Published:Updated:

சுற்றுலா மாளிகை பணியாளரைத் தாக்கிய விவகாரம்; அனிதா ராதாகிருஷ்ணனின் ஆதரவாளர் பில்லா ஜெகன் கைது!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் பில்லா ஜெகன் கைது!
அனிதா ராதாகிருஷ்ணன் ஆதரவாளர் பில்லா ஜெகன் கைது!

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் உதவியாளர் டிராஃபிக் போலீஸை கன்னத்தில் அறைந்த சம்பவத்தின் அதிர்வலைகள் அடங்குவதற்குள், அவரின் ஆதரவாளரான பில்லா ஜெகன் சுற்றுலா மாளிகை பணியாளரைக் கல்லால் அடித்து, கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது

தமிழக மீன்வளம் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளரும், தெற்கு மாவட்ட தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான பில்லா ஜெகன் உட்பட ஆறு பேர் சேர்ந்து, தூத்துக்குடி பழைய விருந்தினர் மாளிகையில் தற்காலிகப் பணியாளரைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்திருக்கும் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.

அனிதா ராதகிருஷ்ணனுடன் பில்லா ஜெகன்
அனிதா ராதகிருஷ்ணனுடன் பில்லா ஜெகன்

தூத்துக்குடி, தெற்கு பீச் ரோட்டில் தமிழக அரசின் சுற்றுலா மாளிகை அமைந்திருக்கிறது. இந்தக் கட்டடம், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான ஒருநபர் விசாரணை ஆணைய அலுவலகமாகச் செயல்பட்டுவருகிறது. இங்கு தற்காலிகப் பணியாளராக சதாம் சேட் என்பவர் பணிபுரிந்துவருகிறார். கடந்த 4-ம் தேதி மாலையில் லைட் போடுவதற்காகச் சுற்றுலா மாளிகைக்குச் சென்றிருக்கிறார் சதாம் சேட்.

அப்போது, அங்கு பில்லா ஜெகன் தனது டொயோட்டா ஃபார்ச்சுனர் காரை நிறுத்திவிட்டு, ஆதரவாளர்களுடன் மது அருந்திக்கொண்டிருந்திருக்கிறார். அப்போது, ஜெகனுக்கு துப்பாக்கி ஏந்திய போலீஸ் ஒருவரும் பாதுகாப்புப் பணியிலிருந்திருக்கிறார். அதைக் கண்ட சதாம்சேட், ``இங்கெல்லாம் மது அருந்தக் கூடாது. இது விசாரணை ஆணைய அலுவலகம்” என்றிருக்கிறார். அதைக் கேட்டு ஆத்திரமடைந்த பில்லா ஜெகன், ``கதவைத் திறக்க முடியுமா... முடியாதா? இங்கு நான்தான் நீதிபதி. கதவைத் திற” என மிரட்டியதாகக் கூறப்படுகிறது. அதற்கு சதாம் சேட் மறுக்கவே, பில்லா ஜெகனும், அவரின் ஆதரவாளர்கள் ஐந்து பேரும் சேர்ந்து அவரைக் கீழே தள்ளி கற்களை வீசியும், காலால் மிதித்தும் தாக்கியிருக்கின்றனர்.

சிகிச்சை பெற்றுவரும் சதாம் சேட்
சிகிச்சை பெற்றுவரும் சதாம் சேட்

அப்போது பாதுகாப்புப் பணியிலிருந்த துப்பாக்கி ஏந்திய போலீஸார், சதாம் சேட் கத்திக் கூச்சலிடவே கொலை மிரட்டல் விடுத்துவிட்டு அங்கிருந்து சென்றதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவத்தில் காயமடைந்த சதாம் சேட், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தொடர்ந்து, இந்தச் சம்பவம் தொடர்பாக சதாம் சேட் தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், 147, 148, 452, 294(பி), 332, 324, 506(11), 510 ஆகிய பிரிவுகளின் கீழ் பில்லா ஜெகன் உட்பட ஆறு பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு கைதுசெயயப்பட்டனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இந்த நிலையில், பில்லா ஜெகனுக்கு வழங்கிய போலீஸ் பாதுகாப்பு விலக்கிக்கொள்ளப்பட்டது. அத்துடன், கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தும் பில்லா ஜெகன் நீக்கம் செய்யப்பட்டிருக்கிறார். பில்லா ஜெகனைப் பற்றி தி.மு.க வட்டாரத்தில் விசாரித்தோம், ``தூத்துக்குடியிலுள்ள சின்ன கடைத்தெருதான் பில்லா ஜெகனோட ஏரியா. இவர், தூத்துக்குடி மாவட்ட விஜய் ரசிகர் மன்றத்தின் தலைவராகவும் இருக்கிறார்.

