Published:Updated:

“பயம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது!”

அமைச்சர் ஜெயக்குமார்
பிரீமியம் ஸ்டோரி
News
அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார் ‘தில்’

பழமொழி, சொலவடை, பன்ச் டயலாக்குகள் எனச் செய்தியாளர்களைத் திணறடிப்பவர் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார். அண்ணா பல்கலைக்கழக விவகாரம், அமித் ஷா வருகை, சசிகலா விடுதலை... எனச் சூடுபறக்கும் தமிழக அரசியல் கேள்விகளுக்கு விடை கேட்டு, அமைச்சர் ஜெயக்குமாரைச் சந்தித்தேன்...

“தமிழக அரசின் தடையை மீறி வேல் யாத்திரை தொடர்ந்துவரும் சூழலிலும்கூட, உறுதியான நடவடிக்கை எடுக்காமல் தமிழக அரசு பயந்து, பம்முவது ஏன்?’’

“தமிழ்நாட்டில் சட்டம், ஒழுங்குப் பிரச்னை ஏதாவது ஏற்பட்டிருக்கிறதா? இல்லையே... அமைதிப் பூங்காவாகத்தானே இருக்கிறது... கொரோனா நிலையைச் சுட்டிக்காட்டி, அரசின் நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்திவிட்டோம். காவல்துறையும் சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கைகளை எடுத்துவருகிறது. காவிரிப் பிரச்னையில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை மதிக்காத மத்திய பா.ஜ.க அரசுக்கு எதிராகக் கண்டன வழக்கைத் தொடுத்ததே தமிழக அரசுதான். எனவே, நாங்கள் யாருக்கும் பயப்படவில்லை!’’

“ `தமிழ்நாட்டில், சட்டம், ஒழுங்கு கெடவில்லை’ என்கிறீர்கள். சென்னையில் மூன்று பேர் துப்பாக்கியில் சுடப்பட்டு இறந்திருக்கிறார்கள். பழநியில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டில் ஒருவர் இறந்துவிட்டார்...’’

“ `இந்திய அளவில் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்றும் அமைதியான மாநிலம் தமிழ்நாடு’ என்று மத்திய அரசே அங்கீகாரம் வழங்கியிருக்கிறது. மற்றபடி ஏதோ ஒன்றிரண்டு இடங்களில் நடைபெறுகிற குற்றங்களை வைத்துக்கொண்டு, ஒட்டுமொத்தமாக மாநிலத்தின் சட்டம், ஒழுங்கைத் தீர்மானிப்பது சரியல்ல. கடந்த தி.மு.க ஆட்சிக் காலத்தில்தான் கோவையில் வெடிகுண்டு வெடித்தது. கூஜா வெடிகுண்டு, ஜெயில் கலவரம், ஜெயிலர் - எஸ்.ஐ வெட்டிக் கொலை... என தி.மு.க ஆட்சியில்தான் தமிழ்நாட்டின் சட்டம், ஒழுங்கு கெட்டுப்போயிருந்தது.’’

“ `அமித் ஷா வருகை, தமிழக அரசியலில் கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது’ என்கிறாரே எல்.முருகன்?’’

“அமித் ஷா ஓர் அரசியல்வாதி. அவரது கட்சியைப் பலப்படுத்துவதற்காக தமிழ்நாட்டுக்கு வருகிறார். அவரது வருகை எதிர்க்கட்சிகளுக்கு பயத்தை ஏற்படுத்தியிருக்கிறது என்றுதான் தமிழக பா.ஜ.க தலைவர் சொல்லியிருக்கிறார். எனவே, எதிர்க்கட்சிகள்தான் இந்தக் கேள்விக்கு பதிலளிக்க வேண்டும்.’’

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

“அ.தி.மு.க அரசில், முதல்வர் மற்றும் அமைச்சர்கள் தங்கள் உறவினர்கள் பெயரில் அரசு ஒப்பந்தங்கள் பெறுவது தார்மிக அடிப்படையில் நியாயம்தானா?’’

“சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம் இது குறித்து நீண்ட விளக்கமே கொடுத்துவிட்டார். அதற்கு மேல் நானும் விளக்கம் கொடுப்பது சரியாக இருக்காது. எதிர்க்கட்சியான தி.மு.க-வினரே இன்றைக்கு எந்த ஒப்பந்தத்தில் தலையிடாமல் இருக்கிறார்கள்? ஒப்பந்ததாரர்கள் அனைவரிடமும் தி.மு.க-வினர் கமிஷன் வாங்கிக்கொண்டுதான் இருக்கிறார்கள்.’’

“ஊழல் நடைபெறாமல் தடுத்து நிறுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டிய ஆளுங்கட்சி அமைச்சரான நீங்களே, ‘ஒப்பந்தப் பணிகளில் தி.மு.க-வினர் கமிஷன் வாங்குகின்றனர்’ என்று சொல்லிக்கொண்டிருக்கலாமா?’’

“எங்களைப் பொறுத்தவரையில், ஒப்பந்தப் பணிகளுக்கான ஏலம்விடுதலை மிகவும் வெளிப் படையாக நடத்துகிறோம். ஏலம் எடுத்த ஒப்பந்த தாரரிடம், தொகுதியைச் சேர்ந்த எதிர்க்கட்சி எம்.எல்.ஏ-க்கள் மிரட்டி கமிஷன் வாங்கினாலோ அல்லது பணம் பறித்தாலோ... கான்ட்ராக்டர் வந்து அது பற்றிய புகார் அளித்தால்தானே நாங்கள் நடவடிக்கை எடுக்க முடியும்!’’

