Published:Updated:

`எங்களுக்கு பாராட்டு தேவையில்லை; ப்ளஸ் டூ தேர்வு நிச்சயம் நடக்கும்!’ - அமைச்சர் அன்பில் மகேஷ்

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

``மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்" என்கிறார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

"அனைத்து மாணவர்களும் தேர்ச்சி என அறிவித்தால். மாணவர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷத்தைக் கொடுக்கலாம்; ஆட்சியாளர்களைப் பாராட்டலாம். அந்தப் பாராட்டுகளும் ஆதரவும் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களுடைய எதிர்காலம்தான் எங்களுக்கு முக்கியம். கண்டிப்பாக பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வுகள் நடக்கும். இதில் எந்த மாற்றமும் இல்லை" என்று கூறுகிறார் பள்ளிகல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ்.

அன்பில் மகேஷ்,கே.என்.நேரு
அன்பில் மகேஷ்,கே.என்.நேரு

சட்டமன்றத் தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும்விதமாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொறுப்பேற்றதும், கொரோனா நிவாரணத் தொகை வழங்குதல், உள்ளூர் பேருந்துகளில் பெண்கள் இலவசப் பயணம் உள்ளிட்ட ஐந்து முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டார். அதன்படி 2.7 கோடி அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பயன்படும் வகையில் கொரோனா பாதிப்பு நிவாரண உதவிகளின் முதல் தவணையாக 2,000 ரூபாய் வழங்கப்படுகிறது. தமிழகம் முழுவதும் நிவாரண உதவித்தொகைகளை விநியோகித்துவருகிறார்கள்.

இந்தநிலையில், கொரோனா நிவாரண உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி வரகனேரி நியாயவிலைக் கடைகளில் தொடங்கிவைத்து, குடும்ப அட்டைதாரர்களுக்கு 2,000 ரூபாய் நிவாரண உதவித்தொகையை வழங்கினார்.

நிவாரண உதவித்தொகை வழங்கும் அன்பில் மகேஷ்
நிவாரண உதவித்தொகை வழங்கும் அன்பில் மகேஷ்

பின்பு பத்திரிகையாளர்களிடம் பேசுகையில், ``முதல்வர் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளைப் படிப்படியாக நிறைவேற்றிக்கொண்டிருக்கிறார். அந்தவகையில் கொரோனா நிவாரணம் முதல் தவணை வழங்கும் பணியை தற்போது தொடங்கியிருக்கிறோம். இரண்டாவது தவணையும் முழுமையாக வழங்கப்படும். இதில் எந்த மாற்றமும் இல்லை” என்றார்.

பொதுத்தேர்வு குறித்து பத்திரிகையாளர்கள் கேள்வி எழுப்பியதற்கு, ``பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு கண்டிப்பாக நடைபெறும். இது குறித்து பெற்றோர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கல்வித்துறை அதிகாரிகள் உள்ளிட்ட பலரிடமும் வீடியோ கான்ஃபரன்ஸிங் மூலம் கருத்துக்கேட்பு தொடர்ந்து நடைபெற்றுவருகிறது. அனைவருமே பன்னிரண்டாம் வகுப்புத் தேர்வு நிச்சயம் நடத்த வேண்டும் என்ற கருத்தைப் பதிவு செய்கிறார்கள்.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இன்றைய நிலையில் தேர்வு என்பது அவசியம் எனக் கருதப்படுகிறது. ஆனால், கொரோனா தொற்று தாக்கத்தின் விளைவாக இனி வரும் காலங்களில் எப்படியிருக்கும் என்பதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவுகளில் மாற்றம் ஏற்படலாம். ஆனால் நிச்சயம் பன்னிரண்டாம் வகுப்புக்கான தேர்வு நடத்துவதில் உறுதியாக இருக்கிறோம்.

ஏனென்றால், பன்னிரண்டாம் வகுப்பு முடித்த பிறகு கல்லூரிக்குள் நுழையும்போது மாணவ, மாணவிகள் எந்தத் துறையைத் தேர்ந்தெடுப்பார்கள் என்பது மிக முக்கியமானதாகவும், அவசியமானதாகவும் இருக்கிறது. அவர்களது வாழ்க்கையின் அடுத்தகட்டத்துக்குச் செல்வதற்கு பன்னிரண்டாம் வகுப்பு தேர்வுதான் முக்கியமான ஒன்று.

அன்பில் மகேஷ்
அன்பில் மகேஷ்

இங்கு நல்ல தேர்ச்சி பெற்றால் அண்ணா பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கான வாய்ப்புகள் கிடைக்கும். ஒருவேளை அனைவரும் தேர்ச்சி என அரசு அறிவித்தால் அந்த அறிவிப்பு மாணவர்களுக்கு வேண்டுமானால் சந்தோஷத்தைக் கொடுக்கலாம்; ஆட்சியாளர்களைப் பாராட்டலாம். அந்தப் பாராட்டுகள் எங்களுக்குத் தேவையில்லை. அவர்களுடைய எதிர்காலமே எங்களுக்கு ரொம்ப முக்கியம். தேர்வு நடத்தி அதன் மூலம் நல்ல மதிப்பெண்களைப் பெற்று, மாணவர்கள் கல்லூரிகளில் சேர்ந்து, நல்ல கல்வியைப் பெற வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கம்" என்றார்.

அடுத்த கட்டுரைக்கு