Published:Updated:

``ரஜினி, அஜித்திடம் உண்மை இருக்கிறது!’’ - சர்டிஃபிகேட் கொடுக்கிறார் ராஜேந்திர பாலாஜி!

ராஜேந்திர பாலாஜி
ராஜேந்திர பாலாஜி

`ரஜினி மலை; அஜித் தலை என்று புகழ்ந்தது ஏன்?’ என்ற கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, ``ரஜினி, அஜித் இருவருமே இயல்பானவர்கள்; உண்மையைப் பேசுபவர்கள். எனவே, இது குறித்த என் தனிப்பட்ட கருத்தைத் தெரிவிக்கிறேன்'' என்கிறார்.

``2ஜி வழக்கில், விரைவில் ஸ்டாலின் சிக்குவார்’’ என்று சேலத்தில் முதல்வர் பேசிவைக்க... பதிலடியாக அ.தி.மு.க தலைவர்களின் ஊழல் பட்டியலை விமர்சனத்தால் கிழித்துத் தொங்கவிட்டார் தி.மு.க துணைப் பொதுச்செயலாளர் ஆ.ராசா. இதையடுத்து, அ.தி.மு.க தரப்பிலிருந்தும் தி.மு.க-வை மிகக் கடுமையான வார்த்தைகளில் விமர்சிக்க, 2021 தேர்தல் பரபரப்பு இப்போதே தொற்றிக்கொள்ள ஆரம்பித்துவிட்டது.

இந்தச் சூழ்நிலையில், தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜியிடம் பேசினேன்...

``50 ஆண்டுக்கால திராவிட ஆட்சியில்தான் ஊழல் பெருகிவிட்டது என்ற பா.ஜ.க-வின் குற்றச்சாட்டை நிரூபிப்பதுபோல் தி.மு.க - அ.தி.மு.க-வினர் இப்படி அடித்துக்கொள்கிறீர்களே..?''

கருணாநிதி - எம்.ஜி.ஆர்
கருணாநிதி - எம்.ஜி.ஆர்

``அ.தி.மு.க ஆரம்பிக்கப்பட்டு 49 ஆண்டுகள் ஆகிவிட்டன. சுமார் 30 வருடங்களாக ஆட்சிப் பொறுப்பில் இருந்துவருகிறது. தேர்தல் செலவுகளில் ஆரம்பித்து அ.தி.மு.க அறக்கட்டளை நிதி வரை கணக்கெடுத்துப் பாருங்கள்... அதேசமயம் பேரறிஞர் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு, கலைஞர் தி.மு.க-வின் பொறுப்புக்கு வந்த பிறகு தி.மு.க-வின் சொத்துக் கணக்கு, கலைஞர் அறக்கட்டளை, அண்ணா அறக்கட்டளை மற்றும் அவர்களது தொலைக்காட்சி நிறுவனங்கள் உள்ளிட்ட சொத்துக் கணக்குகளைப் பாருங்கள்... யார் ஊழல் செய்து பணம் குவித்தார்கள் என்பது உங்களுக்கும் புரியும்... மக்களுக்கும் புரியும்!''

``ஆனால், அ.தி.மு.க தலைவர்கள்தானே ஊழல் குற்றச்சாட்டில், நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டவர்களாக இருக்கின்றனர்?''

`` `காலச் சூழ்நிலை, விதிவிட்ட வழி’ என்று சொல்வார்கள். சில நேரங்களில் நிரபராதிகளும் சில சிக்கல்களில் மாட்டிக்கொள்வார்கள். அது போன்ற சம்பவங்கள் அ.தி.மு.க தலைவர்களுக்கு வந்திருக்கலாம். ஆனால், திட்டமிட்டு விஞ்ஞானரீதியாக ஊழல் செய்த கட்சி -ஆட்சி என்று சொல்லி கலைக்கப்பட்டது தி.மு.க ஆட்சிதான். இந்த வரலாற்று உண்மையை யாராலும் மறுக்க முடியாது!''

எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி

``அரசின் ஒப்பந்தப் பணிகளில் அ.தி.மு.க அமைச்சரில் ஆரம்பித்து முதல்வர் வரை ஊழல் குற்றச்சாட்டுகள் இருக்கின்றனவே..?''

``இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து முதல்வர் எடப்பாடி பழனிசாமி, வெளிப்படையான அறிக்கை மற்றும் பேட்டி கொடுத்திருக்கிறார். உள்ளாட்சித்துறை, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறைகளிலெல்லாம் ஆன்லைன் டெண்டர்தான் விடப்படுகின்றன. இதில் யாருமே குறுக்கிட முடியாது. அதேசமயம் எல்லோருமே கலந்துகொள்ள முடியும்.

