Published:Updated:

``வரும்... ஆனா வராது“- வடிவேலு பாணியில் தி.மு.க-வைக் கலாய்த்த ஜெயக்குமார்!

வடிவேல் பாணியில் பதில் அளிக்க, அவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

சட்டமன்றம்
சட்டமன்றம்

சட்டமன்றம் என்றாலே சலசலப்புக்குப் பஞ்சம் இருக்காது. ஆனால், பலநேரங்களில் சுவாரஸ்யமும், நகைச்சுவையும் மன்றத்தை மகிழ்வித்த சம்பவங்கள் உண்டு. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா இருந்தவரை சட்டசபையில், அ.தி.மு.க உறுப்பினர்கள் வாய்திறக்கவே பயந்தனர். ஆனால், இப்போது எதிர்க்கட்சிக்கு இணையாக வாதம் புரிவதும், வாய்ப்பு கிடைக்கும்போது எதிர்க்கட்சியினருடன் நய்யாண்டி செய்வதும் எனக் கதம்பமாகச் சென்றுகொண்டிருக்கிறது, தற்போது நடைபெறும் சட்டமன்றக் கூட்டத்தொடர்.

சட்டசபை
சட்டசபை

புதன்கிழமை நடைபெற்ற சட்டமன்றக் கூட்டத்தொடரில், தி.மு.க கொண்டுவந்த நீட் தேர்வு தொடர்பான கவன ஈர்ப்பு தீர்மானத்தினால் சட்டசபையில் முதலில் அனல்பறந்தது. தி.மு.க வெளிநடப்பும் செய்தது, இந்த விவகாரத்தில். இதன்பிறகு தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், “சமீபத்தில் வெளியிடப்பட்ட மருத்துவ தரவரிசை பட்டியலில், இரட்டை இருப்பிடச் சான்றிதழ்பெற்ற வெளிமாநில மாணவர்களின் பெயர்கள் இடம்பெற்றுள்ளதாகப் புகார்கள் வருகிறது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே இதுபோன்று புகார்கள் கிளம்பியது. நான் இதுகுறித்து உயர் நீதிமன்றத்தில் தனியாக வழக்குக்கூட தாக்கல் செய்திருந்தேன். இந்த ஆண்டும் அதுபோல வெளிமாநில மாணவர்கள் இரட்டை இருப்பிடச் சான்றிதழ்மூலம் இங்குள்ள மருத்துவக் கல்லுாரிகளில் வாய்ப்பு பெறும் நிலை உள்ளது. அவர்களுக்கு மருத்துவ இடங்கள் ஒதுக்கக்கூடாது” எனச் சிறப்புக் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டுவந்தார்.

இதற்குச் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் பதில் அளித்தார். “மருத்துவப் படிப்புகளுக்கு விண்ணப்பிக்கும் மாணவர்களின் விண்ணப்பங்களை, கண்கொத்தி பாம்பைப்போலக் கூர்ந்து கவனித்துவருகிறோம். கடந்த முறைபோன்று இந்த முறை எந்தத் தவறும் வந்துவிடக்கூடாது என்பதில் இந்த அரசு உறுதியாக இருக்கிறது. இதுவரை பெறப்பட்ட 39,013 விண்ணப்பங்களில் தீவிர கண்காணிப்புகளுக்குப் பிறகு 3,516 விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டுள்ளது" என அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

