Published:Updated:

`ராஜேந்திர பாலாஜி பாஜக-வுக்குச் சென்றாலும் விட மாட்டோம்!' - அமைச்சர் நாசர் காட்டம்

முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியின் பாஜக பிரவேசம் குறித்த கேள்விக்கு, 'பாஜக-வுக்கு போய்விட்டால் மட்டும் விட்டுவிடுவோமா என்ன?' என்று காட்டமாக பதிலளித்திருக்கிறார் தற்போதைய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் நேற்று திருவள்ளூரில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்துவைத்து, நேரடி நெல் கொள்முதல் பணியையும் தொடங்கிவைத்தார். இந்த நிகழ்வின்போது திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ், மாவட்ட வருவாய் அலுவலர் மீனா பிரியதர்ஷினி, திருவள்ளூர் சட்டமன்ற உறுப்பினர் வி.ஜி.ராஜேந்திரன் ஆகியோர் உடனிருந்தனர்.

நெல் கொள்முதல் நிலையத்தைத் திறந்து வைத்துவிட்டு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர், ``திருவள்ளூர் மாவட்டத்தில் ஒரு லட்சம் ஹெக்டேர் பரப்பளவில் சம்பா நெல் பயிரிடப்படுகிறது. அந்த நெல் முறையான வகையில், இடைத்தரகர்கள் இன்றி விவசாயிகளிடமிருந்து கூட்டுறவுத்துறை மூலம் கொள்முதல் செய்யப்பட்டு, விவசாயிகளுக்கு உரிய விலை வழங்கப்படுகிறது.

நாசர்
நாசர்

முந்தைய அதிமுக ஆட்சியில், மாவட்டத்தில் 12 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் மட்டுமே இருந்தன. தற்போது 46 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் உள்ளன. இவற்றை 62-ஆக உயர்த்த அரசுத் தரப்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது. 62 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் வாயிலாக சுமார் 70 ஆயிரம் மெட்ரிக் டன் நெல்லைப் பெற முடியும். நெல் கொள்முதல் தொடர்பாகப் புகார் ஏதும் இருப்பின் விவசாயிகள் கட்டணமில்லா தொலைபேசி எண் 18005997626, வாட்ஸ்அப் எண் 9840327626 ஆகிய எண்களில் தொடர்புகொண்டு தங்கள் குறைகள் மற்றும் புகார்களைத் தெரிவிக்கலாம்" என்றார்.

தொடர்ந்து, பத்திரிகையாளர்கள் ராஜேந்திர பாலாஜி பா.ஜ.க-வில் இணையவிருப்பதாகத் தகவல்கள் வெளியாகிக்கொண்டிருப்பதைக் குறிப்பிட்டு கேள்வி எழுப்ப அமைச்சர் நாசர், ``தற்போதைய தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆட்சியில் எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோது, அதிமுக அரசின் பல அமைச்சர்கள் மீது ஆளுநரிடம் புகார் அளித்திருந்தார். அதனடிப்படையில், தற்போது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றன. எனவே, முன்னாள் அதிமுக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தண்டிக்கப்படுவது உறுதி. அவர் பா.ஜ.க-வுக்குச் சென்று விட்டால் மட்டும் விட்டுவிடுவோமா!" என்று காட்டமாக பதில் கூறிவிட்டு நகர்ந்தார்.

நாசர், ராஜேந்திர பாலாஜி
நாசர், ராஜேந்திர பாலாஜி

அமைச்சர் நாசரின் இந்தப் பேச்சு முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தரப்பைக் கலக்கத்தில் ஆழ்த்தியிருப்பதாக அதிமுக-வினர் முணுமுணுத்துவருகின்றனர்.

`சொத்துக்குவிப்பு வழக்கு டு ஆவின் முறைகேடு... இறுகும் பிடி!' - பாஜக-வில் இணைகிறாரா ராஜேந்திர பாலாஜி?
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு