Published:Updated:

ரேபிட் கிட் விலை, ஸ்டாலின் அரசியல், மத்திய அரசு நிதி... என்ன சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்?

ஜெயக்குமார்
ஜெயக்குமார்

``தமிழகத்தை விடவும் குறைந்த விலையில், ரேபிட் கிட்-களை வாங்கியுள்ளது சத்தீஸ்கர் மாநிலம். இதற்குப் பின்னே நிறைய காரணங்கள் உள்ளன. அவை பற்றியெல்லாம் எனக்குத் தெரியாது'' என்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்.

கொரோனா பிரச்னையை முன்வைத்து தி.மு.க - அ.தி.மு.க கட்சிகளிடையே நடைபெற்று வரும் குடுமிப்பிடி சண்டைகள், கிறுகிறுக்க வைக்கின்றன. `கொரோனா பரவலைத் தடுக்கும் விதமாக சட்டசபையை உடனடியாக மூடுங்கள்' என்று தமிழக அரசுக்கு தி.மு.க., கோரிக்கை விடுத்ததில் ஆரம்பித்த பிரச்னை, `நிதி ஒதுக்கீடு, நிவாரணத் தடை, ரேபிட் கிட் முறைகேடு' என அடுத்தடுத்த நிகழ்வுகளில் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளாக வளர்ந்து நிற்கின்றன!

இந்த நிலையில், மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரிடம் பேசினேன்....

கொரோனா வைரஸ்
கொரோனா வைரஸ்

``5 லட்சம் `ரேபிட் கிட்' தேவைப்படுகிற இடத்தில், வெறும் 37,000 கிட் மட்டுமே இருக்கின்றன என்பதுவே நிலைமை நம் கட்டுக்குள் இல்லை என்பதைத்தானே காட்டுகிறது?''

``முதலில் ஒரு விஷயத்தைத் தெளிவுபடுத்திக்கொள்ளுங்கள்... ஒருவருக்கு கொரோனா பாதித்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கான அடிப்படைப் பரிசோதனை என்பது பி.சி.ஆர் (Polymerase chain reaction ) பரிசோதனைதான்.

அடிப்படைத் தேவையான பி.சி.ஆர் டெஸ்ட் செய்துகொள்வதற்கு, போதுமான வசதிகள் தமிழகத்தில் இருப்பதால், நிலைமை நம் கட்டுக்குள்தான் இருக்கிறது!''

``இரண்டரை கோடி மக்கள் தொகையைக் கொண்ட சத்தீஸ்கர் மாநிலம் 75,000 ரேபிட் கிட்களை வாங்கியிருக்கிறது. ஏழரைக் கோடி மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டில் வெறும் 37,000 கிட்கள் போதுமானதென்று எப்படிச் சொல்கிறீர்கள்?''

``கொரோனா தாக்குதலின் 3-வது கட்டமான சமூகப் பரவலை அடிப்படையாக வைத்துத்தான் நாமும் 5 லட்சம் கிட்களை கேட்டிருக்கிறோம். சத்தீஸ்கர் மாநிலம், இப்போது எந்த நிலையில் இருக்கிறதென்பது நமக்குத் தெரியவில்லை. ஒருவேளை அங்கே அதிகமான எண்ணிக்கையில் மக்கள் பாதிக்கப்பட்டிருக்கலாம். அதைக் கருத்திற்கொண்டு அம்மாநில மருத்துவ நிபுணர்களது ஆலோசனையின்படி, அதிகமான எண்ணிக்கையில் அவர்கள் கொள்முதல் செய்திருக்கலாம். ஆனால், நம் மாநிலத்தில், மிகச்சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து, கொரோனாவைக் கட்டுக்குள் வைத்திருக்கிறோம். எனவே, ரேபிட் கிட் கொள்முதல் எண்ணிக்கைகளை வைத்துக்கொண்டு மாநிலங்களை ஒப்பிட முடியாது!''

Covid 19 Testing
Covid 19 Testing

``அப்படியென்றால், தமிழ்நாடு 2-வது கட்டத்தில் உள்ளது; சத்தீஸ்கர் மாநிலம் சமூகப் பரவல் நிலைக்குச் சென்றுவிட்டது என்கிறீர்களா?''

``அப்படிச் சொல்லவில்லை. சமூகப் பரவல் எப்படியிருக்கும் என்ற எதிர்பார்ப்பை கருத்திற்கொண்டு, அம்மாநில மருத்துவ நிபுணர்கள் கொடுத்திருக்கும் ஆலோசனைகளை அடிப்படையாக வைத்து, அதிகமான எண்ணிக்கையில் அவர்கள் கொள்முதல் செய்திருக்கலாம் என்று சொல்கிறேன்.''

``தமிழக அரசு வாங்கியுள்ள ரேபிட் கிட் கொள்முதல் விலையில் ஏன் இத்தனை குளறுபடிகள்?''

``இன்றைக்கு எல்லாமே இணையம் வழியே வெளிப்படையாக நடைபெறுகிற ஒப்பந்தங்கள்தான். சட்ட ரீதியிலாக நடைபெறும் இந்த ஒப்பந்தங்களில் யாரும் தவறு செய்வதற்கு வாய்ப்பே இல்லை. எதிர்க்கட்சிகள்தான் வேண்டுமென்றே உள்நோக்கத்துடன் இந்த அரசு மீது குற்றம் சுமத்திக்கொண்டே இருக்கின்றன!''

கோவிட் - 19
கோவிட் - 19

``சத்தீஸ்கர் மாநிலம் 337 ரூபாய் விலையில் வாங்கியிருக்கும் ரேபிட் கிட்டை, தமிழக அரசு 600 ரூபாய் விலையில் வாங்கியிருப்பது ஏன்?''

``மத்திய அரசின் `மருத்துவ சேவைகள் நிறுவனம்' வழியாகத்தான் இந்த 'கிட்'களை நாம் வாங்கியிருக்கிறோம். எனவே, இதில் கடுகளவும் முறைகேடு நடந்திருக்க வாய்ப்பில்லை. மற்ற மாநிலங்கள் இதைவிடவும் குறைந்த விலையில் வாங்கியிருக்கிறார்கள் என்றால், அவர்கள் எந்த நாட்டில், எந்த நிறுவனத்திடமிருந்து வாங்கினார்கள், அங்கே என்ன நடந்தது என்பதெல்லாம் எனக்குத் தெரியாது.''

``மத்திய அரசு, தமிழ்நாட்டை தொடர்ந்து புறக்கணிக்கிறது. மாநில ஆளுங்கட்சியாக அதைத் தட்டிக்கேட்பதில் உங்களுக்கு தயக்கம் ஏன்?''

``கொரோனாவைப் பொறுத்தவரை, இது ஒரு மாநிலம் சம்பந்தப்பட்ட பிரச்னை அல்ல. அனைத்து மாநிலங்களிலிருந்தும் கொரோனா விரட்டியடிக்கப்பட்டால்தான், `கொரோனா இல்லாத நாடு இந்தியா' என அறிவிக்க முடியும். எனவே, இதில் மத்திய அரசு, அரசியல் செய்யவேண்டிய அவசியமே கிடையாது. நீங்களும் அதுபோன்ற எண்ணத்துக்கு ஆளாக வேண்டாம்!''

`மருந்து வாங்கச் சென்றவர் சடலமாகத் திரும்பிய சோகம்’ – போலீஸார் செயலால் சாலையில் திரண்ட மக்கள்
நரேந்திர மோடி
நரேந்திர மோடி

``கொரோனா நிவாரண நிதியாக நாம் 9,000 கோடி கேட்ட இடத்தில், வெறும் 510 கோடி கிடைக்கிறது; சோதனைக் கருவிகளும் குறைவாகவே கிடைக்கிறதென்றால் அது பாரபட்சம் இல்லையா?''

``கொரோனா விஷயத்தில், பாரபட்சம் பார்க்கவேண்டிய அவசியம் மத்திய அரசுக்குக் கிடையாது. ஏனெனில், இது கொரோனாவுக்கு எதிராக நாடு தழுவிய அளவில், மக்கள் செய்கிற புரட்சி! எனவே, இப்போதைய சூழ்நிலையில் உள்ள அளவீடு, எதிர்காலத்தில் ஏற்படவிருக்கிற கணக்கீடு என எல்லாவற்றையும் அலசி ஆராய்ந்து சீர்தூக்கிப் பார்த்துத்தான் ஒவ்வொரு மாநிலத்துக்குமான தேவையை மத்திய அரசு பூர்த்தி செய்துவருகிறது.''

``கஜா, ஒகி என தொடர்ச்சியாக பேரிடர் நிவாரண நிதி குறைவாகவே தரப்படுகிறது. `தமிழகத்துக்குத் தரவேண்டிய நிதியை மத்திய அரசு உடனே வழங்க வேண்டும்' என தமிழக நிதி அமைச்சர் ஓ.பன்னீர்செல்வமே கேட்டுள்ளாரே?''

``கொரோனா நிவாரணமாக 500 கோடிக்குப் பிறகு, மருத்துவத் தேவைக்காக 300 கோடி ரூபாயும் தமிழகத்துக்கு கிடைத்திருக்கிறது. இவையெல்லாமே முதற்கட்ட நிதிகள்தான். மத்திய அரசைப் பொறுத்தவரையில், மாநிலம் வாரியாக பாதிப்புகளைக் கணக்கெடுத்துத்தான் நடவடிக்கை எடுக்கிறார்கள். கஜா, ஒகி மாதிரியான பேரிடரைப் போன்றதல்ல கொரோனா. எனவே, இவ்விஷயத்தில் மத்திய அரசு, ஓரவஞ்சனையாக நடந்துகொள்ளாது.

ப.சிதம்பரம் போன்றவர்கள் வெளியில் இருந்துகொண்டு, இலவச ஆலோசனைகளை எளிதாக வழங்கிவருகிறார்கள். ஆனால், ஆட்சிப் பொறுப்பில் இருந்துகொண்டு நிர்வகிக்கும்போதுதான் அதன் கஷ்டங்கள் என்னவென்று தெரியவரும். மத்திய நிதி அமைச்சராக ப.சிதம்பரம் இருந்தபோது, பேரிடர் நிதியாக மாநிலங்களுக்கு எவ்வளவு கொடுத்தார் என்பதை இப்போது சொல்வாரா?''