விஜயபாஸ்கர்
விஜயபாஸ்கர்

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் அதிகமான மருத்துவப் படிப்புக்கான காலியிடங்கள் உள்ளன. எனவே, இங்கு வெளிமாநில மாணவர்கள் போலி இருப்பிடச் சான்றிதழைக் கொடுத்து மருத்துவம் சேர முயல்கிறார்கள். இதைத் தடுக்கத் தனியாகக் குழு அமைத்து விண்ணப்பிக்கும் மாணவர்களின் பிறப்புச் சான்றிதழ், மாணவரின் பெற்றோர்களின் பிறப்புச் சான்றிதழ், மாணவர்களின் பெற்றோர் தமிழ்நாட்டில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ், மாணவர் மற்றும் பெற்றோர்களின் சாதிச் சான்றிதழ், நியாயவிலை அட்டை உள்ளிட்ட விவரங்கள் பெறப்பட்டுச் சரிபார்க்கப்படுகிறது. மேலும், மாணவர் மற்றும் பெற்றோரிடத்தில் பிரமாணப் பத்திரம் ஒன்றில் கையெழுத்து பெறப்படுகிறது. அந்தப் பிரமாணப் பத்திரத்தில், மாணவரின் விண்ணப்பத்தில் தெரிவிக்கப்பட்டுள்ள தகவல்கள் மற்றும் சமர்ப்பிக்கப்பட்டடுள்ள சான்றிதழ்கள் அனைத்தும் உண்மையானவை. அதில் ஏதாவது தவறு இருந்தால், மாணவரைத் தகுதி நீக்கம் செய்யலாம்; கிரிமினல் வழக்கும் தொடுக்கலாம். அதற்குச் சம்மதிக்கிறேன் என உறுதி கூறும் வாசகம் இடம் பெற்றுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதைத் தொடர்ந்து சமூகநலத் துறை குறித்த மானியக்கோரிக்கை நடைபெற்றது. இதில் தி.மு.க சார்பில் சேகர்பாபு பேசியபோது, “சமூகநலத் துறைகளின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் அதில் உள்ள குறைபாடுகள் குறித்தும் பேசினார். இறுதியில் திட்டங்களில் உள்ள குறைகளை விரைவில் வரவுள்ள தி.மு.க ஆட்சி பூர்த்தி செய்யும்" என்று பேசிமுடித்தார்.

“விரைவில் தி.மு.க ஆட்சிக்கு வரும்” என தி.மு.க உறுப்பினர் சேகர்பாபு சொன்னதற்கு, அ.தி.மு.க சார்பில் அமைச்சர் ஜெயக்குமார் எழுந்து பதிலளித்தார். அப்போது அவர், “உறுப்பினர் சேகர் பாபு 'தி.மு.க ஆட்சி விரைவில் வரும்' என்று சொன்னார். 'ஆட்சி வரும்... ஆனா வராது' என வடிவேல் பாணியில் பதில் அளிக்க, அவையில் அ.தி.மு.க உறுப்பினர்கள் மத்தியில் சிரிப்பலை எழுந்தது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

சமூகநலத் துறை மானியக்கோரிக்கையில் அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்த நிலையில், அடுத்து பேசிய தி.மு.க உறுப்பினர் பூங்கோதை ஆலடி அருணா, ``சமூகநலத் துறை அமைச்சரே படித்த மருத்துவர். அவர் துறைசார்ந்த கேள்விக்கு ஏன் மற்ற அமைச்சர்கள் குறுக்கிட்டு பதில் சொல்கிறீர்கள்? பெண் உரிமை பேசும் நீங்கள், ஏன் ஒரு பெண் அமைச்சரை பதிலளிக்க அனுமதி மறுக்குறீர்களா?" எனக் கேள்வி எழுப்பினார்.

உடனே முதல்வர் எடப்பாடி பழனிசாமி, "உறுப்பினர்களுக்குப் பதிலளிப்பது அமைச்சர்களின் கூட்டுப் பொறுப்பு என்றும், ஒரு கேள்விக்கு தொடர்புடைய அனைத்து அமைச்சர்களுக்கும் பதிலளிக்க வேண்டிய பொறுப்பு உள்ளதால்தான் பதிலளிக்கிறார்கள். இது கடந்த தி.மு.க ஆட்சியிலும் நடந்துள்ளது. தேவைப்பட்டால், அவைக்குறிப்பைப் பாருங்கள்" எனப் பதிலளித்தார்.