Published:Updated:

அமைச்சர் சக்கரபாணியிடமிருந்து TNCSC பதவி பறிப்பு! - பின்னணி என்ன?

சக்கரபாணி

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு, அமைச்சர் சக்கரபாணியிடமிருந்து அதிரடியாகப் பறிக்கப்பட்டிருக்கிறது.

அமைச்சர் சக்கரபாணியிடமிருந்து TNCSC பதவி பறிப்பு! - பின்னணி என்ன?

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் பொறுப்பு, அமைச்சர் சக்கரபாணியிடமிருந்து அதிரடியாகப் பறிக்கப்பட்டிருக்கிறது.

Published:Updated:
சக்கரபாணி

பொதுமக்களுக்குத் தேவையான உணவுப் பொருள்களை ரேஷன் கடைகள் மூலம் விநியோகம் செய்வதற்காக தமிழ்நாடு உணவுத்துறையின் கீழ் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் (Tamil Nadu Civil Supplies Corporation) செயல்பட்டுவருகிறது. இந்தக் கழகம், அரிசி கோதுமை, பருப்பு போன்ற பொருள்களை டெண்டர் மூலம் கொள்முதல் செய்து, தமிழ்நாடு அரசு சேமிப்புக் கிடங்கிகளில் சேமித்துவைக்கும்.

ரேஷன் கடை
ரேஷன் கடை

பின்னர் கொள்முதல் செய்த உணவுப் பொருள்களை பொது விநியோகத் திட்டத்துக்கு நியாயவிலைக் கடைகளுக்கு அனுப்பிவைக்கும். யார் ஆட்சிக்கு வந்தாலும், ரேஷன் கடைகளில் தரமற்ற பொருள்கள் வழங்கப்பட்டுதான்வருகின்றன என்ற குற்றச்சாட்டு நீண்ட நாள்களாகவே இருந்துவருகிறது.

தி.மு.க ஆட்சிக்கு வந்த பின்னர், பொங்கல் பரிசுத்தொகுப்பு தரமற்றதாக வழங்கியதாகக் குற்றச்சாட்டு எழுந்தது. உருகி வழிந்த வெல்லம், தரமற்ற கரும்பு, வண்டுகள் மொய்த்த அரிசி, தரமற்ற புளி, கலப்படம் செய்யப்பட்ட மிளகு என வழங்கப்பட்ட அனைத்துப் பொருள்களின் மீதும் புகார்கள் எழுந்தன. பொங்கல் பரிசுத்தொகுப்பில் சந்தை விலையைவிடக் கூடுதல் விலைக்குப் பொருள்கள் கொள்முதல் செய்யப்பட்டதாகவும், தரமற்ற பொருள்கள் விநியோகம் செய்யப்பட்டதாகவும் அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இந்தப் புகார்களைத் தொடர்ந்து, கடந்த ஜனவரி 21-ம் தேதி, துறைரீதியிலான ஆய்வுக் கூட்டத்தை நடத்திய முதல்வர் ஸ்டாலின், “இந்தப் புகார்களுக்குக் காரணமான அலுவலர்கள்மீது நடவடிக்கை எடுப்பதோடு, தரமற்ற பொருள்களை வழங்கிய நிறுவனங்கள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்படும்” என்றும் அறிவித்தார். அதன்படி, தரமில்லாத 12 பொருள்களை வழங்கிய ஐந்து நிறுவனங்களுக்கு சுமார் 7.04 கோடி அபராதம் விதிக்கப்பட்டது. ஆனாலும், அதே நிறுவனங்களிடமிருந்து ரேஷன் கடைகளுக்கு பருப்பு, பாமாயில் கொள்முதல் செய்யப்பட்டிருப்பதை 'ஜூனியர் விகடன்' ஆதாரத்துடன் அம்பலப்படுத்தியிருந்தது.

இந்த நிலையில்தான், உணவு வழங்கலில் முக்கியப் பங்கு வகிக்கும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் (டி.என்.சி.எஸ்.சி) தலைவர் பொறுப்பு அமைச்சர் சக்கரபாணியிடமிருந்து பறிக்கப்பட்டிருக்கிறது.

இது தொடர்பாக உணவுத்துறை அதிகாரிகள் சிலர் நம்மிடம் பேசுகையில், " டி.என்.சி.எஸ்.சி தலைவராகக் கடந்த 2014 வரை கூட்டுறவு, உணவுத்துறை செயலர்தான் இருந்துவந்தனர். பின்னர், உணவு வழங்கல் தொடர்பாக கொள்கைரீதியாக அரசு சில முடிவுகளை எடுக்க இந்தப் பதவி தடையாக இருப்பதாகக் கருதிய அ.தி.மு.க அரசு, பொறுப்பை செயலரிடமிருந்து, அமைச்சருக்கு வழங்கியது.

முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி
முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சக்கரபாணி

அதன்படி, அப்போதைய அமைச்சராக இருந்த ஆர்.காமராஜ்தான் டி.என்.சி.எஸ்.சி தலைவராக இருந்தார். தி.மு.க ஆட்சிக்கு வந்த பிறகும் இந்த நடைமுறை மாற்றப்படவில்லை. அதன்படி, துறை அமைச்சர் சக்கரபாணி தலைவராக இருந்தார்.

ஆனால், பொங்கல் பரிசுத்தொகுப்பில் தரமற்ற பொருள்கள் வழங்கிய நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க முதல்வர் உத்தரவிட்டும், எந்தப் பணியும் நடைபெறவில்லை எனக் கூறப்படுகிறது. குறிப்பிட்ட நிறுவனங்களைக் கறுப்புப் பட்டியலில் சேர்க்க சில இடையூறுகள் இருந்ததாகவும் அமைச்சர் சக்கரபாணி மேலிடத்தில் புகார் அளித்திருந்தார்.

ராதாகிருஷ்ணன்
ராதாகிருஷ்ணன்

இந்த நிலையில்தான் பழைய நடைமுறையே இருக்கட்டும் என்று தலைமை முடிவெடுத்து, பிரச்னையைத் தள்ளிப்போடலாமென்று, டி.என்.சி.எஸ்.சி தலைவர் பொறுப்பை அமைச்சரிடமிருந்து துறைச் செயலர் ராதாகிருஷ்ணனுக்கு மாற்றி தமிழக அரசு உத்தரவிட்டது" என்றனர் விரிவாக.

டி.என்.சி.எஸ்.சி தலைவர் பொறுப்பு என்பது நியமன பொறுப்பு என்பதால், அதைக் கட்சிக்காரர் யாருக்காவது கொடுக்கலாமா என்றும் திமுக தலைமை யோசித்துவருவதாகவும் கூறப்படுகிறது. எனினும், ஜெயலலிதா மரணம் தொடர்பான விசாரணை ஆணையத்தின் அறிக்கையால் சிக்கியிருக்கும் உணவுத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணனுக்கு தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தலைவர் என்ற கூடுதல் பொறுப்பை வழங்கியிருக்கிறது அரசு என்பது குறிப்பிடத்தக்கது.