Published:Updated:

``பேச வார்த்தையில்லை; ஸ்டாலினைக் கட்டிப்பிடித்து அழுதிருப்பேன்!" - துரைமுருகன் உருக்கம்

துரைமுருகன், ஸ்டாலின்
துரைமுருகன், ஸ்டாலின்

``சத்தியமாகச் சொல்கிறேன். இவ்வளவு அன்பும், பாசமும், பற்றும் என்மீது ஸ்டாலின் வைத்திருப்பார் என நினைக்கவேயில்லை! " என்றார் அமைச்சர் துரைமுருகன்.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாடு சட்டமன்ற வரலாற்றில், தனது 50 ஆண்டுக்கால சட்டமன்றப்பணியை நிறைவு செய்திருக்கிறார் தி.மு.க பொதுச்செயலாளரும், நீர் வளத்துறை அமைச்சருமான துரைமுருகன். அண்ணா காலத்திலிருந்தே சட்டமன்ற உறுப்பினராக வலம்வரும் துரைமுருகனின் சட்டமன்ற பொன்விழாவைச் சிறப்பிக்கும்படி, இன்று நடைபெற்றுவரும் சட்டமன்றக் கூட்டத்தொடரில் தீர்மானம் ஒன்றைக்கொண்டு வந்தார் முதல்வர் ஸ்டாலின்.

துரைமுருகன், ஸ்டாலின்
துரைமுருகன், ஸ்டாலின்

அப்போது அமைச்சர் துரைமுருகனைப் பாராட்டிப் பேசிய ஸ்டாலின், ``தமிழக சட்டமன்றத்தில், 50 ஆண்டுக்காலம் பணியாற்றி பொன்விழா நாயகனாக வலம்வருகிறார் துரைமுருகன். தனிப்பட்ட முறையில் சொல்ல வேண்டுமென்றால் கருணாநிதி, பேராசிரியர் அன்பழகன் மறைந்த பிறகு மாபெரும் அரசியல் இயக்கத்தின் தலைமைப் பொறுப்பிலுள்ள எனக்கு வழிகாட்டியாக இருக்கக்கூடிய ஒருவர் அண்ணன் துரைமுருகன்தான்" என உருக்கமாகப் பேசினார். ஸ்டாலின் பேசுக்கொண்டிருக்கும்போதே உணர்ச்சிவசப்படுக் கண்கலங்கினார் அமைச்சர் துரைமுருகன். முதல்வர் ஸ்டாலினைத் தொடர்ந்து, எதிர்க்கட்சித் துணைத் தலைவர் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட அனைத்துக் கட்சியினரும், சபாநாயகரும் துரைமுருகனைப் பாரட்டி புகழாரம் சூட்டி அமர்ந்தனர்.

இறுதியாக அனைவருக்கும் நன்றி தெரிவிக்கும்படி பேசிய அமைச்சர் துரைமுருகன்,

``என் வாழ்நாளில் எத்தனையோ ஆயிரக்கணக்கான மேடைகளில் பேசியிருக்கிறேன். ஆனால், வார்த்தைகளைத் தேடி நான் அலைந்ததில்லை. பொருளுக்காகவும் நான் யோசித்தது இல்லை. ஆனால் இன்றைக்கு எனக்கு வார்த்தைகளும் வரவில்லை, என்ன பேசுவதென்றும் தெரியவில்லை. என் வாழ்க்கையில் எத்தனையோ வெற்றி தோல்விகள் இருந்தாலும், எல்லாவற்றுக்கும் முத்தாய்ப்பாய் இருப்பதுபோல், இன்றைக்கு என் தலைவர் கொண்டு வந்த தீர்மானத்தில், ஒட்டுமொத்தமாக அனைத்துக் கட்சியினரும் என்னைப் பாராட்டிப் பேசியிருப்பதை நினைக்கும்போது நெஞ்சம் நெகிழ்ந்திருக்கிறது. இப்படிப்பட்ட தீர்மானம் வருமென்று நான் கொஞ்சம்கூட எதிர்பார்க்கவில்லை! ஸ்டாலின் என்மீது காட்டிய பாசம், கொட்டிய வார்த்தைகள் இவற்றையெல்லாம் நினைத்து கிறுகிறுத்துப் போயிருக்கிறேன் " என உணர்ச்சிப் பெருக்குடன் தெரிவித்தார்.

கருணாநிதி-துரைமுருகன்
கருணாநிதி-துரைமுருகன்
தஞ்சாவூர் : உதயநிதி ஸ்டாலின் வருகையால் உற்சாமடைந்த எம்.எல்.ஏ; ஏமாற்றமடைந்த தொண்டர்கள்!

மேலும், ``ஒரு நண்பனைப்போல் என்னை பார்த்துகொண்டவர் கலைஞர். அவரது மறைவுக்குப் பிறகு வெற்றிடம் இருக்குமோ என்று நினைத்தேன். ஆனால் தந்தையினுடைய பாசத்தையே விஞ்சுகிற அளவுக்கு இப்படியொரு கௌரவத்தை, நான் நினைத்துக்கூட பார்க்க முடியாத கௌரவத்தை எனக்குக் கொடுத்த தலைவர் ஸ்டாலினுக்கு, வாழ்நாள் முழுக்க நான் நன்றிக்கடன் பட்டிருக்கிறேன். சத்தியமாகச் சொல்கிறேன்... இவ்வளவு அன்பும், பாசமும், பற்றும் என்மீது ஸ்டாலின் வைத்திருப்பார் என நினைக்கவேயில்லை! இந்த அவையில் இல்லாமல் வேறிடமாக இருந்திருந்தால் அவரைக் கட்டித்தழுவி அழுதிருப்பேன்" எனக் கண்களில் நீர்ததும்ப கரகரத்த குரலோடு உருக்கமாகப் பேசினார்.

துரைமுருகன்
துரைமுருகன்

தொடர்ந்து பேச முயன்ற அவர், ``முதன்முறையாக எனக்குப் பேசத் தெரியவில்லை, இந்த அவையிலுள்ள தலைவர் பெருமக்கள் எந்த அளவுக்கு என்னைப் பாராட்டினீர்களோ உங்கள் அன்பிற்கேற்றாற்போல் வாழ்ந்து காட்டுவேன். என்மீது நம்பிக்கை வைத்துள்ளவர்களுக்கு நான் வாழ்ந்து காட்டுவேன்" என நன்றி கூட தெரிவிக்க முடியாமல், அனைவரையும் கைகூப்பி வணங்கியபடியே ஆனந்தக் கண்ணீருடன் அமர்ந்தார் அமைச்சர் துரைமுருகன்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு