Election bannerElection banner
Published:Updated:

`95% நுரையீரல் பாதிப்பு; அமைச்சர் காமராஜுக்கு இது மறுபிறவி!’ - சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர்

அமைச்சர் விஜயபாஸ்கர் - செய்தியாளர் சந்திப்பு
அமைச்சர் விஜயபாஸ்கர் - செய்தியாளர் சந்திப்பு

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்த உணவுத்துறை அமைச்சர் காமராஜ் குணமடைந்ததாகவும், நாளை மருத்துவமனையிலிருந்து டிஸ்சார்ஜ் செய்யப்படவிருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது.

கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட உணவுத்துறை அமைச்சர் காமராஜ், சென்னை ராஜாஜி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார். உடல்நலம் மோசமடையவே, அமைந்தகரையிலுள்ள எம்.ஜி.எம் தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு வென்டிலேட்டர் உதவியோடு தீவிர சிகிச்சை வழங்கப்பட்டது.

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

அமைச்சரின் உடல்நிலையில் நல்ல முன்னேற்றம் ஏற்படவே, கடந்த ஜனவரி 30-ம் தேதி தீவிர சிகிச்சைப் பிரிவிலிருந்து சாதாரண வார்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அவருக்கு மேற்கொள்ளப்பட்ட கொரோனா பரிசோதனையில், அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்பது உறுதிசெய்யப்பட்டிருக்கிறது. விரைவில் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்று கூறப்பட்டது.

தீவிர சிகிச்சையில் அமைச்சர் காமராஜ்: முதல்வர், துணை முதல்வர், மருத்துவமனை வருகை! #NowAtVikatan

அமைச்சர் காமராஜின் உடல்நிலை குறித்து விவரிக்க மருத்துவமனையில் சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், மருத்துவமனை மருத்துவர்கள் அனைவரும் செய்தியாளர்களைச் சந்தித்தனர். அப்போது பேசிய விஜயபாஸ்கர், ``அரசு மருத்துவர்கள் மற்றும் தனியார் மருத்துவர்களின் உழைப்பால் அமைச்சர் காமராஜின் உடல்நலத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டிருக்கிறது. 95 சதவிகித நுரையீரல் பாதிப்புடன் இருந்த அவர் மறுபிறவி எடுத்திருக்கிறார். எவ்வளவு பாதிப்பு இருந்தாலும் ஒருவரை மீட்க முடியும் என்ற நம்பிக்கை எங்களுக்கு வந்திருக்கிறது. இது எங்களுக்கு மிகவும் சவாலான அனுபவம். அவர் நல்ல உடல்நலத்துடன் இருக்கிறார். இன்று மாலை அல்லது நாளை காலை டிஸ்சார்ஜ் செய்யப்படுவார்" என்று தெரிவித்தார்.

அமைச்சரின் காமராஜின் மகன் இனியன்
அமைச்சரின் காமராஜின் மகன் இனியன்

தொடர்ந்து பேசிய அமைச்சர் காமராஜின் மகன் இனியன், ``எங்களுக்கு ராஜாஜி அரசு மருத்துவமனையில் நல்ல சிகிச்சை வழங்கப்பட்டது. எக்மோ சிகிச்சைக்காகத்தான் அப்பாவை எம்.ஜி.எம் கொண்டு வந்தோம். அதிர்ஷ்டவசமாக எக்மோ சிகிச்சை தேவைப்படவில்லை. `அப்பா மீண்டுவிடுவார். கவலைப்படாதே’ என்று முதல்வர் தொலைபேசியில் ஆறுதல் தெரிவித்தார். துணை முதல்வர், சுகாதாரத்துறை அமைச்சர் எங்களுக்குத் தொடர்ந்து ஊக்கமளித்தனர்" என்று பேசினார்.

அமைச்சர் காமராஜ்
அமைச்சர் காமராஜ்

சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் அமைச்சர் காமராஜை நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு