Published:Updated:

ஹெலிகாப்டர் விபத்துகள்... அனுபவங்களைப் பகிரும் முன்னாள் அதிகாரிகள்!

பிபின் ராவத் - ராணுவ ஹெலிகாப்டர் விபத்து
News
பிபின் ராவத் - ராணுவ ஹெலிகாப்டர் விபத்து

``சீன நாட்டில் அதிபர் ஹெலிகாப்டர் விமானத்தில் பயணிக்க மாட்டார். அவரின் தனிப்பட்ட விருப்பத்தில் எழுதிய சட்டம் அது! விமானம், கார் அல்லது ரயிலில்தான் பயணிப்பது வழக்கம். அதனால்தான், சென்னை வந்தபோது காரில் பயணித்தாராம் சீன அதிபர்.”

நீலகிரி மாவட்டம், குன்னூர் மலைப்பகுதியில் நாட்டின் முதல் முப்படை தலைமைத் தளபதி பிபின் ராவத், அவரின் மனைவி, ராணுவ வீரர்கள் சென்ற ஹெலிகாப்டர் பயங்கர விபத்தில் சிக்கியது. அந்த விமானத்தில் பயணம் செய்த 13 பேர் பலியானர்கள். வருண்சிங் என்கிற அதிகாரி மட்டும் படுகாயங்களுடன் பெங்களூரு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறார். விபத்து தொடர்பாக விசாரணைகள் ஒருபுறம் நடந்துவருகின்றன.

இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ராணுவ உயரதிகாரிகள் சிலரிடம் அவர்களின் அனுபவங்களைக் கேட்டோம்...

சீன அதிபர் ஜீ ஜின்பிங் சென்னை வந்தபோது, அவர் ஹெலிகாப்டரில் ஏறி மாமல்லபுரம் செல்லவில்லை. காரில்தான் பயணித்தார். அதற்கு முக்கியப் பின்னணி உண்டு.
ஹெலிகாப்டர்
ஹெலிகாப்டர்

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

அது பற்றி விளக்கிச் சொல்கிறார் மதன்குமார், ராணுவ மேஜர் (ஓய்வு).

``காஷ்மீரில் ஜீலம் நதியை வானத்திலிருந்து பார்த்தால், நீளமாகத் தெரியும். அதைப் பார்த்தபடியே, நூல் பிடித்தாற்போல ராணுவ விமானங்களை விமானிகள் ஓட்டிவருவார்கள். அங்கே ஓரிடத்தில் நீர்மின் நிலையம் கட்டினார்கள். அதற்காக, உயர்மின் அழுத்த கோபுரம் அமைத்தார்கள். எனக்குத் தெரிந்து ராணுவ விமானங்கள் இரண்டு முறை அந்த உயர் அழுத்த கம்பியில் உரசி விபத்துக்குள்ளாகின. முதலாவது விபத்தில் விமானம் ஆற்றுக்குள் விழுந்து நொறுங்கியது. விமானி இறந்தார். இரண்டாவது விபத்தில் விமானி பிழைத்துக்கொண்டார்.

இப்படிப் பல சம்பவங்கள் நடந்திருக்கின்றன. இருபது வருடங்களுக்கு முன்பு, ஹெலிகாப்டர்கள் ஒரே இன்ஜினுடன் பறந்து வந்தன. பிறகு, கால ஓட்டத்தில் இரண்டு இன்ஜின்களுடன் பறக்க ஆரம்பித்தன. இந்தியாவின் வி.வி.ஐ.பி-க்கள், வி.ஐ.பி-க்கள் என்று அனைத்துத் தரப்பினரும் எம்.ஐ17 வி5 ரக ஹெலிகாப்டரைப் பயன்படுத்திவருகிறார்கள். யுத்த களத்திலும் வீரர்களை இறக்குவது, மருத்துவ உதவி போன்ற பயன்பாடுகளுக்கு உகந்தவை. அப்படிப் போகும்போது, எதிரிகள் தாக்குதல் நடத்தினால்கூட, அதனால் எந்த பாதிப்பும் அடையாது. உள்ளேயிருந்து வெளியே சுடவும் பிரத்யேக வசதி உண்டு.

ஹெலிகாப்டரை ஓட்டிய விமானி வருண்சிங், தேஜஸ் விமான டெஸ்ட்டிங் பைலட்டாக இருந்தவர். ஒருமுறை அவர் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. மிக சாமர்த்தியமாக விமானத்தை ஓட்டி, அவருக்கும் பாதிப்பில்லாமல், விமானத்தையும் பத்திரமாகத் தரை இறக்கியவர். அதற்காக அவர் விருது பெற்றிருக்கிறார். அப்பேற்பட்டவர், முப்படைத் தளபதி பிபின் ராவத் உள்ளே இருக்கும்போது, எவ்வளவு கவனத்துடன் ஓட்டியிருப்பார் என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!
பிபின் ராவத் உடலுக்கு முதல்வர் ஸ்டாலின் அஞ்சலி!

சிலர் கேட்கிறார்கள்... `ஏன் பைலட் ஹெலிகாப்டர்கள் போகவில்லை?’ என்று! சூலூர் விமான தளத்திலிருந்து பதினைந்து நிமிடங்களில் குன்னூர் வெல்லிங்டன் ராணுவப் பயிற்சி நிலையம் வந்துவிடும். அங்கே போவதும் வருவதும் அடிக்கடி நடக்கிற ஒன்று. எனவே, ஹெலிகாட்டரில் ஏறிய சில நிமிடங்களில் இறங்கவேண்டியதுதான். அதனால்தான், பைலட் ஹெலிகாப்டர்கள் போயிருக்க வாய்ப்பு இல்லை.

`அந்த ஹெலிகாப்டர் பாதுகாப்பானதுதானா?’ என்று கேட்கிறார்கள் இரண்டு இன்ஜின்கள், ரேடார் வசதி இருக்கின்றன. சென்சார் வசதி உண்டு. அதாவது, வானத்தில் பறக்கும்போது வித்தியாசமாக ஏதாவது தென்பட்டால், உள்ளே எச்சரிக்கை செய்யும். எரிபொருள் டாங்க்கைச் சுற்றிலும் ஒருவித பாதுகாப்பு முறை இருப்பதால், எளிதில் தீ பிடிக்காது. ரஷ்ய ஹெலிகாப்டர் என்பதால், அந்த நாட்டு நிபுணர்களும் வந்து விசாரணைக் களத்தில் இறங்குவார்கள். ஏனென்றால், இப்போதே அமெரிக்க மீடியாவில் ரஷ்ய தயாரிப்பு ஹெலிகாப்டர் குன்னூரில் விபத்தில் சிக்கியதைப் பற்றி விமர்சித்து செய்திகள் வர ஆரம்பித்துவிட்டன. உலகத்தில் ரஷ்யாவும் அமெரிக்காவும்தான் ஹெலிகாப்டர் விற்பனைச் சந்தையில் முன்னணி வகிக்கின்றன. அமெரிக்கா தயாரிக்கும் ஹெலிகாப்டருக்கு `பிளாக் ஹாக்’ என்று பெயர். அதி நவீன வசதிகளைக்கொண்டது. மூன்று இன்ஜின்களைக்கொண்டது. அந்த ரக ஹெலிகாப்டரில் பறந்த தைவான் ராணுவத் தலைமைப் பொறுப்பில் இருந்த சென் யி மிங், கடந்த ஆண்டு, ஜனவரி மாதம் பயணம் செய்தபோது, மலைப்பகுதியில் ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கியது. மிங்கும் அவருடன் இருந்த ஏழு பேரும் இறந்தனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அமெரிக்காவின் பிரசித்திபெற்ற எஃப் 16 ரக விமானங்கள் 1995 - 2018 வரையிலான காலகட்டத்தில் ஒரு கோடியே 18 லட்சம் மணி நேரம் பறந்திருக்கின்றன. 337 தடவைகள் விபத்துக்குள்ளாகின. நமது நாட்டில் வி5 ரக ஹெலிகாப்டர்கள் 2013-ல் பயன்பாட்டுக்கு வந்தன. ஏழு தடவை விபத்தைச் சந்தித்திருக்கின்றன. 2013-ல் உத்தரகாண்ட் மாநில வெள்ள மீட்புப்பணியின்போது விபத்தில் சிக்கியது. சுமார் 20 பேர் இறந்தனர். அந்த ஒரு சம்பவத்துக்குப் பிறகு, இப்போதுதான் பெரிய விபத்தைச் சந்தித்திருக்கிறது. உத்தரகாண்டில் சுமார் 19,000 மக்களைக் காப்பாற்றியதில் பெரும் பங்காற்றியது வி5 ரக ஹெலிகாப்டர்கள்.

