அரசியல்
அலசல்
சமூகம்
Published:Updated:

ஜனார்த்தன ரெட்டியின் புதுக்கட்சி! - ஆபரேஷன் ‘கல்யாண கர்நாடகா’...

ஜனார்த்தன ரெட்டி
பிரீமியம் ஸ்டோரி
News
ஜனார்த்தன ரெட்டி

மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தாளும் அரசியலுக்கு எதிராகப் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறேன். எங்கள் கட்சி, 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும்

கர்நாடக அரசியலில், கடந்த 20 வருடங்களாக பா.ஜ.க-வின் அனைத்து வியூகங்களிலும் உடனிருந்து உதவிய சுரங்க அதிபர் ஜனார்த்தன ரெட்டி புதிய கட்சி தொடங்கியிருப்பது, அந்த மாநில அரசியல் கட்சிகளுக்குக் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கிறது!

சுரங்கத் தொழிலில் மாபெரும் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கியிருக்கும் ஜனார்த்தன ரெட்டி, காங்கிரஸின் கோட்டையாக இருந்த கர்நாடகாவில், ‘ஆபரேஷன் லோட்டஸ்’ வியூகம் வகுத்து, பா.ஜ.க-வை ஆட்சி அரியணையில் ஏற்றியதில் முக்கியப் பங்கு வகித்தவர். குறிப்பாக, ஜனார்த்தன ரெட்டி சகோதரர்களின் வரவுக்குப் பிறகுதான் கர்நாடகத் தேர்தலில் அதீத பணப்புழக்கமும் அறிமுகமானது. இப்படி அரசியலில் தவிர்க்க முடியாத நபராக மாறிய ஜனார்த்தன ரெட்டியை, பா.ஜ.க-வும் தலையில் தூக்கிவைத்துக் கொண்டாடியது.

ஜனார்த்தன ரெட்டி
ஜனார்த்தன ரெட்டி

இந்த நிலையில், கர்நாடகத்தில் நடந்த மாபெரும் சுரங்க ஊழல், நிதி மோசடி வழக்குகளில் கைதாகி சிறைக்குச் சென்ற பிறகு, ரெட்டியின் செல்வாக்கு தலைகீழாகச் சரிந்துபோனது. ‘பா.ஜ.க-வின் ஊழல் அடையாளம் ஜனார்த்தன ரெட்டி’ என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டத் தொடங்கியதும், பசவராஜ் பொம்மையில் தொடங்கி அமித் ஷா வரையிலான கட்சியின் முக்கியத் தலைவர்களும் ஜனார்த்தன ரெட்டியுடனான உறவை முறித்துக்கொண்டனர்.

2018-ல் சிறைவாசம் முடிந்து வெளியே வந்த ஜனார்த்தன ரெட்டி, பா.ஜ.க–வுடனான தனது நட்பைக் கொஞ்சம் கொஞ்சமாக விலக்கிக் கொண்டார். இந்த நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு ‘கல்யாண ராஜ்ய பிரகாதி பக்‌ஷா’ என்ற தனிக்கட்சியையும் தடாலடியாகத் தொடங்கிவிட்டார். மேலும், ‘‘மதம் மற்றும் சாதியின் பெயரால் பிரித்தாளும் அரசியலுக்கு எதிராகப் புதிய கட்சியைத் தொடங்கியிருக்கிறேன். எங்கள் கட்சி, 2023 சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடும்’’ என பா.ஜ.க-வுக்கு நேரடி மிரட்டல் விடுத்திருக்கிறார்.

அமித் ஷா, பசவராஜ் பொம்மை
அமித் ஷா, பசவராஜ் பொம்மை

ஜனார்த்தன ரெட்டியின் புதுக்கட்சி, கர்நாடகா அரசியலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும் என்பது குறித்துப் பேசும் அரசியல் விமர்சகர்கள், ‘‘ஜனார்த்தன ரெட்டியின் சமூகம் முற்றிலும் ஆந்திராவைப் பூர்வீகமாகக்கொண்டது. ‘கல்யாண கர்நாடகா’ என்றழைக்கப்படும் பெல்லாரி, பிதார், யாத்கிர், காலபுராகி, கோப்பல், ராய்ச்சூர், விஜயநகரா ஆகிய ஏழு மாவட்டங்களில் இந்தச் சமூக மக்கள் பெருவாரியாக உள்ளனர். இதன் மூலம் தன் சொந்தச் சமூகத்திலுள்ள பா.ஜ.க-வின் அதிருப்தி வாக்குகளை அறுவடை செய்வார் ஜனார்த்தன ரெட்டி. மேலும், சிறுபான்மை மற்றும் பழங்குடியினர் வாக்குகளைக் கவரும் வகையில் ஜனார்த்தன ரெட்டியின் மனைவி இப்போதே களமிறங்கிவிட்டார். எனவே, புதுக்கட்சி தொடங்கி தன்னை பா.ஜ.க-வுக்கு எதிரானவராகக் காட்டிக்கொண்டாலும் ஜனார்த்தன ரெட்டி பா.ஜ.க-வின் ‘பி’ டீமாக இருக்கவும் வாய்ப்பிருக்கிறது” என்கின்றனர்.

‘கல்யாண கர்நாடகா’வில் வாக்காளர் அடையாள அட்டை வைத்திருப்போருக்கு இந்தத் தேர்தலில் ‘அதிர்ஷ்டமழை’தான்!