Published:Updated:

"வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன்; அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்!" - அமைச்சர் கே.என்.நேரு

கே.என்.நேரு

``இன்றைக்கு சகல அதிகாரத்தையும் வைத்திருக்கிறவர்களோடு எதிர்த்து நிற்கிற போட்டியாக இருக்கிறது. எனவே, நாம் மிக மிக கவனமாகச் செயல்படக்கூடிய காலம் இது." - கே.என்.நேரு

"வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன்; அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயப்படுகிறார்கள்!" - அமைச்சர் கே.என்.நேரு

``இன்றைக்கு சகல அதிகாரத்தையும் வைத்திருக்கிறவர்களோடு எதிர்த்து நிற்கிற போட்டியாக இருக்கிறது. எனவே, நாம் மிக மிக கவனமாகச் செயல்படக்கூடிய காலம் இது." - கே.என்.நேரு

Published:Updated:
கே.என்.நேரு

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நவம்பர் 4-ம் தேதி திருச்சி மாவட்டம், மணப்பாறை டி.என்.பி.எல் காகித ஆலையில் புதிய அலகினைத் தொடங்கிவைக்க வருகிறார். அதையொட்டி முதல்வருக்கு வரவேற்பு கொடுப்பது சம்பந்தமாக திருச்சி மத்திய மாவட்ட தி.மு.க-வின் செயல்வீரர்கள் கூட்டம் திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் இன்று நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு, பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி, திருச்சி மேயர், எம்.எல்.ஏ-க்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் பலரும் கலந்துகொண்டனர்.

தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்
தி.மு.க., செயல்வீரர்கள் கூட்டம்

செயல்வீரர்கள் கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசுகையில், “இன்றைக்கு தமிழக கவர்னர் எதிர்க்கட்சியைப்போலச் செயல்படுகிறார். அதேபோல பா.ஜ.க-வினர் ஒரு சின்ன விஷயத்தைக்கூட ஊதிப் பெரிதாக்குகிறார்கள். ஏதோ இந்த நாட்டிலேயே சட்டம்-ஒழுங்கு இல்லை என்கிற ஒரு மாயையை உருவாக்கக்கூடிய அளவுக்கு ஊடகங்களை, பத்திரிகையாளர்களை மிரட்டி பிரசாரம் செய்துகொண்டிருக்கிறார்கள். எப்படியும் இந்த ஆட்சிக்கு அவப்பெயர் உண்டாக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு இதையெல்லாம் செய்துகொண்டிருக்கிறார்கள். எதிர்க்கட்சியான அ.தி.மு.க., `நீதான்... நான்தான்' என்று இன்றைக்கு பிளவுபட்டுக் கிடக்கிறது. அவர்கள் இடத்தைப் பிடித்துவிட வேண்டும் என்கிற நோக்கத்தோடு பா.ஜ.க-வினர் அ.தி.மு.க-வை ஒன்றுசேர விடாமல் பார்த்துக்கொள்கிறார்கள். நான் வெளிப்படையாக, வெட்கத்தைவிட்டுச் சொல்கிறேன்... இன்றைக்கு இருக்கிற அதிகாரிகள் மத்திய அரசுக்கு மிகவும் பயப்படுகிறார்கள். நாம் இப்போது பலமாக இருப்பதைப்போல் தொடர்ந்து பலமாக இருந்து நாடாளுமன்றத் தேர்தலில் பணியாற்றி 40 இடங்களிலும் வெற்றிபெற வேண்டும்” என்றார்.

 தொடர்ந்து பேசியவர், “கடந்தகாலத்தைவிட மிகக் கடுமையான காலம் இது. கடந்தகாலம் என்பது தி.மு.க-வுக்கும் அ.தி.மு.க-வுக்கும் அண்ணன், தம்பிக்கு இடையே இருக்கிற போட்டியைப்போல. ஆனால், இன்றைக்கு சகல அதிகாரத்தையும் வைத்திருக்கிறவர்களோடு எதிர்த்து நிற்கிற போட்டியாக இருக்கிறது. எனவே, நாம் மிக மிக கவனமாகச் செயல்படக்கூடிய காலம் இது” என்றார்.