சீன அதிபர் ஜி ஜின் பிங்
சீன அதிபர் ஜி ஜின் பிங்

சீன நாட்டில் அதிபர் ஹெலிகாப்டர் விமானத்தில் பயணிக்க மாட்டார். அவரின் தனிப்பட்ட விருப்பத்தில் எழுதிய சட்டம் அது! விமானம், கார் அல்லது ரயிலில்தான் பயணிப்பது வழக்கம். அதனால்தான், சென்னை வந்தபோது காரில் பயணித்தாராம் சீன அதிபர். குன்னூர் சம்பவத்துக்குப் பிறகு இந்திய அரசுத் தரப்பில் தற்போதுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளில் மாற்றம் கொண்டுவர வாய்ப்பு உண்டு. மூன்று இன்ஜின்களுடன்கூடிய ஹெலிகாப்டரில் வி.வி.ஐ.பி-க்கள் பறக்க வேண்டும். மலைப்பிரதேசங்களுக்கு அவர்கள் போக வேண்டுமென்றால், தரை மார்க்கமாக காரில் பயணிக்க வேண்டும். இது மாதிரியான புதுச் சட்டங்களை அமல்படுத்தும் நேரம் வந்துவிட்டது என்று நினைக்கிறேன்'' என்கிறார்.

``தைவான் நாட்டு ராணுவத் தளபதி சென் யு மிங்-கோடு, எனக்கு நல்ல அறிமுகம் உண்டு. ஒரு ஹெலிகாப்டர் விபத்தில் அவர் திடீரென இறந்தார் என்றபோது அதிர்ந்துபோனேன்
மாதேஸ்வரன், டெபுடி சீஃப் ஏர் மார்ஷல்(ஒய்வு)

டெபுடி சீஃப் ஏர் மார்ஷல் (ஓய்வு) மாதேஸ்வரன், ராணுவப் போர் விமானங்களை ஓட்டியவர். டெஸ்ட் பைலட் ஆகவும் செயல்பட்டவர். சுமார் 3,200 மணி நேரம் வானில் விமானத்தை ஓட்டிய அனுபவம் உள்ளவர்.

அவர் தொடர்ந்து பேசுகையில், ``விமான விபத்து ஏற்படுவது என்பது எதிர்பாராதது. உலகின் பல நாடுகளில் வி.வி.ஐ.பி-க்கள் பயணித்த பல விமானங்கள் விபத்தில் சிக்கியிருக்கின்றன. உதாரணத்துக்கு, 2010-ல் ரஷ்யாவில் நடக்கவிருந்த முக்கியக் கூட்டத்தில் கலந்துகொள்ள போலந்து நாட்டு ஜனாதிபதி, உயரதிகாரிகள் விமானத்தில் பயணித்தனர். ரஷ்யாவிலுள்ள ஸ்மோல் நெக் (Smol Neck) என்கிற இடத்தருகே விமானம் பறந்தபோது, திடீரென அந்த விமானம் விபத்தில் சிக்கியது. அதில், ஜனாதிபதி உட்பட 95 பேர் இறந்தனர்.

மாதேஸ்வரன், டெபுடி சீஃப் ஏர் மார்ஷல் (ஓய்வு)
மாதேஸ்வரன், டெபுடி சீஃப் ஏர் மார்ஷல் (ஓய்வு)

இந்திய பிரதமராக மொரார்ஜி தேசாய் இருந்தபோது அஸ்ஸாம் மாநிலத்துக்கு டெல்லியிலிருந்து சென்றார். அவர் பயணித்தது வி.ஐ.பி-கள் பயணிக்கும் ஸ்பெஷல் விமானம். திடீர் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக அந்த விமானம் விபத்துக்குள்ளானது. தரையில் மோதி இரண்டாக உடைந்தது. முன்பக்கத்தில் இருந்த விமானி உட்பட பலர் இறந்தனர். பின்பக்கம் இருந்தவர்கள் நல்லவேளையாகக் காயங்களோடு உயிர்பிழைத்தனர். அவர்களில் பிரதமர் மொரார்ஜி தேசாயும் ஒருவர். அடுத்து, மத்திய அரசின் ராணுவத்துறையின் இணை அமைச்சராக இருந்த தி.மு.கழகத்தை சேர்ந்த என்.வி.என்.சோமு, அலுவல் விஷயமாக விமானப்படை விமானத்தில் அருணாச்சலப்பிரதேசம் சென்றார். தவாங்கு என்கிற இடத்தில் அவர் சென்ற விமானம் விபத்தில் சிக்கியதில் அமைச்சர் என்.வி.என்.சோமு இறந்தார்.

