தமிழக அமைச்சரவையில் மாற்றம் ஏற்படவிருப்பதாகக் கடந்த சில தினங்களாக தகவல்கள் பரபரத்துக்கொண்டிருக்கின்றன. அமைச்சர் பி.டி.ஆர் ஆடியோ சர்ச்சையைத் தொடர்ந்து இதற்கான வேலைகள் தி.மு.க உயர்மட்டத்தில் நடந்துவருவதாகச் சொல்லப்படுகிறது. மேலும், இலாக்காக்கள் மாற்றத்துக்கும், அமைச்சரவையில் புது முகத்துக்கு வாய்ப்பு வழங்கப்படவிருப்பதாகவும் கூறப்படுகிறது.

இத்தகைய சூழலில் அமைச்சரவை மாற்றம் குறித்து தி.மு.க மூத்த அமைச்சர் துரைமுருகன், ஆளுநர் ஆர்.என்.ரவியைச் சந்திக்கத் திட்டமிட்டிருப்பதாகத் தகவல்கள் இன்று வெளியாகின. இந்த நிலையில், அமைச்சர்களை மாற்ற முதல்வருக்கு உரிமை இருக்கிறது என்றும், ஆனால், மாற்றம் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என்றும் அமைச்சர் துரைமுருகன் கூறியிருக்கிறார்.
சென்னையில் தன்னுடைய வீட்டில் செய்தியாளர்களிடம் ஆளுநர் சந்திப்பு, அமைச்சரவை மாற்றம் பற்றிய பேச்சுகள் குறித்துப் பேசிய துரைமுருகன், ``அது பற்றி எனக்குத் தெரியாது. ஒரு முதலமைச்சர், தன் கீழ் பணியாற்றுகிறவர்களை மாற்றலாம், புதிய மந்திரிகளைப் போடலாம். இது முதலமைச்சருக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் உரிமை. அதை யாரும் கேள்வி கேட்க முடியாது. ஆனால், மாற்றம் நடக்குமா என்பது உங்களுக்கு எவ்வளவு தெரியுமோ அவ்வளவுதான் எனக்கும் தெரியும். யாமறியோம் பராபரமே... அதை முடிவுசெய்ய வேண்டியது முதல்வர்தான். உங்களின் யூகங்கள் சரியாக இருந்தால் நாங்களும் சென்று ஆளுநரைப் பார்ப்போம்.

இது பெரிய உலக ரகசியம் எல்லாம் ஒன்றுமில்லை. எனக்குத் தெரிந்தால் சொல்லிவிடுவேன். இன்னும் முதல்வரை நான் பார்க்கவே இல்லை. இருக்கக்கூடிய அமைச்சர்களில் நானும் ஒருவன். எனக்கு எந்தப் பதற்றமும் இல்லை. அதெல்லாம் நடக்கும்போது நடக்கும். புதிய அமைச்சர்களைச் சேர்க்கிறார்களா... இல்லையா... என்று தெரியவில்லை. ஒரு நாள் சென்னையில் இல்லை என்றாலே பாதி உலகம் தெரிய மாட்டேங்குது" என்றார். மேலும் திராவிட மாடல் குறித்த ஆளுநரின் விமர்சனத்துக்கு, ``ஆளுநரின் பேச்சுதான் காலாவதியாகிவிட்டது" என்றார் துரைமுருகன்.
அதோடு, முதல்வரின் ஜப்பான் சுற்றுப்பயணத்தில் தான் செல்லவில்லை என்றும் துரைமுருகன் தெரிவித்தார்.