Published:Updated:

`ட்ரம்ப் கருத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் இந்தியர்களாகக் கருதிக்கொள்ள வேண்டாம்!' அமைச்சர் ஜிதேந்திர சிங்

`இந்தியாவின் தேசத்தந்தை மோடி’ என்ற ட்ரம்பின் கருத்தை ஏற்காதவர்கள் தங்களை இந்தியர்கள் எனக் கருத வேண்டாம்’

Jitendra Singh
Jitendra Singh

பிரதமர் நரேந்திர மோடி 7 நாள் அரசுமுறைப் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். அங்கு சென்றவர், பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டார். குறிப்பாக, ஹூஸ்டன் நகரில் அவர் கலந்துகொண்ட`ஹௌடி மோடி’ நிகழ்ச்சி இந்தியர்களின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து, அமெரிக்க அதிபரும், மோடியும் சந்தித்துக்கொண்டனர். இந்தச் சந்திப்பு தொடர்பாக பேசிய அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ``இந்தியாவுக்குப் பிரதமராக மோடி வருவதற்கு முன் அமெரிக்காவின் உறவுகளும் சரியில்லாமல் இருந்தது. ஆனால் மோடி, பிரதமராக வந்தபின் மக்கள் அனைவரையும் ஒரு தந்தையைப் போல் ஒருங்கிணைத்துள்ளார். அவரை இந்தியாவின் தந்தை என்று அழைக்கலாம்" என்று குறிப்பிட்டார்.

`மோடி விருப்பப்படி மக்கள் பணியாற்றுவேன்!’ - பிரதமரின் பிறந்தநாள் வாழ்த்தும் ப.சிதம்பரத்தின் பதிலும்!
modi - trump
modi - trump

இந்த நிலையில், டெல்லியில் அஞ்சல்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் மத்திய அமைச்சர் ஜிதேந்திர சிங் கலந்துகொண்டார். அப்போது பேசிய அவர், ``வெளிநாட்டில் வாழும் தாங்கள் இந்தியர் என்பதில் பெருமைகொள்ள வேண்டும். பிரதமர் நரேந்திர மோடியின் ஆளுமை மற்றும் தனிப்பட்ட அணுகுமுறையால்தான் இதுசாத்தியமானது. அமெரிக்கா மற்றும் அதன் அதிபர் தரப்பிலிருந்து தைரியமான, நடுநிலையான கருத்து ஒன்று வெளிப்பட்டுள்ளது. இதன் அடிப்படையில், அரசியல், சித்தாந்தங்களைக் கடந்து, அனைவரும் இந்தியர்கள் என்று பெருமைப்பட வேண்டும்.

அமெரிக்க அதிபர் ஒருவர் முதல்முறையாக இதுபோன்ற பெருமைமிகு வார்த்தையை இந்தியப் பிரதமர் ஒருவரைப் பார்த்துப் பயன்படுத்தியுள்ளார். உலகில் எந்தத் தலைவரைப் பார்த்தும் பேசவில்லை. இந்தியாவின் தந்தை பிரதமர் மோடி என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பேசியதைப் பெருமையாக நினைக்காதவர்களை இந்தியர்களாகக் கருதவேண்டாம்'' என்றார்.

Jitendra Singh
Jitendra Singh

தொடர்ந்து, `நாட்டுக்கு ஒரே ஒரு தேசத்தந்தைதான் இருக்க வேண்டும்’ என காங்கிரஸ் கூறியது குறித்து மத்திய அமைச்சரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர், ``காங்கிரஸ் ட்ரம்புடன் வாக்குவாதம் நடத்தட்டும்” என்றார். மேலும்,``பயங்கரவாதத்தில் பாகிஸ்தான் பங்கு இருக்காது என நம்பியிருந்த நாடுகள், தற்போது இந்தியாவின் கூற்றை ஏற்றுக்கொள்கின்றன. இதற்கும் மோடிதான் காரணம்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.