Election bannerElection banner
Published:Updated:

`சசிகலா வருகை... அ.தி.மு.க-வில் சில எட்டப்பன்கள்!’ - அமைச்சர் ஜெயக்குமார் காட்டம்

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

`சசிகலா வருகையால் அ.தி.மு.க -வுக்கு எந்தப் பதற்றமும் இல்லை. டி.டி.வி.தினகரனுக்குத்தான் சசிகலா வருகையால் பதற்றம்' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

சொத்துக்குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனை முடிந்து சசிகலா, இன்று பெங்களூரிலிருந்து சென்னை திரும்புகிறார். முன்னதாக தமிழக அமைச்சர்கள், சசிகலா அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்த அனுமதி இல்லை எனக் காவல்துறையில் புகார் அளித்தனர். இதைத் தொடர்ந்து தமிழகத்தில் சசிகலா காரில் அ.தி.மு.க கொடி அகற்றப்படும் எனக் கூறப்பட்டது. இந்தச் சூழலில் தமிழக எல்லைப்பகுதிக்கு முன்னதாக, மற்றொரு அ.தி.மு.க நிர்வாகியின் காரில் பயணம் செய்தார் சசிகலா. இதனால் தொடர்ந்து அவர் அ.தி.மு.க கொடியுடன் சென்னை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்.

அ.தி.மு.க கொடியுடன் சசிகலா
அ.தி.மு.க கொடியுடன் சசிகலா

இந்தநிலையில் தமிழக அமைச்சர் ஜெயக்குமார், இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், `அ.தி.மு.க-வுக்கும் சசிகலா தரப்பினருக்கும் எந்தத் தொடர்பும் கிடையாது. சசிகலாவும் தினகரனும் அ.தி.மு.க உறுப்பினர்கள் இல்லை. அதனால் அவர்கள் அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்துவதை ஏற்க முடியாது. கட்சியையும் கொடியையும் சசிகலா உரிமை கொண்டாட முடியாது. தேர்தல் ஆணையம், கட்சியின் ஒருங்கிணைப்பாளர் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளருக்குத்தான் அதிகாரம் வழங்கியிருக்கிறது. வழக்கு யார் வேண்டுமென்றாலும் போடலாம். வழக்கு தொடுத்தவருக்கே அது சொந்தம் என்று ஆகிவிடாது” என்றார்.

Live Updates: பெங்களுரு டு சென்னை... 23 மணி நேரப் பயணம்! - சென்னை திரும்பினார் சசிகலா

தொடர்ந்து பேசிய அமைச்சர் ஜெயக்குமார், ``எம்.ஜி.ஆர் காலம் தொட்டே அ.தி.மு.க எழுச்சியுடன்தான் இருக்கிறது. தற்போது, ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தலைமையில் கட்சி சிறப்பாகச் செயல்படுகிறது” என்றார். மேலும், ``கட்சியில் அனைவரும் ஒற்றுமையாகவே இருக்கிறார்கள். அமைச்சர்கள், மாவட்டச் செயலாளர்கள், அ.தி.மு.க தலைமை நிர்வாகிகள் ஒருமித்த கருத்துடன்தான் இருக்கிறார்கள். அ.தி.மு.க-வில் எந்த ஸ்லீப்பர் செல்லும் இல்லை” என்றார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

``அ.தி.மு.க கொடியைப் பயன்படுத்த சசிகலாவுக்கு எந்த உரிமையும் கிடையாது. அந்த விவகாரத்தில் காவல்துறை தனது கடமையைச் செய்துவருகிறது. சட்டப்படி மட்டுமே இந்த விவகாரத்தை அ.தி.மு.க அணுகிவருகிறது” என்றார். `சசிகலா வருகையால், அ.தி.மு.க வினருக்கு பதற்றம் ஏற்பட்டிருக்கிறதா?’ என்ற கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``சசிகலா வருகையால். அ.தி.மு.க -வுக்கு எந்தப் பதற்றமும் இல்லை. டி.டி.வி.தினகரனுக்குத்தான் சசிகலா வருகையால் பதற்றம். கடந்த இடைத்தேர்தலுக்கு முன்பே ஸ்டாலினை தினகரன் சந்தித்துப் பேசியிருக்கிறார். ஸ்டாலினின் பி டீம்தான் தினகரன். தமிழக இடைத்தேர்தலில் அ.தி.மு.க கொடிக்கும் சின்னத்துக்கும் எதிராகத்தான் அ.ம.மு.க போட்டியிட்டது. இப்போது எப்படி கட்சிக்கு உரிமை கோர முடியும்? ” என்றார்.

`அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இருக்கிறார்களா?’ என்ற கேள்விக்கு, ``அ.தி.மு.க-வில் ஸ்லீப்பர் செல்கள் இல்லை. சில எட்டப்பன்கள் மட்டுமே இருக்கிறார்கள்” என்றார்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு