Published:Updated:

` சலங்கையைக் கட்டுனா, மணிக்கணக்கா ஆடுவேன்!’ - விக்ரவாண்டியில் நடனமாடிய அமைச்சர் கருப்பணன்

பறை இசைக்கு ஏற்ப பொதுமக்கள் மத்தியில் இளைஞர்களுடன் அமைச்சர் கருப்பணன் நடனமாடி வாக்கு சேகரித்தது வைரலானது.

நடனமாடும் அமைச்சர் கருப்பணன்
நடனமாடும் அமைச்சர் கருப்பணன்

தமிழகத்திலுள்ள நாங்குநேரி மற்றும் விக்கிரவாண்டி தொகுதிகளுக்கு வருகிற 21-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்த இடைத்தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற்றாக வேண்டுமென தி.மு.க-வும்., அ.தி.மு.க-வும் களத்தில் இறங்கி வேலை செய்துவருகின்றனர். இரு கட்சிகளின் தலைவர்களும் வெற்றி குறித்தான கலக்கத்தில் இருக்க, வாக்கு சேகரிக்கும் கட்சி நிர்வாகிகள், அமைச்சர்கள், எம்.எல்.ஏ-க்கள் ஆகியோர் அதைப்பற்றி பெரிதாக அலட்டிக் கொள்ளாமல் கலகலப்பாகப் பிரசாரம் செய்துவருகின்றனர்.

நடனமாடும் அமைச்சர் கருப்பணன்
நடனமாடும் அமைச்சர் கருப்பணன்

அந்தவகையில், கடந்த சில நாள்களுக்கு முன்பு விக்கிரவாண்டி தொகுதியில் அ.தி.மு.க சார்பில் போட்டியிடும் முத்தமிழ்ச்செல்வனை ஆதரித்து அமைச்சர் கருப்பணன் பிரசாரம் மேற்கொண்டார். அவர் விக்கிரவாண்டி தொகுதியிலுள்ள செம்மேடு ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் வாக்குச் சேகரித்து பிரசாரம் மேற்கொள்ள வந்தார். அவரை பறை இசையடித்து நிர்வாகிகள் வரவேற்றனர்.

பறை இசை ஏற்படுத்திய உற்சாகத்தை கட்டுப்படுத்த முடியாத அமைச்சர் கருப்பணன் ஒருகட்டத்தில் நடனமாடத் தொடங்கினார். பறை இசைக்கு ஏற்ப இளைஞர்களுடன் சேர்ந்து உற்சாகமாக நடனமாடி அமைச்சர் வாக்கு சேகரித்த வீடியோ சமூக வளைதளங்களில் பெரும் வைரலானது.

வாக்கு சேகரித்து முடித்துவிட்டு ஓய்வில் இருந்த அமைச்சர் கருப்பணனிடம் இதுகுறித்து பேசினோம். ``எங்க கட்சியோட வேட்பாளரை ஆதரிச்சு ஓட்டு கேட்க அந்த ஊருக்கு போயிருந்தேன். மேள, தாளத்தோட பொதுமக்களிடம் வாக்கு கேட்டு போய்க்கிட்டு இருந்தோம். அப்போது, ஒரு இடத்துல இருந்த இளைஞர்கள் சிலர் என்கிட்ட, `அண்ணா எங்களோட சேர்ந்து ஒரு டான்ஸ் போடுங்கன்னா!’ன்னு சொன்னாங்க.

அமைச்சர் கருப்பணன்
அமைச்சர் கருப்பணன்

நம்மளுக்கும் டான்ஸ்ங்கிறது புதுசு இல்லைங்க. எங்க ஊர்ல நடக்குற மாரியம்மன் கோயில் திருவிழாவுல சலங்கை கட்டிக்கிட்டு மணிக்கணக்குல ஆடுவேன். அதுனால ரெண்டு டான்ஸ் போட்டேன். அவ்ளோதான். சனி, ஞாயிற்றுக்கிழமை எங்க வீட்ல வந்து பாருங்க. நான் எவ்ளோ சாதாரண ஆளா இருப்பேன்னு உங்களுக்குத் தெரியும். நான் என்னைக்கும் அமைச்சர்ங்கிற பந்தாவோட இருந்தது இல்லைங்க” என்றார்.