Published:Updated:

தூத்துக்குடி: கூட்டுறவு சங்கக் கடன்கள்; தள்ளுபடி அறிவிப்பு விரைவில் வெளியாகும்- அமைச்சர் ஐ.பெரியசாமி

பெட்ரோல் நிலைய திறப்பு விழாவில் ஐ.பெரியசாமி
பெட்ரோல் நிலைய திறப்பு விழாவில் ஐ.பெரியசாமி

``தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடன், சுய உதவிக்குழுக் கடன் ஆகியவை அரசால் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். கூட்டுறவு சங்கங்களில் நடந்த முறைகேடுகள் குறித்து அறிக்கை கேட்கப்பட்டுள்ளது” - ஐ.பெரியசாமி.

தூத்துக்குடி புதிய பேருந்து நிலையம் அருகில், வேளாண்மை கூட்டுறவு விற்பனைக் கடன் சங்கத்தின் நேரடி கட்டுப்பாட்டின்கீழ் இயங்கும் பெட்ரோல், டீசல் விற்பனை நிலையத்தை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி திறந்துவைத்தார். இந்த நிகழ்ச்சியில் தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி, சமூக நலத்துறை அமைச்சர் கீதா ஜீவன், மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ், கூட்டுறவு சங்கங்களின் இணைப்பதிவாளர் ரவிச்சந்திரன் ஆகியோருடன் பல அரசு அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.

கடன் வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி
கடன் வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி

தொடர்ந்து, இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்க புதிய உறுப்பினர்கள் 847 பேருக்கு, ரூபாய் 4.87 கோடி மதிப்பிலான கடன் உதவிகளை கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி வழங்கினார். பின்னர் பேசிய அவர், ``தமிழகத்திலுள்ள கூட்டுறவு கடன் சங்கங்களில் எவ்வளவு பேர் வந்து கடன் கேட்டாலும் அதை வழங்க வேண்டும். அதற்கான நிதியை தமிழக அரசு வழங்கத் தயாராக உள்ளது. தமிழகத்திலுள்ள கூட்டுறவு சங்கங்களை, அனைவரும் பயன்பெறும் வகையில் பல்நோக்கு மையமாக மாற்றுவதற்கான திட்டம் விரைவில் கொண்டுவரப்படும்.

கூட்டுறவு சங்கங்கள் மூலம் வழங்கப்பட்ட கல்விக் கடன், சுயஉதவிக்குழுக் கடன் ஆகியவை அரசால் தள்ளுபடி செய்வதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும். தற்போது, மங்கிய நிலையில் இருக்கும் சிறு வணிகக் கடன் திட்டம் அதிகரிக்கப்படும். சுயஉதவிக் குழுக்களுக்கு எல்லா வகைக் கடன்களும் கொடுக்க அரசு தயாராக உள்ளது. தூத்துக்குடி மாவட்டத்தில் ரூ.33 கோடிக்கு நகைக் கடன் வழங்கியதாக கூட்டுறவு சங்கப் பணம் முறைகேடு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக நடந்திருக்கக்கூடிய முறைகேடுகள் குறித்து வரும் 15-ம் தேதிக்குள் அறிக்கை தர வேண்டும் என எல்லா மாவட்ட இணைப்பதிவாளருக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

கடன் வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி
கடன் வழங்கிய அமைச்சர் ஐ.பெரியசாமி

`கூட்டுறவு சங்கங்கள்’ மக்கள் சொத்து. அது மக்கள் இயக்கமாக மாற்றப்பட வேண்டும். தமிழகத்தில் எந்தெந்தப் பகுதிகளில் பகுதிநேர நியாயவிலைக் கடைகள் கட்ட வேண்டும், அதற்கான நிதி ஆதாரம் என்ன என்பது குறித்து தமிழக அரசு ஆய்வு செய்துவருகிறது. தேவையான பகுதிகளில் கூட்டுறவு மருந்தகங்கள், விவசாயப் பொருள்களைப் பாதுகாக்க குளிர்ப்பதன கிடங்கு, விற்பனை நிலையம் அமைக்கப்படும்” என்றார்.

அடுத்த கட்டுரைக்கு