Published:Updated:

கர்நாடகா, கோவா நிலைமை தமிழகத்துக்கு வருமா? - கடம்பூர் ராஜு பதில்

இ.கார்த்திகேயன்

``இந்தியாவில் நீட் தேர்வு குறித்து அரசிதழில் வெளியிட்டதே காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணிதான். தற்போது அவர்களே எதிர்ப்பு தெரிவிக்கிறார்கள்” என அமைச்சர் கடம்பூர் ராஜு தெரிவித்தார்.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

தூத்துக்குடி மாவட்டம், கட்டலாங்குளத்தில் உள்ள சுதந்தரப் போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 309-வது பிறந்தநாள் விழா இன்று நடைபெற்றது. தமிழக அரசு சார்பில் நினைவு மண்டபத்தில் உள்ள அழகுமுத்துக்கோனின் திருவுருவச் சிலைக்கு அமைச்சர் கடம்பூர் ராஜு மாலை அணிவித்தார். இதைத் தொடர்ந்து பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.

கடம்பூர் ராஜு
கடம்பூர் ராஜு

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``வீரன் அழகுமுத்துக் கோன் அரண்மனையைப் பராமரிக்கவும், அவரின் வாரிசுதாரர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதற்கும் அரசு பரிசீலனை செய்யும். தமிழகத்தில் எந்தவொரு பிரச்னைக்கும் உடனுக்குடன் காவல்துறை நடவடிக்கை எடுத்துவருகிறது. ஆணவக் கொலைகள் ஆங்காங்கே உள்ள நிலைமைகளுக்கு ஏற்ப உணர்ச்சிபூர்வமான நிலையில் திடீரென ஏற்படுகிறது. ஆனாலும், இப்படிப்பட்ட நிலைகள் பெரிதாக நடக்காமல் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிட்டுப் பார்க்கும்போது தமிழகத்தில் குற்றங்களின் எண்ணிக்கை குறைந்துள்ளது.

இந்தியாவில் நீட் தேர்வு குறித்து அரசிதழில் வெளியிட்டவர்களே காங்கிரஸ் மற்றும் தி.மு.க கூட்டணி கட்சியினர்தான். அப்போதே முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அ.தி.மு.க எம்.பி-க்கள் எதிர்த்தனர். எனவே, நீட் தேர்வுக்கு வித்திட்டவர்கள் தி.மு.க - காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசுதான். தற்போது அவர்களே எதிர்க்கிறார்கள். உச்சநீதிமன்ற வழிகாட்டுதலின்படி தற்போது பா.ஜ.க அரசு நடைமுறைப்படுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் கடம்பூர் ராஜு
அமைச்சர் கடம்பூர் ராஜு

நீட் தேர்வு குறித்து கடந்த ஒரு வாரமாக சட்டமன்றத்தில் பெரும் விவாதமே நடந்துவருகிறது. டி.டி.வி.தினகரன் சட்டமன்ற உறுப்பினராக உள்ளார். அவருக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால், அவரது வாதத்தை சட்டமன்றத்துக்கு வந்து பேசியிருக்கலாம். சட்டமன்ற நடவடிக்கையில் பங்கு பெறாமல் வெளியே கூறும் கருத்துகளுக்கெல்லாம் நாங்கள் எப்படி பதிலளிக்க முடியும்” என்றவரிடம், ``கர்நாடகா, கோவா நிலைமை தமிழகத்துக்கு வருமா” எனக் கேட்டதும், `` 2021 வரை அ.தி.மு.க ஆட்சிதான், அதன் பின்பும் எங்கள் ஆட்சிதான் தொடரும். தமிழகத்தில் என்றுமே திராவிடக் கட்சிகளின் ஆட்சிதான் நீடிக்கும்” என்றார்.