Published:Updated:

அதிகாரிகளில் கறுப்பு ஆடுகள்!

மனோ தங்கராஜ்...
பிரீமியம் ஸ்டோரி
News
மனோ தங்கராஜ்...

- கொந்தளிக்கும் அமைச்சர் மனோ தங்கராஜ்...

“தொடர் மழையால் கன்னியாகுமரி மாவட்டம் மிதப்பதற்கு அரசு அதிகாரிகள் மத்தியிலுள்ள சில கறுப்பு ஆடுகளே காரணம்” என்று ஆவேசமாகப் பேசியிருக்கிறார் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ். வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை முகாமில் தங்கவைத்தபோது அங்கு மின்சாரம் தடைப்பட்டபோதும் அதிகாரிகளிடம் பாய்ந்தார். இந்த நிலையில்தான், மனோ தங்கராஜைச் சந்தித்துப் பேசினோம்...

“கன்னியாகுமரி மாவட்டத்தில் மழைவெள்ள பாதிப்புக்கு அதிகாரிகள்மீது குற்றம் சுமத்துவது ஏன்?”

“கன்னியாகுமரியின் கால்வாய்களை மெல்லிய கான்கிரீட் போட்டும், சில இடங்களில் கற்களை அடுக்கியும் வடிவமைத்திருப்பார்கள். பழைமையான இந்தக் கால்வாய்களை ஆட்களைக் கொண்டுதான் தூர்வார வேண்டும். ஆனால், கடந்த பத்து ஆண்டுகளாக பொக்லைனை இறக்கி தூர்வாரியதில் கான்கிரீட் தளங்கள் உடைந்துபோயின. கால்வாய்க் கரைகளையும் உடைத்துவிட்டார்கள். வெள்ளம் வந்தபோது கான்கிரீட் இல்லாததால், பெருஞ்சாணி உள்ளிட்ட பல கால்வாய்கள் உடைந்துபோயின. இன்னொரு பக்கம் குளங்களைத் தூர்வாரியதாக மோசடி செய்தார்கள். இது பற்றியெல்லாம் அப்போதே நான் விஜிலென்ஸில் புகார் கொடுத்தேன். பேச்சிப்பாறை அணையின் மூலம் சாகுபடி செய்த விவசாய நிலங்களை, தரிசு நிலங்கள் எனச் சான்றளித்து, கட்டடம் கட்ட அனுமதி கொடுத்துவிட்டார்கள். பொதுப்பணித்துறை அதிகாரிகளில் கறுப்பு ஆடுகள் இருக்கிறார்கள். அவர்களைக் களையெடுக்காமல் எதையும் சரிசெய்ய முடியாது.”

“அந்த அதிகாரிகள் யார் என்று சொல்ல முடியுமா?”

“கடமை தவறுபவர்கள் அனைவருமே கறுப்பு ஆடுகள்தான். அதை நாம் அனுமதிக்க முடியாது. அரசு மாற்றம் வந்திருக்கிறது. கடமையைச் செய்யாத அதிகாரிகள், இனியும் அப்படியிருக்க முடியாது. கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.”

“எதிர்க்கட்சியாக இருந்தபோது விஜிலென்ஸில் புகார் கொடுத்தீர்கள். இப்போது உங்கள் ஆட்சிதானே... ஆக்கிரமிப்புகளை அகற்ற என்ன நடவடிக்கை எடுத்தீர்கள்?”

“மாவட்ட ஆட்சியர் தலைமையில் ஒரு குழு அமைப்பதற்காகப் பேசிவருகிறோம். விரைவில் அந்தக் குழுவினர் கால்வாய்கள், ஓடைகள், குளங்கள் என நீர்வழிப் புறம்போக்குகளின் ஆக்கிரமிப்பைக் கண்டறிந்து மீட்பார்கள்.”

அதிகாரிகளில் கறுப்பு ஆடுகள்!

“மழை பாதிப்பைப் பார்க்க வந்த முதல்வர் ஸ்டாலின், குமாரகோவில் பகுதியில் விற்பனைக்கு வந்துள்ள கல்லூரியை பார்க்கச் சென்றதாகச் சர்ச்சை எழுந்துள்ளதே?’’

“முதல்வர் வந்த விமானம் மோசமான வானிலையால் தூத்துக்குடியில் தரையிறங்க முடியாமல், மதுரையில் இறங்கி காரில் இங்கு வந்தார். அதனால், முதல்வரின் திட்டத்தில் மாற்றம் ஏற்பட்டது. முதல்வரின் சுறுசுறுப்பைப் பொறுக்க முடியாமல் சிலர் கிளப்பிவிடும் வதந்தியே அது.”

“விவசாய சட்டங்கள் போன்று நீட், மீன்பிடி மசோதாக்களை மத்திய அரசு திரும்பப்பெறும் என நம்புகிறீர்களா?”

“மக்களாட்சித் தத்துவத்தின்படி மக்கள் எதைக் கேட்கிறார்களோ அதைத்தான் கொடுக்க வேண்டும். நீட் தேர்வு சமூகநீதிக்கும் பொருளாதார நீதிக்கும் எதிரானது. புதிய மீன்பிடி மசோதா பன்னாட்டு நிறுவனங்கள், பன்னாட்டு கப்பல்களுக்கு ஆதரவானது. மத்திய அரசு இந்தச் சட்டங்களைத் திரும்பப் பெற வேண்டும்.”