ஓ.பன்னீர்செல்வம்
ஓ.பன்னீர்செல்வம்

``கொரோனா குறைவாகப் பாதித்துள்ள வட மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கீடும், அதிக பாதிப்புக்குள்ளான தமிழகத்துக்கு குறைவான நிதி ஒதுக்கீடும் செய்தது ஏன் என உயர் நீதிமன்றமே மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறதே?''

``ஆமாம்... அந்த வழக்கில், மத்திய அரசிடம் விளக்கம் கேட்டிருக்கிறதுதான். அவர்களும் அதற்கான பதிலை அளித்துவிடுவார்கள். எங்களைப் பொறுத்தவரையில், தமிழக உரிமைகளை ஒருநாளும் நாங்கள் விட்டுக்கொடுத்ததில்லை. உரிமையை மீட்டெடுப்பதற்கான அழுத்தங்களைத் தொடர்ந்து கொடுத்துவருகிறோம். இந்த தொடர் நடவடிக்கையின் பலனாக மத்திய அரசிடமிருந்து நிதி உதவியைப் பெற்று, மக்களுக்குத் தேவையான திட்டங்களையும் சரிவர செய்துவிடுவோம் என்பது மட்டும் உறுதி.''

``3 நாளில், கொரோனா முடிவுக்கு வரும் என்றார் நம் முதல்வர். ஆனால் தமிழ்நாடு, 3-வது கட்டத்தை நெருங்கிவிட்டதாகத்தானே அறிகுறிகள் தென்படுகின்றன?''

``3-வது கட்டத்துக்கு தமிழ்நாடு போய்விடக் கூடாது என்பதற்காகத்தான், தேவைகளை முன்கூட்டியே அறிந்து தடுப்பு நடவடிக்கைகளைச் செய்துகொண்டிருக்கிறோம். ஒருவேளை அப்படியொரு நிலை ஏற்பட்டுவிட்டாலும்கூட, அப்போதும் அதை எதிர்கொண்டு தடுப்பதற்காக என்னென்ன முன்னெச்சரிக்கைகளைச் செய்ய வேண்டும் என்பதையும் கருத்திற்கொண்டுதான் செயல்பட்டு வருகிறோம். எனவே, எதையும் சமாளிக்கிற திறமை தமிழக அரசுக்கு உண்டு! ஏனெனில், கஜா, ஒகி, வெள்ளம் என எத்தனையோ பேரிடர்களை எதிர்கொண்டு மீண்டுவந்த அனுபவம் தமிழகத்துக்கு உண்டு.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்
`உழைக்கப் பயந்தா குடும்பத்தைக் காப்பாத்த முடியுமா?’- திருவையாறு `மாத்தியோசி’ மாற்றுத் திறனாளி

``நோயிலும் அரசியல் செய்கிறார் என தி.மு.க தலைவரை விமர்சிக்கிறார் முதல்வர். ஆனால், `தி.மு.க நிவாரணம் வழங்க அரசு தடை விதிக்கக் கூடாது' என்று நீதிமன்றம் சொல்கிறது... அரசியல் செய்வது யார்?''

``நிவாரணம் வழங்குவதற்கு அரசியல் கட்சிகளுக்கோ, தன்னார்வலர்களுக்கோ யாருமே தடை சொல்லவில்லை. ஆனால், வேண்டுமென்றே இதில் அரசியல் செய்வதற்காக, எதிர்க்கட்சித் தலைவர்தான், `பாருங்கள் மக்களே... நான் உங்களுக்கு உதவி செய்ய வருகிறேன். அதை இந்த அரசு தடுக்கிறது' என்று பிரசாரம் செய்தார். ஆக, இந்த அரசுக்குக் கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டுமென்றே திட்டமிட்டு அரசியல் செய்தவர் அவர்தான்.

வெள்ளம், சுனாமி போன்ற பேரிடர்களின்போது, அரசோடு சேர்ந்து தன்னார்வலர்களும் பிற கட்சிகளும் மக்களுக்கு நிவாரணம் வழங்கும்போது யாரும் தடுக்கவில்லையே. ஆனால், கொரோனா என்பது தொற்று நோயாக இருக்கும்போது, நோய் பாதிப்பு உள்ளவர்களேகூட விவரம் தெரியாமல் மக்களிடையே நிவாரணம் கொடுக்கவந்து, சமூகப் பரவலுக்கு வித்திட்டார் என்றால், நிலைமை இன்னும் மோசமாகிவிடுமே...! இந்த நல்லெண்ணத்தில்தான் அரசு, நிவாரணம் வழங்குவதை முறைப்படுத்தியது. ஆனால், அரசியல் காரணங்களுக்காக இதைக்கூட எதிர்க்கட்சித் தலைவர் திசை திருப்புவது ஆரோக்கியமான அரசியல் அல்ல!''

அடுத்த கட்டுரைக்கு