பில்லா ஜெகன் - அனிதா ராதாகிருஷ்ணன்
பில்லா ஜெகன் - அனிதா ராதாகிருஷ்ணன்

ஆரம்பத்துல தி.மு.க-வின் இளைஞரணியிலிருந்து வந்த இவர், மறைந்த முன்னாள் மாவட்டச் செயலாளர் என்.பெரியசாமியின் தீவிர ஆதரவாளராக இருந்தார். பின்னர், இருவருக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் கடந்த சில ஆண்டுகளாக, திருச்செந்தூர் தொகுதியின் எம்.எல்.ஏ-வும், மீன்வளம் மற்றும் கால்நடைப் பராமரிப்புத்துறையின் அமைச்சருமான அனிதா ராதாகிருஷ்ணனின் தீவிர ஆதரவாளராக இருந்துவருகிறார்.

அமைச்சரை தூக்கிச் சென்ற மீனவர்! - தண்ணீரில் கால்வைக்கத் தயங்கினாரா அனிதா ராதாகிருஷ்ணன்?

பில்லா ஜெகனின் மகளை ஒருதலைப்பட்சமாக காதலித்த இளைஞரை நிர்வாணமாக்கி, ஆண் குறியைத் துண்டித்து கொலை செய்த வழக்கு, சொத்துப் பிரச்னையில் தன் உடன் பிறந்த தம்பியைத் துப்பாக்கியால் சூட்டுக் கொலை செய்த வழக்கு என பல்வேறு கொலை, கொலை முயற்சி வழக்குகள் இவர்மீது இருக்கின்றன. இதனால், கடந்த 2019 ஏப்ரலில் அவரை கட்சியிலிருந்து நீக்கி தலைமை நடவடிக்கை எடுத்தது.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்
அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன்

பின்னர், அனிதா ராதாகிருஷ்ணனின் முயற்சியால் தெற்கு மாவட்ட தி.மு.க-வின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் ஆனார். கடந்த சட்டமன்றத் தேர்தலில் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாக வேலை செய்துவந்தார். அப்போது, திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட அ.தி.மு.க வேட்பாளரான கே.ஆர்.எம்.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவாகச் செயல்பட்ட விஜய் மக்கள் இயக்கத்தைச் சேர்ந்தவர்களை பில்லா ஜெகன் மிரட்டினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.

இது தொடர்பாக பனங்காட்டு மக்கள் கழகத்தின் தலைவரான சுபாஷ் பண்ணையார், பில்லா ஜெகனை போனில் அழைத்து எச்சரித்தார். இருவருமே ஒருவருக்கு ஒருவர் கொலை மிரட்டல் விடுத்தனர். இருவரும் பேசிய ஆடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த நிலையில், சுபாஷ் பண்ணையாரால் தனது உயிருக்கு ஆபத்து இருக்கிறது. எனவே தனக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என மாவட்ட எஸ்.பி-யிடம் மனு அளித்தார் பில்லா ஜெகன். அனிதா ராதாகிருஷ்ணனின் பரிந்துரையால் பில்லா ஜெகனுக்கு துப்பாக்கி ஏந்திய ஒரு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது. பின்னர், அனிதா ராதாகிருஷ்ணன் அமைச்சர் ஆனவுடன், பில்லா ஜெகனின் ஆட்டம் அதிகமானது” என்றனர்.

தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகை
தூத்துக்குடி அரசு சுற்றுலா மாளிகை

ஏற்கெனவே டிராஃபிக் போலீஸை அனிதாவின் உதவியாளர் கிருபாகரன் கன்னத்தில் அறைந்த சம்பவத்தால் அமைச்சருக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டது. இந்த நிலையில், அவரின் ஆதரவாளர் பில்லா ஜெகன், அரசு விருந்தினர் மாளிகையில், அதுவும் ஒரு நபர் ஆணையத்தில் பணியாற்றியவரைத் தாக்கியிருக்கும் சம்பவம் அவருக்கு மேலும் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு