Published:Updated:

`வேல் யாத்திரையைக் கைவிடுவதுதான் பா.ஜ.க-வுக்கு நல்லது!’ - அமைச்சர் ஜெயக்குமார்

அமைச்சர் ஜெயக்குமார்
அமைச்சர் ஜெயக்குமார்

``பொதுமக்களின் நலன் கருதி வேல் யாத்திரையைக் கைவிடுவதுதான் பா.ஜ.க-வுக்கு நல்லது'' என மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்திருக்கிறார்.

சென்னை, புரசைவாக்கத்தில் நலத்திட்டங்கள் வழங்கும் விழாவில் மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்துகொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் ஜெயக்குமாரிடம் பல்வேறு விவகாரங்கள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. பா.ஜ.க-வின் வேல் யாத்திரைக்குத் தமிழக அரசு அனுமதி மறுத்த விவகாரம் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

வேல் யாத்திரை | பா.ஜ.க தலைவர் எல்.முருகன்
வேல் யாத்திரை | பா.ஜ.க தலைவர் எல்.முருகன்

அந்தக் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர் ஜெயக்குமார், ``கொரோனா பரவாமல் காக்க வேண்டியது அரசின் முக்கியமான கடமை. அந்தக் கடமையை உணர்ந்துதான், இந்த நேரத்தில் இது போன்ற நிகழ்ச்சிகள் தேவையில்லை என நாங்கள் முடிவெடுத்திருக்கிறோம். இதனால், கொரோனா பரவும் அபாயம் உள்ளது. அதை உணர்ந்து பொதுமக்கள் நலன்சார்ந்த விஷயம் என்பதால், வேல் யாத்திரையைக் கைவிடுவதுதான் அவர்கள் கட்சிக்கும் நல்லது; அவர்களுக்கும் நல்லது.

எழுவர் விடுதலை: ஜனாதிபதியிடம் சு.வெங்கடேசன் வலியுறுத்தல்; ஆளுநர், அமித் ஷாவுக்கு ஸ்டாலின் கடிதம்

அனைவருமே சட்டத்துக்குக் கட்டுப்பட்டவர்கள். சட்டத்துக்குக் கட்டுப்பட்டுத்தான் அனைவரும் இருக்கிறோம். சட்டத்தை மீறுபவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும். இதை பா.ஜ.க-வுக்கு மட்டும் சொல்லலை. இது எல்லாருக்கும் பொருந்தும்’’ என்றார்.

எழுவர் விடுதலை
எழுவர் விடுதலை

எழுவர் விடுதலை விவகாரம் குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர், ``ஏற்கெனவே அமைச்சரவையைக் கூட்டி இந்த விவகாரத்தில் ஒரு முடிவெடுத்திருக்கிறோம். அதை ஆளுநருக்கு அனுப்பிவைத்திருக்கிறோம். இப்போது உச்ச நீதிமன்றம் ஒரு கருத்தைத் தெரிவித்திருக்கிறது. அந்தக் கருத்தின் அடிப்படையில், ஆளுநர் இதையெல்லாம் கவனத்தில்கொண்டு விரைவில் ஒரு நல்ல முடிவை அறிவிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது’’ என்று பதிலளித்தார்.

அதேபோல், ``சமுதாயத்துக்குக் கேடு விளைவிக்கும் ஆன்லைன் சூதாட்டத்துக்கு தமிழகத்தில் தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்று குறிப்பிட்ட அமைச்சர் ஜெயக்குமார், ``இது குறித்து சட்ட நிபுணர்களுடன் ஆலோசித்து தடைவிதிக்க நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றும் தெரிவித்தார்.

ஆன்லைன் ரம்மி
ஆன்லைன் ரம்மி
கொரோனா பரவல்; உயர் நீதிமன்ற உத்தரவு! - பா.ஜ.க வேல் யாத்திரைக்கு அனுமதி மறுத்த தமிழக அரசு

திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை நவம்பர் 6 - டிசம்பர் 6 வேல் யாத்திரை பயணம் மேற்கொள்ள, தமிழக பா.ஜ.க தலைவர் எல்.முருகன் திட்டமிட்டிருந்தார். இந்த யாத்திரைக்குத் தடை கோரி தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசுத் தரப்பில், கொரோனா இரண்டாம், மூன்றாம் அலை ஏற்பட வாய்ப்பிருப்பதாக எச்சரிக்கப்பட்டிருக்கும் நிலையில், வேல் யாத்திரைக்கு அனுமதியளிக்க முடியாது என்று தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அந்த வழக்குகளை சென்னை உயர் நீதிமன்றம் முடித்துவைத்தது.

அடுத்த கட்டுரைக்கு