Published:Updated:

``வரைமுறை இன்றி கொள்ளையடிக்க வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது திமுக" - கனிமவள கொள்ளை குறித்து அண்ணாமலை

அண்ணாமலை

``கொள்ளையடிப்பதற்காக, வாக்களித்த மக்களையெல்லாம் வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்திய சாதனையை மட்டும்தான் ஆளும் தி.மு.க அரசு செய்திருக்கிறது." - அண்ணாமலை

``வரைமுறை இன்றி கொள்ளையடிக்க வாக்களித்த மக்களை வஞ்சிக்கிறது திமுக" - கனிமவள கொள்ளை குறித்து அண்ணாமலை

``கொள்ளையடிப்பதற்காக, வாக்களித்த மக்களையெல்லாம் வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்திய சாதனையை மட்டும்தான் ஆளும் தி.மு.க அரசு செய்திருக்கிறது." - அண்ணாமலை

Published:Updated:
அண்ணாமலை

``கனிம வளங்கள் கொள்ளையடிக்கப்படுகின்றன. அதற்கு உடனடியாக நடவடிக்கை எட்டப்படாவிட்டால், பா.ஜ.க-வின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்’’ என பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலை எச்சரித்திருக்கிறார். இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், "தமிழகத்தில் ஆற்று மணல், கடல் மணல், மலைகள், பாறைகள், என்று மண்ணுக்கடியில் இருக்கும் கனிம வளங்கள் பல்லாயிரக்கணக்கான லாரிகளில், தமிழகத்தில் களவுபோகின்றன. அண்டை மாநிலங்களுக்கு மிக அதிக அளவில் கனிம வளங்கள் கடத்தப்படுகின்றன.

கனிம வளக் கடத்தல்.
கனிம வளக் கடத்தல்.

முறையான அனுமதி பெறாமல் ஆற்றுப்படுகைகளில் மணல் அள்ளுவதும், மலைகளையும், பாறைகளையும், குன்றுகளையும் குடைந்து கல்குவாரி அமைத்து, தமிழகத்தின் கனிம வளத்தைக் கொள்ளையடிப்பதும், தற்போதைய தி.மு.க ஆட்சியில் எல்லைமீறிப் போய்க்கொண்டிருக்கிறது. இதற்குச் சாட்சியாக கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை வட்டம், கொரட்டகிரி கிராமத்தைச் சேர்ந்த மக்கள் தங்கள் குழந்தைகள் ஆடு மாடுகளுடன் கிராமத்தைவிட்டே வெளியேறி ஓசூர் தேன்கனிக்கோட்டை சாலையில் கொட்டும் மழையில் தமிழகத்தின் கனிம வளங்களைக் கொள்ளையடிக்கும் லாரிகளைச் சிறைப் பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதை மீட்கும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு, பொதுமக்களைத் தாக்கியுள்ளனர். அனுமதி பெறாமல் தனியார் சிலர் கொரட்டகிரி கிராமத்துக்கு அருகிலுள்ள மலையை உடைத்து அந்தக் குவாரியிலிருந்து ஜல்லி எம் சாண்ட் போன்றவற்றை கனரக லாரிகள் மூலம் கொண்டுசெல்வதால் சாலைகள் முற்றிலுமாகச் சேதமடைந்துவிட்டன. கிராமத்தில் விவசாயம் செய்யக்கூட முடியவில்லை என்று கூறி அந்தக் கிராமத்தைச் சேர்ந்த மக்கள், வீடுகளைவிட்டு குழந்தை, ஆடு மாடுகளுடன் கிராமத்தைவிட்டு வெளியேறி, சார் ஆட்சியாளர் அலுவலகத்திலேயே குடியிருக்கப்போவதாகக் கூறி போராட்டம் நடத்த, நெடுஞ்சாலைக்கு வந்தனர்.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

வரைமுறை இல்லாமல் கொள்ளையடிப்பதற்காக, வாக்களித்த மக்களையெல்லாம் வஞ்சித்து நடுத்தெருவில் நிறுத்திய சாதனையை மட்டும்தான் ஆளும் தி.மு.க அரசு செய்திருக்கிறது. சாலையில் போராடிய மக்களைச் சந்தித்த எஸ்.பி சரத்குமார் இரண்டு நாள்களில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று சமாதானம் கூறி மக்களைத் திருப்பி அனுப்பிவைத்தார்.

ஆனால் ஜல்லி, எம் சாண்ட் போன்ற கனிம வளக் கொள்ளை நிற்கவில்லை. காவல்துறையோ அல்லது சார் ஆட்சியரோ அல்லது மாவட்ட ஆட்சியரோ எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆளுங்கட்சியின் நல்லாசியுடன், அடிக்கவேண்டிய கொள்ளை, ஆசிபெற்ற நபர்களால், அடிக்கப்பட்டுக்கொண்டிருக்கிறது. உறங்கக்கூட நேரமில்லாமல் இரவும் பகலும் பலமான வெடிச் சத்தங்கள் கேட்டுக்கொண்டிருக்கின்றன. வீடுகள் விரிசல் அடைந்துவிட்டன. சில வீடுகள் இடிந்துவிட்டன.

ஸ்டாலின் - அண்ணாமலை
ஸ்டாலின் - அண்ணாமலை

இப்படிப்பட்ட அவலச் சூழலில், மக்கள் வாழ முடியாத நிலை ஏற்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்து மீண்டும் கிராம மக்கள் தங்கள் வீடுகளைக் காலி செய்துவிட்டு, வனப்பகுதியில் தற்காலிகமாக டென்ட் அமைத்து தங்கியுள்ளனர். பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான உணவு மற்றும் உதவிகளை கிருஷ்ணகிரி மேற்கு மாவட்டத்தைச் சேர்ந்த சேர்ந்த பா.ஜ.க-வினர் செய்துவருகிறார்கள்.

அண்டை மாநிலங்களெல்லாம் தங்கள் ஆறுகளையும். மலைகளையும், மண்ணுக்கடியில் உள்ள கனிம வளங்களையும் கண்ணும் கருத்துமாகக் காப்பாற்றிக்கொண்டிருக்கும்போது, சுற்றுச்சூழல் பற்றிய சிந்தனை இல்லாமல், தமிழகத்தில் கனிம வளக் கொள்ளை தொடர்ந்து நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. இதை பா.ஜ.க வேடிக்கை பார்த்துக்கொண்டிருக்காது.

அண்ணாமலை
அண்ணாமலை

மக்களுக்காகத்தான் ஆட்சியாளர்கள் இருக்க வேண்டுமே தவிர ஆட்சியாளர்களுக்காக மக்கள் இருக்கக் கூடாது. ஆகவே, தமிழக அரசு கனிம வளக் கொள்ளையைத் தடுத்து நிறுத்திட, கொரட்டகிரி மக்கள் தங்கள் வாழ்விடங்களுக்கு மீண்டும் திரும்பும் வண்ணம் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக்கொள்கிறேன். ஓரிரு நாள்களில் நல்ல முடிவு எட்டப்படாவிட்டால் பா.ஜ.க-வின் சார்பில் மிகப்பெரிய போராட்டம் முன்னெடுக்கப்படும்" எனக் குறிப்பிட்டிருக்கிறார்.