Published:Updated:

“எந்தக் குறை செய்தாலும் மருத்துவர்களை ஒன்றும் செய்யக் கூடாது. ஏன்னா..?” - அமைச்சர் கே.என்.நேரு

அமைச்சர் கே.என்.நேரு

மருத்துவர்களின் பணியைப் பாராட்டும் வகையில் பேசியிருந்தாலும், மக்களின் உயிர் தொடர்பான விஷயம் என்பதால் பணியில் அலட்சியம் காட்டக் கூடாது என்பதைத்தான் அமைச்சர் பேசியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

“எந்தக் குறை செய்தாலும் மருத்துவர்களை ஒன்றும் செய்யக் கூடாது. ஏன்னா..?” - அமைச்சர் கே.என்.நேரு

மருத்துவர்களின் பணியைப் பாராட்டும் வகையில் பேசியிருந்தாலும், மக்களின் உயிர் தொடர்பான விஷயம் என்பதால் பணியில் அலட்சியம் காட்டக் கூடாது என்பதைத்தான் அமைச்சர் பேசியிருக்க வேண்டும் என்கிறார்கள்.

Published:Updated:
அமைச்சர் கே.என்.நேரு

மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் பருவகாலப் பேரிடர் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கை, காய்ச்சல் முகாம்கள், பொது சுகாதாரப் பணிகள் குறித்த மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம் நேற்று திருச்சி ஜமால் முகமது கல்லூரியில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் கே.என்.நேரு, மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசுகையில், “சமீபத்தில் மருத்துவர்கள்மீது நடவடிக்கை எடுத்த ஒருசில கசப்பான சம்பவங்கள் நடந்தன. நீங்கள்கூட அரசு கடுமையாக நடந்துகொள்வதாக நினைத்திருப்பீர்கள். ஆனால், இந்த அரசு யாரையும் பழிவாங்கவோ, துன்புறுத்தவோ நினைத்ததில்லை. இந்தத் துறையைச் சீர்ப்படுத்த வேண்டும் என்பதற்காகவே அப்படியான விஷயங்களைச் செய்ய வேண்டியதாயிற்று. இந்தத் துறை மக்களுக்கான மிக முக்கியமான துறை. எனவே, மருத்துவர்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டுமென நினைக்கிறோம். நானும் இன்னொரு மூத்த அமைச்சரும் ஒரு மருத்துவமனைக்கு ஆய்வுக்குச் சென்றோம். மோசமான கட்டடத்தில் மருத்துவமனை இயங்கியதையும், மருந்துகள் இருப்பில் இல்லாதது குறித்தும் கேட்டோம். அப்போது சம்பந்தப்பட்ட மருத்துவர்களை இடமாற்றம் செய்வதாகச் சொல்லிவிட்டு வந்தோம். அந்த இடமாற்றத்தைக்கூடச் செய்ய வேண்டாமென முதல்வர் சொல்லிவிட்டார்” என்றார்.

நிகழ்ச்சி மேடை
நிகழ்ச்சி மேடை

அதையடுத்து பேசிய அமைச்சர் கே.என்.நேரு, “எந்தக் குறை செய்தாலும் மருத்துவர்களை நாம் ஒன்றும் செய்யக் கூடாது. ஏன்னா, சொந்தக்காரன் அண்ணன், தம்பிகூட கொரோனாவுல விட்டுட்டு ஓடிட்டான். டாக்டர்கள் மட்டும்தான் இருந்தாங்க. நீங்க என்ன குற்றம் செய்தாலும் ஏற்றுக்கொள்வோம், தப்பில்லை. ஏனென்றால், உங்களுடைய உயிரை துச்சமாக மதித்து மக்களைக் காப்பாற்றினீர்கள்” என்றார்.

அமைச்சர்கள் கே.என்.நேரு & மா.சுப்பிரமணியன்
அமைச்சர்கள் கே.என்.நேரு & மா.சுப்பிரமணியன்

அமைச்சரின் இந்தப் பேச்சு சமூக வளைதளங்களில் பேசுபொருளாகியிருக்கிறது. மருத்துவர்களின் பணியைப் பாராட்டும் வகையில் பேசியிருந்தாலும், மக்களின் உயிர் தொடர்பான விஷயம் என்பதால் பணியில் அலட்சியம் காட்டக் கூடாது என்பதைத்தான் அமைச்சர் பேசியிருக்க வேண்டும் என்கிறார்கள்.