Published:Updated:

`தி.மு.க-வில் விருப்பமனு கொடுக்கக்கூட ஆட்கள் இல்லை!' - அமைச்சர் ஜெயக்குமார்

`உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட எங்கள் கட்சியில் அதிகமாக விருப்பமனு கொடுக்கிறார்கள். தி.மு.க-வில் விருப்பமனு கொடுக்க ஆள் இல்லாததால் நாள்களை நீட்டித்துள்ளனர்' என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறியிருக்கிறார்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

உலக மீனவர் தினத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டம் குளச்சலில் நடக்கும் மீனவர் தின விழாவில் கலந்துகொள்ள தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் இன்று நாகர்கோவில் வந்தார். பின்னர், அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், ``தமிழகத்தில் உள்ள கடலோர மீனவர்கள் உள்நாட்டு மீனவர்கள் இருதரப்புமே இரு கண்கள். அவர்கள் சமூகம் கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற பல திட்டங்கள் போடப்பட்டுள்ளன. புதிய மீன்பிடி இறங்கு தளங்கள், மீன்பிடி துறைமுகங்கள் போன்றவை அமைத்துள்ளோம். மீனவர்களுக்கன பட்ஜெட்டில் பாதி பணம் குமரி மாவட்டத்துக்குத்தான் ஒதுக்கப்படுகிறது. கடல் நடுவே மீனவர்களுக்கு பிரச்னை வராமல் இருக்க எட்டரை கோடி ரூபாயில் மரைன் என்போர்ஸ் விங்க் தொடங்கப்பட உள்ளது. அவர்கள் காணாமல்போன மீனவர்களைக் கண்டுபிடிக்க நடவடிக்கை எடுப்பார்கள்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

மத்திய அரசின் கடல் ஒழுங்குமுறை ஆணையம் ஆகியவை வரைவு நிலையில் இருக்கலாம். மீனவர்களின் பாதுகாப்புக்கு இந்த அரசு உறுதுணையாக இருக்கும். குமரியில் காணாமல்போன மீனவர்களை மீட்க ஹெலிகாப்டர் தளம் அமைக்கும் திட்டம் தீவிர பரிசீலனையில் உள்ளது. ஆழ்கடலுக்குச் செல்பவர்கள் அதிகமாக கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் படகுக்கு ஜி.பி.எஸ் கொடுக்கும் திட்டம் உள்ளது. 20 படகுகளுக்கு ஒரு சேட்டிலைட் போன் வழங்கும் திட்டமும் உள்ளது. கேரளத்தில் ஒகி புயலில் இறந்த மீனவர்கள் குடும்பத்துக்கு அறிவித்த 20 லட்சம் ரூபாய் இன்னும் கொடுக்கவில்லை. நாம் பணமும் வேலை வாய்ப்பும் கொடுத்துவிட்டோம்.

`அப்போ டி.டி.வி.தினகரன் என்ன 24-ம் புலிகேசியா?’ - அமைச்சர் ஜெயக்குமார்

தமிழகத்தில் வடக்கில் ஒன்று தெற்கில் ஒன்று என இரண்டு தொகுதி இடைத்தேர்தலில் இமாலய வெற்றி பெற்றுவிட்டோம். வரும் உள்ளாட்சித் தேர்தலில் மட்டுமல்ல 2021 தேர்தலிலும் நாங்கள்தான் ஆட்சிக்கு வருவோம். சட்டசபைத் தேர்தலில் எம்.எல்.ஏ-வை மக்கள் தேர்ந்தெடுக்கிறார்கள், முதல்வரை எம்.எல்.ஏ-க்கள் தேர்ந்தெடுக்கிறார்கள். அதுபோல உள்ளாட்சியில் கவுன்சிலர்களே தலைவரைத் தேர்ந்தெடுப்பதால் அவர்களுக்கும் தலைவருக்கும் பிரச்னை வராது. உள்ளாட்சித் தேர்தல் என்றாலே தி.மு.க-வினருக்கு அலர்ஜி என்பதால், அவர்கள் இதை விரும்பாமல் உள்ளனர். உள்ளாட்சியில் போட்டியிட எங்கள் கட்சியில் அதிகமாக விருப்பமனு கொடுக்கிறார்கள். தி.மு.க-வில் விருப்பமனு கொடுக்க ஆள் இல்லாததால் நாள்களை நீட்டித்துள்ளனர்.

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

டி.டி.வி.தினகரன் கட்டெறும்பாகி, சிற்றெறும்பாகி இப்போது பாக்டீரியாவாக ஆகிவிட்டார். ஜாதி, மொழி, இன அரசியலுக்கு தமிழகத்தில் இடம் கிடையாது. அரசியல்வாதிகள் மதத்தை தொடக்கூடாது. முரசொலி அலுவலகம் பஞ்சமி நிலம் எனப் பேசியது பா.ம.க நிறுவனர் ராமதாஸ். தி.மு.க தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தில் தங்கள் தரப்பு விளக்கத்தைக் கொடுத்துள்ளது. அரசிடம் உள்ள ஆவணங்களை நாங்கள் ஒப்படைப்போம்" என்றார்.