சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர், மாநகர காவல் ஆணையர், மாநகர காவல் கண்காணிப்பாளர் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் கலந்துகொண்டனர். கூட்டத்தில் ஏரிகள் தூர்வாருவது, சாலைகள் அமைப்பது உள்ளிட்ட வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. பின்னர் அமைச்சர் கே.என்.நேரு செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார். அப்போது அவர், ``தி.மு.க ஆட்சியில் வரி உயர்வு அடைந்திருப்பதை மக்கள் அதிர்ச்சியுடன் பார்ப்பதாகப் பேசப்படுகிறது.

இதில் 83 சதவிகித மக்களுக்கு 25 முதல் 50 சதவிகிதம் மட்டுமே வரி உயர்வு உயர்த்தப்பட்டிருக்கிறது. 17 சதவிகித மக்களுக்கே சொத்து வரி உயர்ந்துள்ளது. வியாபாரப் பகுதிகள், தொழிற்சாலைகள், கட்டடங்கள் உள்ளிட்டவற்றுக்கு மட்டும்தான் 100 முதல் 150 சதவிகிதம் வரை வரி உயர்ந்துள்ளது. எங்கள் ஆட்சியில் சென்ற ஆட்சியைவிட நியாயமாகத்தான் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. வரி உயர்வில்லாமல் ஒவ்வொரு நகராட்சியாலும் அன்றாட பணிகளைக்கூட மேற்கொள்ள முடியாது.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்தியாவில் 15 மாநிலங்களில் வரி உயர்ந்துள்ளது. அதிலும் பா.ஜ.க ஆட்சி செய்யக்கூடிய மாநிலங்களிலும் வரி உயர்த்தப்பட்டிருக்கிறது. ஆனால், இது பற்றி பா.ஜ.க-வினர் பேச மாட்டார்கள். தமிழகத்தில்தான் மக்களைக் குழப்புவதற்கான முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றனர். இங்கு அதற்கான வாய்ப்புகளை மக்கள் அளிக்காததால், தேவையில்லாத வீண் விமர்சனங்களைப் பரப்பிவருகின்றனர்" என்றார்.
அதைத் தொடர்ந்து, அவரிடம் ராமஜெயம் கொலை வழக்கில் தனிக்குழு அமைக்கப்பட்டிருப்பது குறித்து கேள்விகள் முன்வைக்கப்பட்டன. அதற்கு அவர், ``என்னுடைய தம்பி ராமஜெயம் கொலை குறித்து தமிழக முதலமைச்சர் தனிக்குழு அமைத்து காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளார். அந்தக் குழு மீது எனக்கு நம்பிக்கை இருக்கிறது... விரைவில் உண்மை வெளியே வரும். மக்களும் நாங்களும் எதிர்பார்க்கும்விதமாகக் குற்றவாளிகள் பிடிக்கப்படுவார்கள்" என்றார்.