Published:Updated:

`விஜயகாந்த் மட்டும் நன்றாக இருந்திருந்தால்..!' - விக்கிரவாண்டியில் உருகிய சி.வி.சண்முகம்

8 ஆண்டுக்காலம் ஆட்சியில் அமர்ந்திருக்கிறோம் என்றால் அதற்குத் தே.மு.தி.க தொண்டர்களான உங்கள் உழைப்புதான் காரணம் என்கிறார் அமைச்சர் சி.வி.சண்முகம்.

Minister C.V.Shanmugam
Minister C.V.Shanmugam

விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டித் தொகுதியில் நடந்த தே.மு.தி.க செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்துகொண்டார் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம். அப்போது பேசிய அவர், ``நவம்பர் மாதம் முதல் வாரத்துக்குள்ளாகவே உள்ளாட்சித் தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட இருக்கிறது. அதை அறிவித்தே ஆக வேண்டும். நான் நினைத்தாலும், முதல்வரே நினைத்தாலும், கடவுளே வந்தாலும் உள்ளாட்சித் தேர்தலை நிறுத்தி வைக்க முடியாது. நடத்தியே ஆக வேண்டும், நடத்தப்படும்.

dmdk Meeting
dmdk Meeting

பா.ம.க, தே.மு.தி.க உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுக்கு நான் சொல்வது என்னவென்றால், தலைவர்களாகிய நாம் எம்.எல்.ஏ, எம்.பி என்று கூட்டணியில் நின்று வெற்றிபெற்றுவிட்டு சென்றுவிடுகிறோம். ஆனால், நம்மை இந்தப் பதவிகளில் அமரவைத்து அழகு பார்க்கும் அந்தத் தொண்டனுக்கு நாம் என்ன கொடுத்திருக்கிறோம்... என்ன செய்திருக்கிறோம்... அவர்களின் தேவைகளுக்கு நாம் எதையாவது செய்திருக்கிறோமா?

அந்த நேரத்தில்தான் ஏதாவது ஒரு பிரச்னை ஏற்பட்டு கூட்டணியில் முறிவு ஏற்பட்டு நாம் பிரிந்துவிடுகிறோம். இதில் நான் யாரையும் குறை கூறவில்லை. அந்தநேரத்தில் ஏற்படும் சந்தர்ப்ப சூழலில் பிரிந்துவிடுகிறோம். பா.ம.க-வுக்கும் அதையேதான் கூறுகிறேன்.

அம்மா அவர்களின் ஆட்சி இன்று நடப்பதற்குக் காரணம் தே.மு.தி.க-வான நீங்கள் 2011-ல் அமைத்த அடித்தளம்தான். அந்த நன்றி விசுவாசத்தை நாங்கள் மறக்கவில்லை
அமைச்சர் சி.வி.சண்முகம்

நீங்கள் வெற்றிபெற்று எம்.எல்.ஏ, எம்.பி, மந்திரி ஆகிவிடுகிறீர்கள். ஆனால், உங்கள் தொண்டர்கள் தலைவராக முடியவில்லை. கவுன்சிலராக முடியவில்லை. ஒன்றியத்துக்குத் தலைவராக முடியவில்லை. தொண்டர்களாகிய நீங்கள் மாவட்டத் தலைவராகவோ, ஒன்றியத் தலைவராகவோ ஆக வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற்றே ஆக வேண்டும்.

இந்தத் தேர்தலில் வெற்றிபெறுவதோடு இதே கூட்டணியோடும், உற்சாகத்தோடும் உள்ளாட்சித் தேர்தலை சந்தித்தால் எளிதாக வெற்றிபெற்றுவிடலாம். நாம்தான் இன்று தமிழகத்தை ஆட்சி செய்துகொண்டிருக்கிறோம். அம்மா அவர்களின் ஆட்சி இன்று நடப்பதற்குக் காரணம் 2011-ல் தே.மு.தி.க-வான நீங்கள் போட்ட அடித்தளம்தான். அந்த நன்றி விசுவாசத்தை நாங்கள் மறக்கவில்லை.

