Published:Updated:

``ஒன்றிய அரசு திட்டம் போட்டால் மட்டும் போதுமா... யார் செயல்படுத்துவது?'' - கே.என்.நேரு கேள்வி

கே.என்.நேரு

``இந்த மண்ணின் மைந்தர் என்று சொல்லிக்கொண்டுவரும் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சியில் மக்களுக்குப் பயனளிக்கும் எந்தவித நலத்திட்டங்களையுமே கொண்டுவரவில்லை.'' - அமைச்சர் கே.என்.நேரு

``ஒன்றிய அரசு திட்டம் போட்டால் மட்டும் போதுமா... யார் செயல்படுத்துவது?'' - கே.என்.நேரு கேள்வி

``இந்த மண்ணின் மைந்தர் என்று சொல்லிக்கொண்டுவரும் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சியில் மக்களுக்குப் பயனளிக்கும் எந்தவித நலத்திட்டங்களையுமே கொண்டுவரவில்லை.'' - அமைச்சர் கே.என்.நேரு

Published:Updated:
கே.என்.நேரு

சேலம், பெத்தநாயக்கன்பாளையம், சின்ன கல்வராயன் பகுதி பழங்குடி மக்களுக்கான அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதில் நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு கலந்துகொண்டார். அதன் பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அவர், ``முன்னாள் முதல்வர் கருணாநிதியைவிடக் கூடுதல் நேரம் தமிழக மக்களுக்காக உழைத்துக்கொண்டிருக்கிறார் தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலின். அந்த வகையில் சேலம் மாவட்டத்துக்கு அடுத்தடுத்து பல நலத்திட்ட உதவிகளைச் செய்துகொண்டிருக்கிறார். இந்த மண்ணின் மைந்தர் என்று சொல்லிக்கொண்டுவரும் எடப்பாடி பழனிசாமி கடந்த ஆட்சியில் மக்களுக்குப் பயனளிக்கும் எந்தவித நலத்திட்டங்களையுமே கொண்டுவரவில்லை.

அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி
அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி

இந்த நிலையில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் வாழ்வாதாரத்தைப் பெருக்கும்விதமாகவும், குறைகளைத் தீர்க்கும்விதமாகவும் தற்போது இந்த அடையாள அட்டை வழங்கப்படுகிறது. முதன்முதலில் நலவாரிய அட்டை என்ற திட்டத்தைக் கொண்டுவந்ததே கருணாநிதிதான். அப்படி அவர் கொண்டுவந்த நலவாரியங்கள் 20-க்கும் மேற்பட்டவை தற்போது தமிழகத்தில் இன்றளவும் இயங்கிவருகின்றன. இந்த அட்டையின் மூலம் எண்ணற்ற மக்கள் பயனடைந்துவருகின்றனர். இதற்கென்றே தமிழக அரசு தனி நிதி ஒதுக்கிவருகிறது.

முதல்வர் ஸ்டாலின்
முதல்வர் ஸ்டாலின்

கடந்த வாரம் தாரமங்கலம் பகுதியில் இருக்கக்கூடிய நாடோடி இன மக்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா வழங்கப்பட்டது. மேலும் அனைத்திந்திய அண்ணா வீடு வழங்கும் திட்டத்தில் மக்களுக்கு வீடு கட்டிக்கொடுக்கப்பட்டுவருகிறது. இதற்கிடையில் ஒன்றிய அரசு தாங்கள்தான் மோடி திட்டத்தில் வீடு கட்டிக்கொடுத்துவருகிறோம் என்று கூறிவருகிறது. அதற்கும் தேவையான பணத்தைத் தமிழக அரசுதான் கொடுத்துவருகிறது. திட்டத்தை மட்டும் போட்டால் போதுமா... யார் செயல்படுத்துவது... ஒன்றிய அரசு நிதியே வழங்காமல் எல்லாச் சுமைகளையும் தமிழக அரசு மீதே சுமத்துகிறது” என்றார்.