Published:Updated:

``பொன்னார் சொல்வது தவறு!'' - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி `தில்' பேட்டி

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி ( கே.ஜெரோம் )

`துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் பேசிய பேச்சு சரியானது' என்று ஆதரவுக்குரல் கொடுத்திருக்கும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``1971-ல் நடைபெற்ற `மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி' வரலாற்றை மறந்துவிட முடியுமா..?" என்று எதிர்க்கேள்வி எழுப்புகிறார்.

துக்ளக் பத்திரிகை விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு பேசிய ரஜினிகாந்த், ``1971-ல் பெரியார் நடத்திய பேரணியில், ஶ்ரீராமச்சந்திர மூர்த்தி மற்றும் சீதை ஆகியோரது உருவங்கள் ஆடையில்லாமலும் செருப்பு மாலை அணியப்பட்டு எடுத்துவரப்பட்டன'' என்றார். இதையடுத்து, தமிழக அரசியல் அரங்கில் பரபரப்பு பற்றிக்கொண்டது.

``1971-ல் சேலத்தில் நடைபெற்ற மூட நம்பிக்கை ஒழிப்புப் பேரணி - மாநாட்டில், ராமர் - சீதை உருவப்படங்கள் ஆடையுடன்தான் எடுத்துவரப்பட்டன. இந்துமத புராணத்தில் உள்ள ஆபாசக் கதைகளை விளக்கும் வகையில் மற்ற கடவுளர்கள்தான் ஆடையின்றி ஓவியமாக எடுத்துச் செல்லப்பட்டன. எனவே, ரஜினிகாந்த் பேசியது தவறான தகவல்'' என்று கூறி ரஜினிகாந்த்துக்கு எதிராகப் போராட்டங்களை முன்னெடுத்தனர் திராவிடர் கழக அமைப்பினர்.

ரஜினிகாந்த்
ரஜினிகாந்த்
vikatan

தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், ``வாழ்நாள் முழுக்க தமிழர் நலனுக்காக வாழ்ந்து மறைந்தவர் தலைவர் பெரியார். அப்படிப்பட்ட ஒரு தலைவர் குறித்துப் பேசுவதற்கு முன், நன்கு யோசித்து சிந்தித்துப் பேசவேண்டும், ரஜினிகாந்த்'' என்று கோரிக்கை வைத்தார்.

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இப்பிரச்னை குறித்துப் பேசியபோது, ``ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளை மீட்டெடுப்பதற்காகப் பாடுபட்ட ஒப்பற்ற தலைவர் பெரியார். என்னைப்போன்ற சாதாரண எளிய மனிதர்கள்கூட உயர்ந்த நிலைக்கு வருவதற்கான அடித்தளமிட்டவர்.

அப்படிப்பட்ட பெரியாரைப் பற்றி இன்றைக்குக் குறை கூறுபவர்கள், அவரது தொண்டுகளைப் பற்றி முழுமையாகப் படித்தறிந்துவிட்டுப் பொதுவெளியில் பேசவேண்டும்'' என்று ரஜினிகாந்த் பேச்சைக் கண்டித்தார்.

அ.தி.மு.க-வில் உள்ள ஏனைய அமைச்சர்களும் ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிராகத் தங்களது கண்டனங்களைப் பதிவுசெய்தனர். ஆனால், அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி மட்டும், ``ரஜினிகாந்த் பேசியதில் தவறு இல்லை'' என்று செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்து அனைவரின் பார்வையையும் தன் பக்கம் ஈர்த்தார்.

ஏற்கெனவே, இந்து தீவிரவாதம் குறித்துப் பேசிய கமல்ஹாசனுக்கு எதிராக, `கமல் நாக்கை வெட்டுவேன்' என்று பேசி அதிரவைத்தவர் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி. சமீபத்தில், ``சசிகலா சிறையில் இருப்பது வருத்தமளிக்கிறது; அவர் சிறையிலிருந்து விரைவில் வெளிவர வேண்டும்'' என்று பேசி அ.தி.மு.க வட்டாரத்தை கிடுகிடுக்கவைத்தார். இதேபோன்று வேறுசில அமைச்சர்களும் தங்களது தனிப்பட்ட கருத்துகளைப் பொதுவெளியில் பேசிவருவது தொடர்ந்து அ.தி.மு.க-வுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, `அ.தி.மு.க-வில் கருத்து வேறுபாடுகள் நிறைந்துவிட்டன' என்றளவில் விமர்சனங்கள் எழத் தொடங்கின. நிலைமையின் விபரீதத்தை உணர்ந்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அமைச்சர்கள் அனைவரையும் அழைத்து ``பொதுவெளியில் தனிப்பட்ட கருத்துகளைப் பேசி குழப்பத்தை ஏற்படுத்த வேண்டாம்'' என்று ஆலோசனை தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செய்தியாளர்கள் மத்தியில் அதிரிபுதிரி பேட்டிகளைத் தட்டிவிட்டு அரசியலில் சூடு கிளப்பிவரும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜியைச் சந்தித்தோம்...

