Published:Updated:

`அப்போ டி.டி.வி.தினகரன் என்ன 24-ம் புலிகேசியா?’ - அமைச்சர் ஜெயக்குமார்

அதேபோல் இரண்டாயிரம் மூவாயிரம் கொடுத்து படத்துக்கு டிக்கெட் விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் தலைவரின் படமான உலகம் சுற்றும் வாலிபன், சுவரொட்டி ஒட்டாமலேயே 100 நாள்களுக்கு மேல் ஓடியது

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் சைதாப்பேட்டையில் உள்ள மீன்வளத்துறை அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``இடைத்தேர்தல் அ.தி.மு.க பெற்ற வெற்றியானது, தமிழ்நாட்டு மக்கள் அ.தி.மு.க அரசுக்கு அளித்த மகத்தான தீபாவளி பரிசு. இந்த வெற்றியின் மூலம் நரகாசுரன் அழிய வேண்டும் எனத் தமிழ்நாட்டு மக்கள் எண்ணுகின்றனர். மேற்குக் கடற்கரையில் மீன்பிடிக்க 294 படகுகள் சென்றுள்ளன.

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

அவர்களுக்குத் தகவல் தொடர்பு சாதனங்கள் மூலம் புயல் குறித்த தகவல் அளிக்கப்பட்டுள்ளது. அதில் 49 படகுகள் திரும்பவில்லை. அவர்களை மீட்பது குறித்து அண்டை மாநிலத்திடம் தமிழக அரசு கோரிக்கை வைத்துள்ளது. மத்திய அரசிடம் கோரிக்கை வைத்து கோவா பக்கம் உள்ள இரண்டு படகுகளை ஹெலிகாப்டர் மூலம் மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தீபாவளியை முன்னிட்டு, மீனவர் குடும்பத்தில் உள்ள ஒவ்வொரு ஆண்களுக்கும் ரூ.4,500 மற்றும் பெண்களுக்கு ரூ.4,500 கொடுக்கப்பட்டுள்ளது” என்றார்.

`பிகில், திகில் எதுவாக இருந்தாலும் சட்டம் ஒன்றுதான்!’- கடுகடுத்த ஜெயக்குமார்

அ.ம.மு.க-வின் புகழேந்தியை முதலமைச்சர் சந்தித்தது குறித்து, பேசிய அவர், ``புகழேந்தியை டி.டி.வி.தினகரன் 23-ம் புலிகேசி என விமர்சித்துள்ளார். அப்படியென்றால் தினகரன் என்ன 24-ம் புலிகேசியா?’' எனக் கேள்வி எழுப்பினார். மேலும், ``அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் ஒரு கட்சியே கிடையாது. லெட்டர்பேடு கட்சி. ஜெயலலிதாவின் படத்தை அவர்கள் கட்சிக் கொடியில் போடுவதற்கு எந்த தார்மிக உரிமையும் இல்லை. வேண்டுமென்றால் சசிகலாவின் படத்தைப் போட்டுக் கொள்ளட்டும்.

ஸ்டாலின்
ஸ்டாலின்

கிருஷ்ணகிரியில் பிகில் திரைப்படம் சிறப்புக் காட்சியின்போது ரசிகர்கள் அராஜகத்தில் ஈடுபட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது. ரகளையில் ஈடுபட்ட 35 பேர் மீது விசாரணை நடத்தி, சட்டப்படி அரசு நடவடிக்கை எடுக்கும். அதேபோல் இரண்டாயிரம் மூவாயிரம் கொடுத்து படத்துக்கு டிக்கெட் விற்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. எம்.ஜி.ஆர் போன்ற மக்கள் தலைவரின் படமான உலகம் சுற்றும் வாலிபன், சுவரொட்டி ஒட்டாமலேயே 100 நாள்களுக்கு மேல் ஓடியது. அப்போது ரசிகர்கள் பொதுமக்களுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படாத வண்ணம், வரிசையில் நின்று டிக்கெட் வாங்கிப் பார்த்தனர்” என்றார். இடைத்தேர்தல் குறித்து பேசுகையில்,``சீமான் தெருக்கோடிக்குச் சென்றுவிட்டார்; ஸ்டாலினுக்கு மக்கள் தகுந்த வாய்ப்பூட்டு போட்டுவிட்டனர்” என்று விமர்சித்தார்.