சில வருடங்களுக்கு முன்பு, தைவான் நாட்டின் விமானப்படைத் தலைவராக சென் யு மிங் இருந்தார். நானும் அவரும் அமெரிக்காவில் ஹார்வேர்டு பல்கலைக்கழகத்தில் ஒன்றாக ஃபெலோ ஷிப் கோர்ஸ் படித்தோம். 2018-ல் அவர் விமானப்படைத் தலைவராக அவர் இருந்தபோது, நான் தைவானுக்கு விசிட் போயிருந்தேன். அப்போது இருவரும் சந்தித்தோம். விமானப்படைத் தொழில்நுட்பங்கள் பற்றி இருவரும் பகிர்ந்துகொண்டோம். அவருடன் பழகிய அந்த நாள்களை மறக்கவே முடியாது. 2020-ம் ஆண்டு, ஜனவரியில் அவர் அந்த நாட்டின் ராணுவ முப்படைத் தலைமைப் பொறுப்பில் இருந்தார். ஏதோ அலுவல் விஷயமாக பிளாக் ஹாக் ரக ஹெலிகாப்டரில் அவர் பயணித்தபோது, மலைப்பகுதியில் எதிர்பாராத விபத்தில் சிக்கி இறந்துபோனார். அவருடன் பயணித்த ஏழு பேரும் இறந்தனர். அந்தக் கோரச் சம்பவத்தைப் பற்றி நான் கேள்விப்பட்டபோது, அதிர்ந்துபோனேன். அந்த ஹெலிகாப்டர் அதிநவீன வசதிகளைக்கொண்டது. பொதுவாகவே, ராணுவ விமான விபத்துகள் எப்படி நடக்கின்றன... சீதோஷ்ண நிலைப்பாடு மலைப் பகுதியில் உள்ள வான் பரப்பில் அடிக்கடி மாறிக்கொண்டேயிருக்கும். அதைத் தவிர, சில சமயங்களில் தொழில்நுட்பக் கோளாறுகளும், விமானிகளின் நடவடிக்கைகளும்கூட விபத்துகளுக்குக் காரணமாக அமைகின்றன. இதனால், விலைமதிப்பற்ற உயிரிழப்புகளும், பொருள் சேதங்களும் ஏற்படுகின்றன. விபத்துகளின் பின்னணியை ஆராய்ந்து, எதிர்காலத்தில் விபத்துகள் நடக்காமல் இருக்க உரிய நடவடிக்கைகள் எடுப்பது வழக்கம். குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து நடந்த இடத்தில் பிளாக் பாக்ஸ் கண்டெடுக்கப்பட்டிருக்கிறது. அதை ஆராய்ந்த பிறகுதான் உண்மையான காரணம் தெரியவரும். அதுவரை விபத்து பற்றிய தேவையற்ற யூகங்களைத் தவிர்க்க வேண்டும். விபத்து பற்றி விசாரணை நடத்திவரும் குழுவினர், எதனால் விபத்து ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடிப்பார்கள. அதுவரை அனைவரும் பொறுமையாகக் காத்திருக்க வேண்டும். குன்னூர் விமான விபத்தில் படுகாயமடைந்த வருண் சிங், சீனியர் விமானி. திறமையானவர். நல்ல பயிற்சிபெற்றவர். அவர் நலமுடன் உடல்நலம் தேறி வர வேண்டும் என்பதே என் போன்றவர்களின் பிராத்தனை'' என்கிறார்.