அ.தி.மு.க ஆட்சியில்தான் எஸ்டிமேட் மதிப்பைவிடவும் குறைவான தொகைக்கு டெண்டர் எடுக்கப்பட்டு வேலைகள் நடந்துவருகின்றன. எனவே, எந்தத் துறையிலும் முறைகேடு என்பதே இல்லை. ஆனால், தி.மு.க ஆட்சிக்காலத்தில் நடைபெற்ற டெண்டர்களில் `சிங்கிள் டெண்டர்' மட்டுமே விழும். கடந்த 10 வருடங்களாக ஆட்சிப்பொறுப்பில் இல்லை என்பதால், `நாங்கள்தான் கை படாத ரோஜா மலர்' என்று தி.மு.க சொல்வதை மக்கள் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். 18 வயதுப் பசங்களுக்கு இந்த உண்மையெல்லாம் தெரியாது என்று மு.க.ஸ்டாலின் பொய்யான குற்றச்சாட்டுகளை எங்கள்மீது சுமத்திவருகிறார். ஆனால், ஒரு வயசுக் குழந்தைகூட இன்றைக்கு வரலாற்றைப் படித்து உண்மைகளைத் தெரிந்துகொள்கிறது என்பதை அவர் நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும்.''

மு.க.ஸ்டாலின்
மு.க.ஸ்டாலின்

``பாரத்நெட் கேபிள் டெண்டரில் ஊழல் நடந்திருப்பதாகக் கூறி மத்திய அரசே திட்டத்தை ரத்து செய்திருக்கிறதே?’’

``டெண்டரை நடைமுறைப்படுத்தும் வழிமுறைகள், விதிமுறைகளில் ஏதேனும் பிரச்னைகள் நடந்திருக்கலாம். அதனால் சம்பந்தப்பட்ட டெண்டரை மத்திய அரசும் ரத்து செய்திருக்கலாம். இனி சம்பந்தப்பட்ட டெண்டரை மத்திய அரசின் வழிகாட்டுதல்படி அமல்படுத்துவதற்கான வழிமுறைகளை முதல்வர் எடுப்பார். ஆனால், டெண்டரில் ஊழல் நடந்திருக்கிறது என்ற குற்றச்சாட்டை நாங்கள் உறுதியாக மறுக்கிறோம்.''

பேரன் பேத்திகள் துணையுடன் பள்ளிக்கு வரும் முதியோர்... சர்ப்ரைஸ் கொடுத்த ஆசிரியர்!

``பாரத்நெட் டெண்டர் விவகாரத்தில், ஆளுங்கட்சி கொடுத்த அழுத்தத்தால்தானே ஐ.ஏ.எஸ் அதிகாரியான சந்தோஷ்பாபு ராஜினாமா செய்துவிட்டுப் போனார்?’’

``சந்தோஷ்பாபு ஐ.ஏ.எஸ் ராஜினாமா செய்துவிட்டுப் போனது உண்மைதான். அவர் சமூகவாதியாக இருந்திருந்தால் பிரச்னை கிடையாது. ஆனால், ராஜினாமா செய்துவிட்டுப் போனவர், இன்னோர் அரசியல் கட்சியில் போய் இணைகிறாரே... அப்படியென்றால், அவர் பணியில் இருந்தபோதே, `இந்த அரக்கு கெட்ட பெயர் ஏற்படுத்த வேண்டும்' என்றுகூட செயல்பட்டிருக்கலாம் அல்லவா... அரசுப் பணியில் இருப்பவர்கள் பொதுநலவாதியாக இருக்க வேண்டும்.’’

சந்தோஷ்பாபு
சந்தோஷ்பாபு

`` `ரஜினியுடன் கூட்டணி அமையலாம்’ என்கிறார் ஓ.பன்னீர்செல்வம். எடப்பாடி பழனிசாமியோ மறுக்கிறார்... ஏன் இந்தக் குழப்பம்?''

``ரஜினிகாந்துடன் அ.தி.மு.க கூட்டணி அமையுமா என்ற கேள்வியை நீங்கள் என்னிடம் கேட்டாலும் `காலச்சூழல் எப்படி வேண்டுமானாலும் அமையலாம்' என்றுதான் கூறுவேன். உடனே அதைக் `கூட்டணி' என்று நீங்கள் முடிவு செய்துவிடக் கூடாது.

டெல்லி: `இது விவசாயிகளுக்கு ஆதரவான குரல்...' சீக்கிய மதகுரு தற்கொலை! - யார் இந்த பாபா ராம் சிங்?

துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்தது ஒரு பொதுவான கருத்து. முதல்வர் எடப்பாடி பழனிசாமி சொல்வதும் பொதுவான நிலைப்பாடு. ஆனால், தேர்தலின்போது இவர்கள் இருவரும் சேர்ந்து ஒருமித்த முடிவு எடுத்து அறிவிப்பதை அ.தி.மு.க தொண்டர்கள் அனைவரும் ஏற்றுக்கொண்டு செயல்படுவோம்.’’

அஜித் - ரஜினி
அஜித் - ரஜினி

`` `ரஜினி மலை; அஜித் தலை' என்றெல்லாம் பாராட்டுகிறீர்களே..?’’

``ரஜினி, அஜித் ஆகியோரைப் பற்றி நான் சொல்லும் கருத்துகளெல்லாம், அவர்கள் இயல்பாக நடிக்கிறார்கள்... ரசிகர்களிடத்திலே உண்மை நிலவரத்தைப் பேசுகிறார்கள்... இவையெல்லாம் எனக்குப் பிடித்திருக்கிறது என்பதற்காக. அதனால் நானும் இது குறித்து வெளிப்படையாகப் பேசிவருகிறேன். இவையெல்லாம் என்னுடைய தனிப்பட்ட கருத்துகள்!’’

அடுத்த கட்டுரைக்கு