Published:Updated:

“வாழ்த்துகளும் வசவுகளும் எனக்குத்தான்!”

மாஃபா பாண்டியராஜன்
பிரீமியம் ஸ்டோரி
News
மாஃபா பாண்டியராஜன்

மனம் திறக்கும் மாஃபா பாண்டியராஜன்

கொரோனா பதற்றத்துக்கு மத்தியிலும் பெரும் கவனம் குவித்தது ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்ப மாற்றப்பட்ட விவகாரம்.

ஆங்கில உச்சரிப்பில் இருந்துவந்த 1,018 ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்புக்கு ஏற்றபடி மாற்றியமைத்து தமிழ் வளர்ச்சித்துறை வெளியிட்ட அரசாணைக்கு பாராட்டுகளும் விமர்சனங்களும் ஒருசேர குவிந்துகொண்டிருந்த நிலையில், திடீரென அந்தர் பல்டி அடித்து அரசாணையை வாபஸ் பெற்றுள்ளது தமிழ் வளர்ச்சித்துறை. இது குறித்து தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறையின் அமைச்சர் மாஃபா பாண்டியராஜனிடம் பேசினோம்...

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS

“பெயர் மாற்ற அரசாணை திடீர் வாபஸ் பெறப்பட்டதை அடுத்து, நீங்கள் ‘பல்டி’ அடித்துவிட்டதாக விமர்சனம் வைக்கப்படுகிறதே..?’’

“உள்ளாட்சித்துறையும் வருவாய்த் துறையும்தான் அரசாணை பிறப்பிக்கும் அதிகாரம் படைத்தவை. ஊர்ப் பெயர்களை தமிழ் உச்சரிப்பின்படி ஆங்கிலத்தில் மாற்றியமைப்பது குறித்த எங்கள் கமிட்டியின் பரிந்துரையைத்தான் ‘இன்டர்னல்’ அரசாணையாக உள்ளாட்சி மற்றும் வருவாய்த் துறையினருக்கு நாங்கள் அனுப்பி வைத்திருந்தோம். இதற்கிடையில், இந்தப் பட்டியலில் ஒரு சில தவறுகள் இருப்பதாக உணர்ந்ததை அடுத்து, மீண்டும் ஒரு முறை அறிஞர்களுடன் கலந்தாலோசிக்கப் போகிறோம். திருத்தப்பட்ட பட்டியல் அதிகாரபூர்வமான அறிவிப்புகொண்ட அரசாணையாக விரைவில் வெளிவரும். தவறுகள் சுட்டிக்காட்டப்பட்டு, அவற்றைத் திருத்திக்கொள்வதை ‘பல்டி’ என்று கொச்சைப்படுத்துவது சரியல்ல.’’

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

“அரசாணை குறித்து அதிகாரபூர்வ அறிவிப்புகள் வெளிவரும் முன்னரே ஊடகங்களுக்கு இதன் விவரங்கள் கிடைத்தது எப்படி?’’

“மாற்றம் செய்ய வேண்டிய 1,018 ஊர்களின் பெயர்ப் பட்டியலையும் அலுவல் பணிக்காக வருவாய்த்துறை உள்ளிட்ட மூன்று துறைகளுக்கு இன்டர்னலாகத்தான் அனுப்பியிருந்தோம். அதாவது, மார்ச் 13-ம் தேதி அன்று தமிழ் வளர்ச்சித்துறை அரசாணை வெளியிட்டது. பின்னர் ஜூன் 8-ம் தேதிதான் அது இணையத்தில் பதிவேற்றப்பட்டது. அரசாணை குறித்த இறுதி முடிவை வருவாய்த்துறை மற்றும் உள்ளாட்சித் துறையினர்தான் முடிவு செய்து வெளியிட வேண்டும். இந்த இரண்டு துறைகளும் இது குறித்து இன்னும் முடிவெடுக்காத சூழலில், எப்படி இது ஊடகங்களுக்குக் கசிந்து என்றுதான் தெரியவில்லை!’’

“பல்வேறு குழப்பங்கள், தவறுகளுடன் வெளியான இந்தப் பெயர்ப் பட்டியல், இந்தப் பணியிலுள்ள அலட்சியத்தைத்தானே காட்டுகிறது?’’