``அ.தி.மு.க நிலைப்பாட்டுக்கு எதிராக அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தொடர்ந்து பேசிவருவதன் பின்னணி என்ன?''

``100 சதவிகிதம் அப்படி எதுவும் கிடையாது. நான் சொல்வது எல்லாமே என் சொந்தக் கருத்து. அரசியல் ரீதியாகவுள்ள எங்கள் எதிரிகள்தான் இப்படியான செய்திகளைப் போட்டுவிடுகிறார்கள்.''

பொன்.ராதாகிருஷ்ணன்
பொன்.ராதாகிருஷ்ணன்

``தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்கிறாரே பொன் ராதாகிருஷ்ணன்?''

``பா.ஜ.க-வின் மூத்த தலைவர்களில் ஒருவரான பொன்னார், எதிர்க்கட்சி கண்ணோட்டத்தில் ஆளுங்கட்சியைப் பார்க்கிறார். அவருடைய மாவட்டமான கன்னியாகுமரி, களியக்காவிளையில் ஒரு இன்ஸ்பெக்டர் சுட்டுக் கொல்லப்பட்டுவிட்டார். அதனால், பயங்கரவாதிகளைத் தடுத்துநிறுத்த வேண்டும் என்று சொல்கிறார்.

தமிழ்நாடு காவல்துறையினரும்கூட சுறுசுறுப்பாகச் செயல்பட்டு குற்றவாளிகளை உடனடியாகப் பிடித்துவிட்டார்களே..!

எல்லா ஆட்சியிலும் பிரச்னைகள் நடக்கத்தான் செய்யும். ஆளுகின்ற அரசு, அந்தப் பிரச்னைகளைத் தடுத்துநிறுத்தி நடவடிக்கை எடுத்திருக்கிறதா என்றுதான் பார்க்க வேண்டும். அந்த வகையில், தமிழ்நாடு அரசு மிகச் சிறப்பாகவே சட்டம் - ஒழுங்கைக் காப்பாற்றிவருகிறது. எனவே, சட்டம் - ஒழுங்கு கெட்டுவிட்டது என்று அவர் சொல்வது தவறு.''

`` `மூடப் பழக்கவழக்கங்களுக்கு எதிராக பெரியார் முன்னெடுத்த செயல்களை வரவேற்கிறோம்' என்று சொல்கிற நீங்களே, 1971-ல் சேலத்தில் பெரியார் நடத்திய `மூட நம்பிக்கை ஒழிப்பு மாநாட்டை' எதிர்க்கிறீர்களே..?''

``கடவுள் இல்லை என்று சொல்வதற்கு ஒருசிலருக்கு எப்படி உரிமை இருக்கிறதோ... அதேபோல், `கடவுள் இருக்கிறார்' என்று சொல்லிக்கொண்டு வணங்குவதற்கு எங்களைப் போன்றோருக்கு உரிமை உண்டு. அதைத் தடை செய்ய யாருக்கும் அதிகாரம் கிடையாது.

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி
கே.ஜெரோம்

சேலத்தில் நடைபெற்ற பேரணியில், ராமர் - சீதை படங்கள் அநாகரிகமாக சித்திரிக்கப்பட்டிருந்ததைத்தான் ரஜினிகாந்த் சுட்டிக்காட்டியிருந்தார். மற்றபடி, `பெரியாரின் கருத்துகள்தான் நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்திவிட்டது' என்று அவர் எங்கும் சொல்லவில்லை.

பேரணிக்குத் தலைமைதாங்குபவருக்குத் தெரியாமல்கூட சில பிரச்னைகள் உருவாகலாம். ஆக, அதுபோன்ற சம்பவங்கள் இனி நடக்காமல் பார்த்துக்கொள்ள வேண்டுமே தவிர, நடந்துவிட்ட அந்த வரலாற்றுச் சம்பவங்களை நாம் மறந்துவிட முடியுமா?''

அடுத்த கட்டுரைக்கு