“ `துணைவேந்தர் சூரப்பா, தமிழக அரசுக்கு எதிராகச் செயல்படுகிறார்’ என அமைச்சரே பேட்டியளிக்கிறார். ஆனாலும் சூரப்பாவை சஸ்பெண்ட் செய்ய தமிழக அரசு தயங்குகிறதே..?’’

“யார் மீது புகார் வந்தாலும் அதை உதாசீனப் படுத்த முடியாது. முதலில் புகாரில் முகாந்திரம் இருக்கிறதா என்று தீர ஆலோசித்து, முடிவெடுத்து, பின்னரே விசாரணை செய்ய வேண்டும். அந்த விசாரணை அறிக்கையின் பெயரில்தான் நடவடிக்கை எடுக்க முடியும். இதுதான் நியதி. அதனால்தான் தமிழக அரசு, அண்ணா பல்கலைக்கழக விவகாரங்கள் குறித்து விசாரணை செய்வதற்காக கமிஷன் அமைத்திருக்கிறது. தி.மு.க-வைப்போல் எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நாங்கள் ஒருபோதும் செயல்பட மாட்டோம்!’’

“ஆனால், கடந்த இரண்டு வருட காலத்தில் தமிழகப் பள்ளிக் கல்வித்துறையின் அறிவிப்புகள் அனைத்துமே ‘எடுத்தேன் கவிழ்த்தேன்’ பாணியில் அறிவிக்கப்பட்டு, தடாலடியாக வாபஸ் பெறப்பட்டும் வருகின்றனவே..?’’

“மக்களின் அரசாக நாங்கள் செயல்பட்டு வருவதால்தான் இப்படியான குற்றச்சாட்டுகள் எங்கள்மீது வருகின்றன். ‘பள்ளிகளைத் திறக்கலாம்...’ என்று ஆளுகின்ற அரசாக நாங்கள் ஒரு முடிவெடுக்கிறோம். ஆனால், மக்களின் கருத்து வேறொன்றாக இருக்கிறது. எனவே, மக்களின் கருத்துக்கு மதிப்பளித்து நாங்களும் எங்கள் முடிவை மாற்றிக்கொள்கிறோம். மாறாக, ‘நாங்கள் எடுத்த முடிவுதான் இறுதியானது’ என்று பிடிவாதமாக ஒற்றைக்காலில் நிற்கவில்லையே... ஆக, இதுதானே நல்லதொரு மக்கள் அரசு!’’

“சசிகலா மீதான உங்களது நேரடி விமர்சனங்களால், எதிர்த்தரப்பினர் உங்கள்மீது கடும் கோபத்தில் இருக்கின்றனரே..?’’

“அவர்கள் மட்டுமா... ‘ஜெயக்குமார்தான் எங்களைக் கடுமையாகத் தாக்குகிறார். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அவரை விடப்போவதில்லை’ என்று தி.மு.க-வினரும்தான் சொல்லி வருகிறார்கள். என்னைப் பொறுத்தவரையில் மடியில் கனமில்லை; வழியில் பயமும் இல்லை. நான் பிறந்து வளர்ந்தது வட சென்னை. அதனால், பயம் என்றால் என்னவென்றே எனக்குத் தெரியாது!’’

“மறைந்த அமைச்சர் துரைக்கண்ணுவிடம் கொடுக்கப் பட்டிருந்த கோடிக்கணக்கான ரூபாயைக் கைப்பற்றுவதற் காகவே அமைச்சருக்கு நெருக்கமானவர்களைக் காவல் துறை கைதுசெய்து வருவதாகச் சொல்லப்படுகிறதே..?’’

“அப்படியெல்லாம் கிடையாது. அமைச்சரின் மரணத்திலும்கூட அரசியல் லாபம் தேட முயலும் எதிர்க்கட்சியினர் இப்படிப் பொய்ச் செய்திகளைப் பரப்புகிறார்கள். அவர்கள் சொல்கிற குற்றச்சாட்டுகளுக்கு ஏதேனும் முகாந்திரமோ, ஆவணங்களோ அல்லது புகார்களோ இருப்பதாக ஆதாரம் காட்ட முடியுமா?’’

“தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டுமே ரௌடிகள் கைது செய்யப்படுகிறார்களே... மற்ற மாவட்டங்களில் ரௌடிகளே இல்லையா?’’

“இது காக்கா உட்கார, பனம்பழம் விழுந்த கதைதான். தஞ்சாவூர் மாவட்டத்தில், ‘ரௌடிகளை வேட்டையாடி, சட்டம் ஒழுங்கைக் காப்பாற்ற வேண்டும்’ என்ற இயல்பான நோக்கத்தோடு காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. இதைக்கூட இப்படியெல்லாம் திரித்து, செய்தி பரப்பினால் என்ன செய்வது?’’

“2021 சட்டமன்றத் தேர்தலில், அ.தி.மு.க தலைமையிலான கூட்டணியா அல்லது பா.ஜ.க தலைமையிலான கூட்டணியா?’’

“பிரதமரைத் தேர்ந்தெடுக்கும் நாடாளுமன்றத் தேர்தலிலேயே அ.தி.மு.க தலைமையில்தானே தேர்தலை சந்தித்தோம்... இது மாநில முதல்வரைத் தீர்மானிக்கிற தேர்தல். இதில் எப்படி பா.ஜ.க தலைமையிலான கூட்டணி அமையும்... இவையெல்லாமே எதிர்க்கட்சிகள் பரப்பும் வதந்திகள்தான்!’’