Published:Updated:

“சசிகலா ஒரு பாம்பு!”

 ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்

சாட்டை சுழற்றும் ஜெயக்குமார்

“சசிகலா ஒரு பாம்பு!”

சாட்டை சுழற்றும் ஜெயக்குமார்

Published:Updated:
 ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
ஜெயக்குமார்
கட்சியில் ஒற்றைத் தலைமை பிரச்னை; சசிகலா விடுதலையானால் நடக்கப்போகும் மாற்றங்கள் எனப் பல விஷயங்கள் குறித்துப் பேச மீன்வளத்துறை அமைச்சரும், அ.தி.மு.க-வின் அமைப்புச் செயலாளருமான ஜெயக்குமாரை அழைத்தோம். ‘‘வெளியிலேயே சந்திக்கலாம்’’ என்று ஜாலியான மூடில் சொன்னவர், சாந்தோம் சர்ச் அருகேயுள்ள பூங்காவில் சந்திக்க ஒப்புக்கொண்டார். மதியம் 1:00 மணிக்கு வந்தவர், ‘‘கட்சி ஊழியர் கூட்டத்துக்குப் போகணும்... உங்க கேள்விகளுக்கு பதில் சொல்லிட்டுக் கிளம்புறேன்’’ என்றபடி நம் கேள்விகளை எதிர்கொண்டார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

‘‘அ.தி.மு.க-வுக்கு ஒற்றைத் தலைமை சரியா... இரட்டைத் தலைமை சரியா?’’

‘‘48 வருஷத்துல ஏழு முறை தமிழகத்தை ஆண்ட கட்சி. எவ்வளவோ அரசியல் மாற்றங்கள் வரும்ல... அதுக்குத் தகுந்தாப்ல மாத்திக்குறோம். அம்மா இறந்தப்போ, ‘இதோட அ.தி.மு.க ஒழிஞ்சுச்சு’ன்னாங்க. ‘ஆட்சி அம்போ’ன்னாங்க. பொதுக்குழு கூடி முடிவெடுத்து, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர்னு தேர்ந்தெடுத்தோம். இப்போ ஆட்சியும் கட்சியும் நல்லாத்தானே இருக்கு... ரெண்டு பேருமே பிரச்னையில்லாம வழிநடத்துறாங்கன்றதுதான் நிஜம்.’’

‘‘ரொம்பத் தீவிரமா தமிழக அரசியல் களம் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் ஒரு விஷயம், சசிகலா விடுதலை. அவர் வந்தால், அ.தி.மு.க-வில் இனி இடம் உண்டா?’’

‘‘தமிழ்நாட்டைப் பொறுத்தவரை அவங்க எடுபடாத சக்தி. அன்னிக்கு பரமசிவம் கழுத்துல பாம்பு இருந்தது. நாம பரமசிவனைத்தான் வணங்கினோம். பாம்பை வணங்கலை. ஆனா, பாம்பு என்ன நினைச்சிருச்சு... தனக்குத்தான் மரியாதைனு நினைச்சிருச்சு. அது எவ்ளோ பெரிய தப்பு! நாடாளுமன்றத் தேர்தல்ல அ.ம.மு.க நின்னப்போ, ‘இந்தக் குடும்பம் தமிழ்நாட்டைச் சீரழிச்ச குடும்பமாச்சே?’னு மக்கள் ஒதுக்கிவெச்சுட்டாங்க. இப்பவும் சரி... இனி வருங்காலத்துலயும் சரி... அந்தக் குடும்பமே தேவையில்லை. இனிமேல் சசிகலா குடும்பத்துக்கு அ.தி.மு.க சரித்திரத்துலயே இடமில்லை.’’

“சசிகலா ஒரு பாம்பு!”

‘‘அவர் அடிப்படை உறுப்பினராகக்கூட சேர முடியாதா?’’

‘‘அதுக்கு சான்ஸே இல்லைங்கிறேன்... அப்படி என்னாத்துக்கு அடிப்படை உறுப்பினரு?”

‘‘சசிகலாவை வைத்து அ.தி.மு.க-வை உடைக்க பி.ஜே.பி பிளான் பண்றதா தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி சொல்கிறாரே..?’’

