அரசு கேபிள் டி.வி நிறுவன தலைவராக இருக்கும் உடுமலை ராதாகிருஷ்ணன் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் தன்னிடம் உள்ள 2 லட்சம் கேபிள் இணைப்புகளை அரசு கேபிள் நிறுவனத்தில் இணைக்க வேண்டும் எனத் தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மணிகண்டன் தெரிவித்தார்.

தமிழக தகவல் தொழில்நுட்பவியல் துறை அமைச்சராக இருந்து வருபவர் டாக்டர் மணிகண்டன். இவரது கட்டுப்பாட்டில் இருந்து அரசு கேபிள் டி.வி நிறுவன தலைவர் பதவியானது கடந்த மாதம் உடுமலை ராதாகிருஷ்ணனுக்கு வழங்கப்பட்டது.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
இந்நிலையில், பரமக்குடி வட்டம் எமனேஸ்வரத்தில் 5-வது தேசிய கைத்தறி தினவிழா கொண்டாடப்பட்டது. மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் தலைமையில் நடந்த விழாவில் பங்கேற்ற தகவல் தொழில்நுட்பவியல் அமைச்சர் மணிகண்டன் 41 நெசவாளர்களுக்கு கடன், சேமிப்பு பாதுகாப்பு நிதி மற்றும் நெசவுத் தொழிலுக்கான உபகரணங்கள் என சுமார் 15.82 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மணிகண்டன், ''தமிழக அரசு கேபிள் டிவி துறைக்கு அமைச்சர் நான்தான். தற்போது அரசு கேபிள் டிவி நிறுவன தலைவராக உடுமலைப்பேட்டை ராதாகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் கேபிள் டிவி தொழில் செய்து வருபவர், அந்தத் தொழிலில் நல்ல அனுபவம் உடையவர். தனியார் நிறுவன கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மாறிக்கொள்ள வேண்டும் என அவர் கூறியிருக்கிறார். ஒரே இரவில் அனைத்து தனியார் கேபிள் டிவி இணைப்புகளையும் அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மாற்றிவிட முடியாது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
முதலில் அவர் அட்சயா கேபிள் டிவி என்ற நிறுவனத்தை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் 2 லட்சம் கேபிள் டிவி இணைப்புகள் உள்ளன. வில்லெட் என்ற கம்பெனி செட் ஆப் பாக்ஸ் மூலம் அந்த 2 லட்சம் இணைப்புகளை இயக்கி வருகிறார். மற்றவர்களுக்கு முன்னுதாரணமாகத் தன்னுடைய அட்சயா கேபிள் விஷனில் உள்ள 2 லட்சம் இணைப்புகளை அரசு கேபிள் டிவி நிறுவனத்துக்கு மாற்ற வேண்டும். அதன் பிறகு மற்றவர்கள் வைத்துள்ள இணைப்புகளை மாற்ற வேண்டும். அவரிடம் உள்ள 2 லட்சம் இணைப்புகளை அரசு இணைப்புக்கு மாற்றுவதன் மூலம் அரசுக்கு நல்ல வருவாய் கிடைக்கும்.

உதாரணமாக, நான் மருத்துவர். ஆனால், அமைச்சர். அம்மா கொடுத்த பதவி என்பதால் எனது மருத்துவர் தொழிலை முழுதாக விட்டுவிட்டு அமைச்சராகப் பணியாற்றி வருகிறேன். நான் அறுவைசிகிச்சை செய்துகொண்டே அமைச்சராகவும் இருக்க முடியாது. எனவே, அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவராக இருக்கக் கூடியவர் ( உடுமலை ராதாகிருஷ்ணன்) மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக இருக்க வேண்டும். அவருக்கு அரசு கேபிள் டிவி நிறுவன தலைவர் பதவி கொடுக்கப்பட்டது குறித்து முதல்வர் என்னிடம் ஆலோசனை நடத்தவில்லை. இனிமேல் நடத்துவார் என நினைக்கிறேன். எனவே, உடுமலை ராதாகிருஷ்ணன் தன்னிடம் உள்ள கேபிள் இணைப்புகளை அரசு நிறுவனத்திற்கு மாற்றிவிட்டு மற்ற தனியார் கேபிள் ஆப்பரேட்டர்களுக்கு அறிவுரை சொல்லலாம்'' என்றார்.