளவு பெரிய, சிறந்த செய்தியை நாட்டுக்குச் சொல்ற தூதராகும் வாய்ப்பை கடவுள் எனக்குக் கொடுத்திருக்கார்!

ஆனா, சேச்சாவுக்கு அவர் சென்னைக்கு வந்ததும், பேப்பரில் ‘லீலாவதிக்கு நன்றி!’னு வந்திருந்த விளம்பரங்களைப் பார்த்துட்டுதான், விவரம் தெரியவந்தது. என்னை உடனே வரச்சொன்னார். போனப்போ, கோபத்தின் உச்சியில் அவர் முகம் ஜிவுஜிவுனு சிவப்பு ரோஜா மாதிரி இருந்தது. வீட்டில் யார்கிட்டேயும் பேசலை; சிரிக்கலை. ‘உர்'னு முகத்தை வெச்சுக்கிட்டு இருந்தவர், என்னைப் பார்த்ததும் என் கைகள் ரெண்டையும் பிடிச்சுக்கிட்டு, பேச முடியாம அழுதுட்டார். எனக்கும் கண்ணீர் கொட்டுச்சு. என் உடல்நிலையை விசாரிச்சு, கொஞ்சம் கொஞ்சமாத்தான் சமாதானம் ஆனார். அவருக்குப் பொருத்திய கிட்னி நல்லா வேலை செய்துச்சு. அதுக்கப்புறம் சில வருஷங்கள் நல்லா இருந்தார். அறுவை சிகிச்சை தழும்பைப் பார்க்கும்போதெல்லாம் சேச்சா ஞாபகம் வந்து, இப்பவும் கண் கலங்கறதைத் தவிர்க்க முடியலை. மக்களால் மிக அதிகமாக நேசிக்கப்பட்ட ஒரு மாமனிதருக்கு உறுப்பு தானம் கொடுத்தன் மூலமா, இந்தப் பிறவி எடுத்த பயனை அடைஞ்சுட்டதாகத்தான் நினைக்கிறேன்!’’ எனக் கூறியிருந்தார் லீலாவதி.