‘‘பி.ஜே.பி-னு இல்லை. யாரும், எந்தச் சூழ்நிலையிலும், என்ன முயற்சி எடுத்தாலும் எங்க கட்சியை உடைக்க முடியாது. இதை ஆணித்தரமா சொல்றேன்!’’

‘‘வரும் தேர்தலில் பி.ஜே..பி தலைமையில்தான் உங்க கூட்டணி அமையும் என்று சொல்கிறார்களே..?’’

‘‘நாடாளுமன்றத் தேர்தல் நேரத்துல டெல்லியில இருந்து வந்த பி.ஜே.பி தலைவர்கள், ‘அ.தி.மு.க தலைமையிலதான் கூட்டணி’னு பிரஸ்மீட்ல சொன்னது நினைவிருக்குல்ல? எழுதிவெச்சுக்கங்க... யார்கூட கூட்டணின்னாலும் அது எங்க தலைமையிலதான் தொடரும்.’’

‘‘வரும் தேர்தலில், ரெய்டில் சிக்கிய அமைச்சர்கள் இல்லாத அ.தி.மு.க-வோடு ரஜினி கூட்டணிவைக்க விரும்புவதாக அவரது மன்றத்தினர் சொல்கிறார்களே..?”

‘‘ரெய்டு, வழக்குகள்லாம் நாங்க பார்க்காததா... அதுக்கெல்லாம் அஞ்சாம தாண்டி வந்து இன்னைக்கு மக்களுக்கு சேவை செஞ்சுக்கிட்டிருக்கோம். ரஜினியைப் பொறுத்தவரை, அவரு முதல்ல கட்சி ஆரம்பிக்கட்டும். கொள்கை லட்சியம்லாம் சொல்லட்டும்... பிறகுதானே யாரோட கூட்டணினு தெரியும். கட்சி ஆரம்பிக்கறதுக்கான அடிச்சுவடே தெரியாத நிலைமையில, இந்தக் கேள்விக்கு பதில் சொல்ல முடியாது.”

“சசிகலா ஒரு பாம்பு!”

‘‘மதுரையில் நடிகர் விஜய்யை எம்.ஜி.ஆராக மார்ஃபிங் செய்து போஸ்டர் வெளியிட்டிருக்கிறார்களே..?’’

‘‘தலைவரோட கொள்கைகள், தத்துவங்கள் பிடிக்கும்னு சொல்லிக்கட்டும். ஆனா, தலைவரு மாதிரி சித்திரிக்கறதை ஏத்துக்க முடியாது. நீங்க நீங்களா இருங்க. எங்க தலைவர் மாதிரி வேஷம் போட்டுட்டா மக்கள் நம்பிடுவாங்களா? என்ன தகிடுதத்தம் செஞ்சாலும் இரட்டை இலைக்கு ஓட்டுப்போட்ட கை, வேற சின்னத்துக்கு மாத்தி ஓட்டுப் போடாது!’’

‘‘ `அ.தி.மு.க அமைச்சர்கள் எல்லை மீறிப் பேசுகிறார்கள்’ என்று பி.ஜே.பி தலைவர் ஹெச்.ராசா பேசியிருக்கிறாரே...’’

“இவருல்லாம் எங்களைக் கட்டுப்படுத்த முடியாது. எங்களைச் சீண்டக் கூடாது. அவரு வேலையை அவரு பார்க்கட்டும். ஹெச்.ராஜாவோ, எஸ்.வி.சேகரோ யாரா இருந்தாலும் எங்க காலை மிதிச்சா, மறுபடி அவங்க காலை மிதிக்காம விட மாட்டோம். பெரியாரை, அண்ணாவை, எங்க தலைவரை, அம்மாவை, கட்சியை, அமைச்சரை, தொண்டரை பாதிக்கிற விஷயத்தை யார் பேசினாலும் மாறுபட்ட கருத்தா இருந்தா நிச்சயமா பதிலடி கொடுப்போம்!’’

‘‘உங்கள் ராயபுரம் மண்டலத்தில்தான் கொரோனா உச்சத்தில் இருந்தது. அமைச்சராக இருந்தும் நீங்கள் ஏன் கட்டுப்படுத்தவில்லை?”