``என் நண்பர்களை நான் இழந்த சோகங்கள் நடந்தது...’’ என்று ஆரம்பிக்கிறார்... கணேசன், கர்னல் (ஓய்வு)

``தரைப்படையில் அப்போது நான் பணியில் இருந்த காலகட்டம். இங்கே இருக்கும் உயரதிகாரிகள், இந்திய ராணுவத்திலுள்ள ஹெலிகாப்டர் பைலட் ஆகப் போவார்கள். அப்படித்தான், என்னுடைய சக தோழர் கேப்டன் சக்கரவர்த்தி பயிற்சி எடுத்துக்கொண்டிருந்தார். ஒருநாள், நானும் அவரும் நாசிக் நகரில் உள்ள அதிகாரிகளுக்கான ராணுவ மெஸ்ஸில் சாப்பிட்டுக்கொண்டிருந்தோம். 'இன்றைய தினத்துக்கான கடைசி ரவுண்ட் பயிற்சி முடித்துவிட்டு வருகிறேன். நீங்கள் இங்கேயே காத்திருங்கள்' என்று சொல்லிவிட்டு அவசரமாகக் கிளம்பிப்போனார் சக்கரவர்த்தி.

கணேசன், கர்னல் (ஓய்வு)
கணேசன், கர்னல் (ஓய்வு)

நானும் காத்திருந்துவிட்டு வீட்டுக்குக் கிளம்பினேன். கொஞ்ச நேரத்தில், அவர் ஓட்டிய பயிற்சி ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய தகவல் வந்தது. அப்போது, அவரின் மனைவி கர்ப்பவதியாக இருந்தார். கடைசி நேரத்தில் அவருடன் இருந்த நினைவுகள் எனக்கு மறக்க முடியாதவை. அடுத்து, இன்னொருவர் கேப்டன் புனித் கரோல். பயிற்சி முடித்துவிட்டு, உத்தரகாண்டில் ராணுவ பைலட் ஆகப் பணியில் இருந்தார். அவர் ஓட்டிய ஹெலிகாப்டர் ஒருநாள் மலைப்பகுதியில் மோதி விபத்துக்குள்ளானது. அதில் சிக்கி அவரும் இறந்துபோனார். அவருக்கு இளம்வயதில் மனைவி இருந்தார். அவரின் குடும்பச் சூழ்நிலையை நினைத்து வேதனைப்பட்டேன்.

இன்னொரு நண்பர், கடற்படையில் விமானம் ஓட்டும் பயிற்சியில் இருந்தார். அவருடைய பயிற்சி விமானம் கோவாவில் திடீர் விபத்தில் சிக்கி, அவரும் இறந்துபோனார். என்னைச் சுற்றியிருந்தவர்களில் இந்த மூவரின் மரணச் சம்பவங்கள் என் மனதை மிகவும் பாதித்துவிட்டன. இந்த நண்பரின் மனைவி, தற்போது கடற்படையில் அதிகாரியாகப் பணியாற்றிவருகிறார். அரசுக்குச் சொந்தமான ஒரு நிறுவனத்தைச் சேர்ந்த ஹெலிகாப்டர் ஒன்று அருணாசலப் பிரதேசம் தவாங்கு என்கிற இடத்தில் 2011-ல் ஹெலிபேடில் இறக்கும்போது விபத்து ஏற்பட்டு, அதில் 19 பேர் இறந்தனர். இதேபோலவே, 2011-லிருந்து இதுவரை பல்வேறு இடங்களில் அந்த நிறுவனத்துக்குச் சொந்தமான ஹெலிகாப்டர்கள் விபத்தில் சிக்கியதில் 55 பேர் இறந்துள்ளனர். பொதுவாக, வானில் பறக்கும் ஹெலிகாப்டர்களில் தொழில்நுட்பக் கோளாறுகள் திடீர் திடீரென ஏற்பட்டுவிடுகின்றன. எவ்வளவுதான் பராமரிப்பு இருந்தாலும், இதையெல்லாம் முற்றிலுமாகத் தவிர்க்க முடியாது. எதிர்பாராதது. அப்படி ஒரு தொழில்நுட்பக் கோளாறு ஏற்படுகிற சூழ்நிலையில், கிராஸ் லேண்டிங் செய்யவேண்டிய அவசரநிலை வரும். அவ்வாறு கிராஸ் லேண்டிங் செய்யும்போது, ஹெலிகாப்டர் விபத்தில் சிக்குவதால், அதில் உள்ளவர்களுக்கு படுகாயம் ஏற்பட வாய்ப்பு உண்டு. அந்த மாதிரி நேரத்தில், பயிற்சிபெற்ற விமானி ஒவ்வொருவரும் ஹெலிகாப்டரையும், அதில் பயணிப்பவரையும் காப்பாற்றுவதற்காகக் கடைசி நொடி வரை முயற்சி செய்வார்கள்'' என்றார்.