Published:Updated:

`ஸ்டாலின் காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான்!' - கடம்பூர் ராஜு

இ.கார்த்திகேயன்

`வ.உ.சி-யின் சொந்த ஊரான ஓட்டப்பிடாரத்தில், அடுத்த ஆண்டு பிறந்தநாளுக்குள் அவரது பெயரில் நீதிமன்றம் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுவருகிறது” என்று அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்துள்ளார்.

வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை
வ.உ.சி சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை

கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனாரின் 148-வது பிறந்தநாள் விழா, வ.உ.சி பிறந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் உள்ள அவருடைய பிறந்த இல்லத்தில் நடைபெற்றது. இவ்விழாவில், செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜு கலந்துகொண்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்தார்.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

தொடர்ந்து, ரூ.67.78 லட்சம் மதிப்புள்ள நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார். இதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர்,``அ.தி.மு.க-வின் தேர்தல் அறிக்கையில் கூறியதுபோல ஓட்டப்பிடாரத்தில் வ.உ.சி-யின் பெயரில் நீதிமன்றம் நிச்சயம் அமைக்கப்படும். இதற்கான அறிவிப்பை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சட்டமன்றத்தில் அறிவித்துள்ளார். அடுத்த ஆண்டு வ.உ.சி பிறந்தநாளுக்குள் ஓட்டப்பிடாரத்தில் நீதிமன்றம் அமைக்கப்படும். அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தமிழக அமைச்சர்களின் வெளிநாட்டுப் பயணம் என்பது திட்டமிட்ட பயணமாகும். வெளிநாடுகளில் பால் உற்பத்தி, கல்விமுறை உள்பட பல்வேறு துறைகளிலும் அவர்கள் எவ்விதமான சீர்திருத்தங்களை, நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்கிறார்கள் என்பதைப் பற்றி தெரிந்து கொள்வதற்காக அமைச்சர்கள் வெளிநாடு சென்றுள்ளனர். எனவே, தமிழக அமைச்சர்களின் பயணம் என்பது இன்பச் சுற்றுலா அல்ல.

அமைச்சர் கடம்பூர் ராஜூ
அமைச்சர் கடம்பூர் ராஜூ

வெளிநாட்டுப் பயணத்தால் தமிழகத்துக்கு நன்மை கிடைக்கும் எனில், தி.மு.க சார்பாக முதலமைச்சருக்கு பாராட்டுவிழா நடத்தப்படும் என தி.மு.க தலைவர் ஸ்டாலின் கிண்டலாகக் கூறியுள்ளார். அவர், ஏற்கெனவே துணை முதல்வராக இருந்தவர். ஸ்டாலின் அரசியலுக்காக எதையும் பேசக்கூடாது‌.

அவருக்கு பாராட்ட மனமில்லை என்றாலும், அரசின் செயல்களை விமர்சிக்காமல் இருந்தால் அவருக்கும் நல்லது; மக்களுக்கும் நல்லது. `பொறுத்தார் பூமி ஆள்வார்' என்றும் ஸ்டாலின் கூறிவருகிறார். அவர், காலம் முழுவதும் பொறுத்துக்கொண்டே இருக்க வேண்டியதுதான். அதைத்தான் மக்களும் விரும்புகின்றனர்" என்றார்.