Vijayakajnth
Vijayakajnth

அன்று 2011-ல் இந்தக் கூட்டணி முறியும் நிலை ஏற்பட்டபோது, இந்தக் கூட்டணி தொடர வேண்டும் என்று அ.தி.மு.க-வைச் சேர்ந்த அனைவரும் ஒன்று சேர்ந்து தலைமையிடம் கூறினோம்.

அதனடிப்படையில் தொண்டர்களின் உணர்வுக்கு மதிப்பளித்த அம்மா அவர்கள், மீண்டும் இந்தக் கூட்டணியை உறுதி செய்தார். அதன் பிறகு 8 ஆண்டுக்காலம் நாம் இந்த ஆட்சியில் இருக்கிறோம் என்றால் அதற்கு தே.மு.தி.க தொண்டர்களான உங்கள் உழைப்புதான் காரணம். அதை நாங்கள் மறக்கவில்லை.

C.V.Shanmugam
C.V.Shanmugam

நாங்கள் உங்கள் கூட்டணியை முறித்திருக்கலாம். மன வருத்தத்தில் இருந்திருக்கலாம். ஆனால், எங்கும் எந்தச் சூழ்நிலையிலும் உங்கள் தலைவரை தரக்குறைவாக நாங்கள் விமர்சித்தது கிடையாது. அரசியல் ரீதியாக சில விமர்சனங்களை செய்திருப்போமே தவிர, தனிப்பட்ட முறையில் விமர்சித்தது கிடையாது.

உங்கள் தலைவர் விஜயகாந்த்தை உயர்ந்த இடத்தில் நாங்கள் வைத்திருக்கிறோம். அவர் மிகப்பெரிய உழைப்பாளி. இன்று மட்டும் அவரது உடல்நிலை நன்றாக இருந்திருந்தால் தமிழகத்தின் அரசியல் நிலையே வேறாகியிருக்கும். ஒரு வார்த்தையைக்கூட எழுதி வைக்காமல் பேசத் தெரியாத ஸ்டாலின், இன்று அடையாளம் தெரியாமல் போயிருப்பார் என்பதுதான் உண்மை. உங்களின் பலம் என்ன என்பது எங்களுக்குத் தெரியும். நாங்கள் எந்தச் சூழலிலும் உங்களைக் குறைத்து மதிப்பிடவில்லை. அதேசமயம் உங்கள் பலத்தை நீங்கள் தெரிந்துகொள்ளுங்கள். இந்தத் தேர்தல்தான் நமக்குக் கடைசி வாய்ப்பு.

சின்னமே தெரியாத கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. இப்போதுகூட எனக்குக் கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமே தெரியாது. அது கதிர் அரிவாளா அல்லது சுத்தியல் அரிவாளா என்பதை யாரையாவது கேட்டுத்தான் சொல்வேன்
அமைச்சர் சி.வி.சண்முகம்

இந்தத் தேர்தல் நமக்கு வாழ்வா, சாவா... என்பதைப் போன்றது. நாம் கட்டியிருக்கும் இந்த வேட்டியை மீண்டும் கட்ட வேண்டும் என்றால் இந்தத் தேர்தலில் நாம் வெற்றிபெற வேண்டும். சின்னமே தெரியாத கட்சி கம்யூனிஸ்ட் கட்சி. இப்போதுகூட எனக்கு கம்யூனிஸ்ட் கட்சியின் சின்னமே தெரியாது. அது கதிர் அரிவாளா அல்லது சுத்தியல் அரிவாளா என யாரையாவது கேட்டுத்தான் சொல்வேன். ஆனால், அப்படிப்பட்ட கட்சிக்கே அம்மா சொன்னார்கள் என்பதற்காக வாக்களித்து வெற்றிபெற வைத்தத் தொகுதி இந்த விக்கிரவாண்டி.

இந்தத் தொகுதியில் எதாவது நடந்து நாம் ஏமாந்துவிட்டால் உள்ளாட்சித் தேர்தலிலும், அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலிலும் மிகப்பெரிய பாதிப்பை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்” எனப் பேசி முடித்தார் சி.வி.சண்முகம்.