“ராயபுரம் மண்டலம்னா அது முழுசுக்கும் நான்தான் பொறுப்புனு நினைக்கிறது தப்பு. ராயபுரம்கிறது பெயருலதான் இருக்கும். ஆனா, ராயபுரம் மண்டலத்துல துறைமுகம், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி, எழும்பூர் தொகுதிகள்ல இருக்கிற ஒன்பது வார்டுகள்னு எல்லாம் சேர்ந்திருக்கே... என்னோட ராயபுரம் தொகுதியில வெறும் ஆறு வார்டுங்கதான் வருது. கொஞ்சநாளைக்கு முன்னால 400 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் இருந்துச்சு. நேத்து வெறும் எட்டுப் பேருக்குத்தான் இருந்துச்சு. குறைஞ்சிக்கிட்டே வருது.’’

“சசிகலா ஒரு பாம்பு!”

‘‘உங்கள் நிர்வாகத்தின்கீழ் வரும் டி.என்.பி.எஸ்.சி-யில் கேள்வித்தாள் லீக் ஆனது. அந்த வழக்கு என்ன ஆனது?”

‘‘ஏங்க... எக்கச்சக்கமான சென்டர்ல எக்ஸாம் நடந்துச்சு. அதுல ஒருசில சென்டர்ல தப்பு நடந்துச்சு. சம்பந்தப்பட்டவங்களைப் பிடிச்சு ஜெயிலுக்கு அனுப்பியாச்சு. அவங்க இனி வாழ்நாள் பூராவும் டி.என்.பி.எஸ்.சி எக்ஸாம் எழுத முடியாது.”

‘‘ஆன்லைனில் ஆங்கிலவழியில் பாடம் நடத்துவது புரியாததால் கல்லூரி மாணவி தற்கொலை... டி.வி இல்லாத வருத்தத்தில் மாணவர் தற்கொலை என்றெல்லாம் செய்திகள் வருகின்றன. தமிழகத்தில் டி.வி., இன்டர்நெட் வசதி இல்லாத ஏழைக் குடும்பத்தினர் ஏராளமானவர்கள் இருக்கும்போது, இதையெல்லாம் கருத்தில் கொள்ளாமல் ஆன்லைன் கல்வித் திட்டத்தை ஏன் அமல்படுத்தினீர்கள்?”

‘‘இன்றைக்கு (செப்டம்பர் 10) உலக தற்கொலைத் தவிர்ப்பு நாள். மாணவர்களுக்கு ஒண்ணு சொல்லிக்கிறேன். தற்கொலை எதற்கும் தீர்வு அல்ல. நான் டாக்டருக்குப் படிக்க ஆசைப்பட்டேன். நடக்கலை. ஆல் இண்டியா ரேடியோல சவுண்ட் இன்ஜினீயர் வேலைக்கு இன்டர்வியூக்குப் போனேன். எல்லா டெக்னிக்கல் விஷயங்களுக்கும் பதில் சொன்னேன். செலக்ட் ஆகலை. குரூப் 1-ல ஃபெயில் ஆகிட்டேன். இதுக்கெல்லாம் வாழ்க்கை போச்சுனு வெறுத்தா போயிட்டேன்? முயற்சி பண்ணிக்கிட்டே இருக்கணும். இலக்கை கடவுள்தான் தீர்மானிக்கிறார். வாழ்க்கை வாழ்வதற்கே. முயற்சியைக் கைவிடவே விடாதீங்க!’’

‘‘கொரோனாவைக் காரணம் காட்டி, வரும் சட்டமன்றத் தேர்தல் தள்ளிப்போகும் என்றும், மெடிக்கல் எமர்ஜென்சி கொண்டுவந்து மறைமுகமாக பி.ஜே.பி தமிழகத்தில் ஆட்சி நடத்தும் என்றும் ஒரு பேச்சு இருக்கிறதே?”

‘‘அனுமானத்துக்கெல்லாம் பதில் சொல்ல முடியாது. 2021-ல இந்திய அரசியல் சட்டப்படி தேர்தல் நடக்கும். நாங்கதான் ஜெயிப்போம். ‘எட்டு மாசத்துல நாங்கள் ஆட்சிக்கு வருவோம்’ங்கிறாரு மு.க.ஸ்டாலின். எட்டு மாதம் இல்லை... எண்பது வருஷமானாலும் தி.மு.க ஆட்சிக்கு வரவே முடியாது!’’