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

“இது மிகவும் சவாலான பணி. முதலில், தமிழ்நாடு முழுக்க 35,000 ஊர்ப் பெயர்களை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டோம். இதற்காக மாவட்டந்தோறும் ஆட்சியரின்கீழ் தமிழ் வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, பதிவுத்துறை, உள்ளாட்சித்துறை உள்ளிட்ட ஆறு துறைகளிலிருந்து அமைக்கப்பட்ட குழுக்களுடன் ஒரு மொழியியல் அறிஞரையும் நியமித்துத்தான் பணியை ஆரம்பித்தோம். இறுதியாக, ‘3,800 பெயர்களை மாற்றம் செய்ய வேண்டும்’ என்று மாவட்டக்குழுக்கள் பரிந்துரைத்தன. அவற்றில், குறில்-நெடில், ‘ழ’ கரம் மற்றும் சம்ஸ்கிருத எழுத்துகளை எப்படி ஆங்கிலத்தில் குறிப்பிடுவது என்பது உள்ளிட்ட விவாதங்கள் பல்வேறு தரப்பிலிருந்தும் எழுந்தன. நிறைவாக, மாநிலக் குழு, 1,018 பெயர்களை மட்டுமே மாற்றம் செய்து முடித்தது. இவற்றிலிருக்கும் ஒரு சில தவறுகளும்கூட சரி செய்யப்பட்டு, இறுதி வடிவம் விரைவில் வெளிவரும்.’’

“தமிழ் உச்சரிப்பின்படி பெயர் மாற்றம் செய்வதால் மட்டும் தமிழ் மொழிக்குப் பெரிதாக என்ன வளர்ச்சி கிடைத்துவிடப் போகிறது?’’

“ஓர் ஊருக்கு இரண்டு பெயர்கள் இருப்பது எந்தவிதத்தில் நியாயம்... உதாரணமாக, `திருவல்லிக்கேணி’ என்ற ஊருக்கு, ‘ட்ரிப்ளிகேன்’ என்ற ஆங்கிலப் பெயர் எப்படி நியாயமாகும்? `திருவல்லிக்கேணி’ என்ற தமிழ் உச்சரிப்பிலேயே ஆங்கிலத்திலும் படித்து அறிந்துகொள்வதுதானே ஒரு தமிழனுக்குப் பெருமையாகவும், தமிழ் மொழிக்கான வளர்ச்சியாகவும் இருக்க முடியும்! மற்ற மாநிலங்களைவிட தமிழ்நாட்டிலுள்ள ஊர்ப் பெயர்களின் உச்சரிப்புகளில்தான் ஆங்கில மொழித் தாக்கம் அதிகமாக இருக்கிறது. அதனால்தான் 1967-லிருந்தே பல்வேறு அமைப்புகளும் ‘ஊரின் பெயர்களைத் தமிழ்ப்படுத்த வேண்டும்’ என்று முயன்றன.

கடந்த காலங்களில் அரசுத் தரப்பிலிருந்தே ஆறு முறை இதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அப்போதெல்லாம் ‘இந்தப் பெயர் மாற்றம் என்பது பதிவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட மற்ற துறைகளுக்கு கூடுதல் பணிச் சுமையாகவே இருக்கும். உதாரணமாக, நெடுஞ்சாலைத் துறையினர், மைல் கற்களிலிருந்தே இந்தப் பெயர் மாற்றப் பணிகளையெல்லாம் செய்ய வேண்டியிருக்கும் என்ற காரணத்தால், இந்தப் பணிகள் இடையிலேயே கைவிடப்பட்டுள்ளன. ‘எங்கும் தமிழ்; எதிலும் தமிழ்; என்றும் தமிழ்’ என்ற எங்கள் கொள்கையின் அடிப்படையில் நாங்கள் இதைச் செயல்படுத்தியிருக்கிறோம்.’’

“மருவிப்போன ஊர்ப் பெயர்களை அதன் வேர்ச்சொல்லிலிருந்து மீட்டெடுக்காமல், உள்ளபடியே தமிழ்ப்படுத்தியிருப்பது எப்படி தமிழ் மொழிக்கான வளர்ச்சியாக இருக்க முடியும்?’’

மாஃபா பாண்டியராஜன்
மாஃபா பாண்டியராஜன்

“காலப்போக்கில் மருவிப்போன பெயர்களை, அவற்றின் உண்மையான வரலாற்றுப் பெயராக மீட்டெடுத்து தமிழ்ப்படுத்துவது இப்போதும் சாத்தியம்தான். அந்தந்த ஊராட்சி அமைப்புகளைச் சார்ந்தவர்கள், தங்களது ஊர்ப் பெயரின் வேர்ச்சொல்லை எடுத்து, பெயர் மாற்றம் செய்யக்கோரி தீர்மானம் போட்டு, எங்களது மாவட்டக்குழுவுக்கு அனுப்பிவைத்தால், பரிசீலனை செய்து, பெயர் மாற்றம் செய்யப்படும். மேலும், இது அரசாணையாகவும் வெளியிடப்பட்டு நடைமுறைப் பயன்பாட்டுக்கும் கொண்டு வரப்படும். ஏற்கெனவே இது போன்று பல ஊர்களின் பெயர்கள் எங்கள் துறையின் கவனத்துக்குக் கொண்டுவரப்பட்டு பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளன.’’

“வேற்று மொழியில் அமைந்துள்ள ஊர்ப் பெயர்களையும் அப்படியே தமிழ்ப்படுத்தியிருப்பது எவ்வாறு சரியாகும்?”

“தமிழ் மொழியிலுள்ள ஆங்கில மொழி ஊடுருவலை மாற்றுவதுதான் இப்போதைய முதல் பணி. மற்றபடி தெலுங்கு, கன்னடம், மலையாளம், சம்ஸ்கிருதம், உருது ஆகிய ஐந்து மொழிகளின் தாக்கமும் நிறைய ஊர்ப் பெயர்களில் இருக்கிறது. ‘இவற்றையெல்லாம் தூய தமிழ்ச் சொல்லாக மாற்ற வேண்டும்’ என்று இந்தப் பணியின் ஆரம்பத்திலேயே ஒரு குழு பெரிதும் முயன்றது. ஆனால், இப்படி மொழி மாற்றம் செய்யும்போது கூடுதலாகப் பல்வேறு பிரச்னைகள் எழ ஆரம்பித்தன. ஏற்கெனவே இந்த முயற்சி ஆறு முறை தடைப்பட்டுப் போனதற்கு இதுபோன்ற சிக்கல்களும் ஒரு காரணம். ஆக, எங்கள் நோக்கத்தையே சென்றடைய முடியாத நிலை ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால்தான் இந்த மொழி மாற்றப் பிரச்னையையே தள்ளிவைத்துவிட்டோம். இப்போதும்கூட இந்தப் பணி ஆறு மாத காலம் தாமதமானதற்கு இதுவும் ஒரு காரணம்தான்.’’

“நாடு முழுக்கவே `பண்பாட்டு மீட்சி’ என்ற பெயரில் நடைபெற்றுவரும் மதரீதியிலான கட்டமைப்பின் பின்னணியிலேயே ‘தமிழ்ப்படுத்துதல்’ முயற்சியும் இருப்பதாகச் சொல்லப்படுகிறதே?’’

“நிச்சயம் அப்படி இல்லை... இது எங்கள் நோக்கத்தையே திசை திருப்புகிற வாதம். ‘தமிழ்ப்படுத்துதல்’ என்ற இந்த முயற்சியே தமிழக அரசு எடுத்த முயற்சிதான். இதற்கும் மத்திய அரசுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. எனவே, இதனால் வரும் வாழ்த்துகளும் எனக்குத்தான்; வசவுகளும் எனக்குத்தான்!’’

“பாண்டியராஜன் என்ற தங்கள் பெயரையே இனி நீங்கள், ‘Paandiya Raajan’ என்றுதானே எழுத வேண்டும்?’’

“ஆமாம்... இப்போது நாம் தமிழ்ப்படுத்தியிருக்கும் விதத்தில் பார்க்கப்போனால் அப்படித்தான் எழுத வேண்டும். ஆனால், இது என் அப்பா எனக்கு வைத்த பெயர். எனவே, பள்ளிக்கூடத்தில் ஆரம்பித்து இப்போதுவரை என் பெயர் எப்படி இருக்கிறதோ அப்படியே தொடருவதில்தான் எனக்கு விருப்பம். மாற்ற விருப்பம் இல்லை!’’