Published:Updated:

ஒன் பை டூ: எப்படி இருந்தது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர்?

அர.சக்கரபாணி, கே.பி.முனுசாமி
பிரீமியம் ஸ்டோரி
அர.சக்கரபாணி, கே.பி.முனுசாமி

சாக்குப்போக்குச் சொல்லும் கூட்டத்தொடராக முதல் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது.

ஒன் பை டூ: எப்படி இருந்தது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர்?

சாக்குப்போக்குச் சொல்லும் கூட்டத்தொடராக முதல் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது.

Published:Updated:
அர.சக்கரபாணி, கே.பி.முனுசாமி
பிரீமியம் ஸ்டோரி
அர.சக்கரபாணி, கே.பி.முனுசாமி

அர.சக்கரபாணி, உணவுத்துறை அமைச்சர், தி.மு.க.

“கடந்த காலங்களில் ஆளுங்கட்சியினர் புகழ்ந்து பேசுவதை முதலமைச்சர்கள் வரவேற்பார்கள். ஆனால், முதல்வர் ஸ்டாலின் கேள்வி நேரத்தின்போதும், பதிலுரையின்போதும் ‘என்னைப் புகழ்வதைத் தவிருங்கள்’ என்று இரண்டு, மூன்று முறை எழுந்து நின்று சொன்னார். இதன் மூலம், பல மணி நேரம் ஆக்கபூர்வமாக பயன்படுத்தப்பட்டிருக்கிறது. தந்தை பெரியார் பிறந்தநாளை சமூகநீதி நாளாக அறிவித்தது, பாரதியார் பிறந்தநாளை மகாகவி நாளாக அறிவித்தது, வ.உ.சி-யின் 150-வது பிறந்தநாளை முன்னிட்டு பல்வேறு திட்டங்களை அறிவித்தது என மறைந்த தலைவர்களைப் போற்றும் வகையில் அறிவிப்புகளை வெளியிட்டார் முதல்வர். தேர்தல் நேரத்தில் சொன்ன 505 வாக்குறுதிகளில் கணிசமானவை முதல் கூட்டத்தொடரிலேயே அறிவிக்கப்பட்டுள்ளன. `தமிழகத்தில் புதிதாக 21 கல்லூரிகள் தொடங்கப்படும்’ என்று அறிவித்தது வரலாற்று சாதனை. அதிலும், எப்போதும் இல்லாத வகையில், அறநிலையத்துறையின் சார்பிலேயே பத்து கல்லூரிகள் தொடங்கப்படும் என அறிவித்தது அனைத்துத் தரப்பினரின் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. நீட் தேர்விலிருந்து நிரந்தர விலக்கு பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. அதுமட்டுமல்ல... ஒவ்வொரு துறையிலும் சீர்திருத்தங்களைச் செய்வதற்கான அறிவிப்புகளையும் துறை அமைச்சர்கள் வெளியிட்டுள்ளார்கள். மொத்தத்தில் ஜனநாயகமாகவும் ஆக்கபூர்வமாகவும் நடந்து முடிந்திருக்கிறது இந்தக் கூட்டத்தொடர்!’’

ஒன் பை டூ: எப்படி இருந்தது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர்?
ஒன் பை டூ: எப்படி இருந்தது சட்டமன்ற முதல் கூட்டத்தொடர்?

கே.பி.முனுசாமி, எம்.எல்.ஏ., அ.தி.மு.க

“என்னவென்று சொல்வது... சாக்குப்போக்குச் சொல்லும் கூட்டத்தொடராக முதல் கூட்டத்தொடர் நடந்து முடிந்திருக்கிறது. எந்தவிதமான புதிய திட்டங்களையும் கொண்டுவரவில்லை. கடந்த அ.தி.மு.க ஆட்சியிலிருந்த திட்டங்கள்தான் அப்படியே தொடர்கின்றன. தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளிலும் பால் விலைக் குறைப்பு, கொரோனா நிதியாக 4,000 ரூபாய் என ஒன்றிரண்டு வாக்குறுதிகளைத்தான் நிறைவேற்றியிருக்கிறார்கள். சட்டமன்றத்தில், நாங்கள் கேட்ட பல கேள்விகளுக்கு அவர்களால் பதிலே சொல்ல முடியவில்லை. ‘நீங்கள் வாக்குறுதி கொடுத்தபடி பெட்ரோல், டீசல் விலையைக் ஏன் குறைக்கவில்லை?’ என்று கேட்டால், நீட்டி முழக்கி காரணங்களை அடுக்கினார் நிதியமைச்சர். அவர் சொல்லும் காரணங்களெல்லாம் ஏற்கெனவே எதிர்க்கட்சியாக இருந்தபோது அவர்களுக்குத் தெரிந்ததுதான். பல கேள்விகளுக்கு முதலமைச்சரால் நேரடியாக பதில் சொல்ல முடியவில்லை... நிதியமைச்சரை வைத்துத்தான் பதில் சொன்னார். கூட்டுறவு நகைக்கடன் தள்ளுபடியில்கூட யாருக்கு தகுதி இருக்கிறதோ அவர்களுக்குத் தள்ளுபடி செய்திருக்கலாமே, ஏன் காலம் கடத்திக்கொண்டிருக்கிறார்கள் என்று தெரியவில்லை. பெண்களின் உரிமைத்தொகையாக 1,000 ரூபாய் வழங்கப்படும் என்று தேர்தல் நேரத்தில் அறிவித்துவிட்டு, அதற்கும் ஒரு காரணத்தைத் தேடிக் கண்டுபிடித்திருக்கிறார்கள். மொத்தத்தில் தேர்தல் நேரத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையில் பூசி மெழுகினார்கள் அவ்வளவுதான்.’’