Election bannerElection banner
Published:Updated:

`தினகரனிடமிருந்து உங்களைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்!’ - சசிகலாவுக்கு சி.வி.சண்முகம் அட்வைஸ்

அமைச்சர்  சி.வி.சண்முகம்
அமைச்சர் சி.வி.சண்முகம்

`பச்சைத் துண்டு போட்டவரெல்லாம் விவசாயி கிடையாது. கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து, விவசாயி என வேஷம் போட்டவர்தான் ஸ்டாலின். இவருக்கு, விவசாயம், விவசாயி படும் கஷ்டங்களெல்லாம் தெரியாது” என்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

விழுப்புரத்தில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் சி.வி.சண்முகம், தி.மு.க தலைவர் ஸ்டாலின், அ.ம.மு.க தினகரன், சசிகலா ஆகியோரை விமர்சித்தார். செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``தமிழக முதல்வர் பழனிசாமி, குக்கிராமத்தில் பிறந்து, அரசுப் பள்ளியில் பயின்று, விவசாயத்தைத் தொழிலாகச் செய்து வாழ்ந்தவர். முதல்வராக இருந்தாலும், பல பணிச்சுமை இருந்தாலும், மாதம் ஒரு முறை தனது கிராமத்துக்குச் சென்று விவசாயத்தைப் பார்க்கும், உண்மையான விவசாயி அவர்.

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

இவர், விவசாயிபோல் எளிமையாகவே தற்போதும் வாழ்ந்துகொண்டிருக்கிறார். பச்சைத்துண்டு போட்டவரெல்லாம் விவசாயி கிடையாது. கரும்புத் தோட்டத்தில் கான்கிரீட் போட்டு நடந்து, விவசாயி என வேஷம் போட்டவர்தான் ஸ்டாலின். இவருக்கு, விவசாயம், விவசாயி படும் கஷ்டங்களெல்லாம் தெரியாது. ஸ்டாலின், பழனிசாமி இருவரையும் பார்த்தாலே நடை, உடை, பாவனை, செயல்பாடுகள் மூலமே மக்களுக்கு, யார் விவசாயி, யார் கார்ப்பரேட் அம்பானி பிள்ளை என்பது நன்றாகத் தெரியும். ஸ்டாலின் கூறுவதை யாரும் நம்புவதற்குத் தயாராக இல்லை.

ஸ்டாலின் சட்டமன்ற உறுப்பினராகவும், மேயராகவும், துணை முதல்வர், அமைச்சர் பொறுப்புகளில் இருந்து செய்ய முடியாத, சாதிக்க முடியாததையெல்லாம் இன்று எதிர்கட்சியாக இருந்துகொண்டு செய்வேன் என கூறுகிறார். சட்டமன்றம் என்பது மக்களுடைய தொகுதி சார்ந்த பிரச்னைகள், நாட்டு மக்கள் பிரச்னைகளை எடுத்துரைக்கும் இடம். அங்கு, மக்களின் பிரச்னைகளுக்கு, விவசாயப் பிரச்னைகளுக்குப் பொய்யான கண்ணீர் வடிக்கும் ஸ்டாலின், சட்டமன்றத்தில் தனது குரல் மூலம் மக்களிடம் இதுவரை பெற்ற மனுக்களைப் பற்றி எதுவும் கூறவில்லை. சட்டமன்றத்தில் பேசத் தகுதியில்லாதவர் ஸ்டாலின். ஆளுநர், பிரச்னையைக் கூறுங்கள் எனக் கூறியும், சட்டமன்றத்தில் எடுத்துக் கூற முடியாதவர் அவர்” என்றார்.

சசிகலா , தினகரன்
சசிகலா , தினகரன்

தொடர்ந்து பேசியவர், ``சசிகலா அ.தி.மு.க கொடியைக் கட்டிக்கொண்டு தமிழகத்துக்குள் காரில் வந்த சம்பவத்தில், சட்டம் நிச்சயம் தனது கடமையைச் செய்யும். சசிகலாவுக்கு ஓர் எச்சரிக்கையாகவே சொல்கிறேன். முதலில் நீங்கள், உங்களை தினகரனிடமிருந்து காப்பாற்றிக்கொள்ளுங்கள். ஸ்லீப்பர் செல் எனக் கூறும் தினகரனுக்கு, நாங்கள் ஓப்பன் செல்லே வைத்திருக்கிறோம்.

தினகரனிடமிருந்து சசிகலா மற்றும் அவரது குடும்பத்தைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள். தினகரனை நம்பித்தான் சசிகலா, இந்தக் கட்சி, ஆட்சி என எல்லாவற்றையும் ஒப்படைத்துவிட்டுச் சென்றார். ஒரே மாதத்தில் உடைத்தார் தினகரன். முதலில் இவர்கள் குடும்பத்தில் ஒற்றுமையைக் காப்பாற்றிக்கொள்ளுங்கள்.

அ.தி.மு.க., ஒன்றரைக் கோடி தொண்டர்களின் உழைப்பு, ரத்தத்தில் உருவானது. இதில், சசிகலா மற்றும் அவர் குடும்பத்துக்கு இடமில்லை. எந்தக் காலத்திலும், எந்தச் சூழலிலும் சசிகலா குடும்பத்துக்கு அ.தி.மு.க அடிமையாக இருக்காது” என்றார்.

சிவகங்கை: `சசிகலா ஒரு காலாவதியான மாத்திரை!’ - வைகைச்செல்வன் விமர்சனம்
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு