Published:Updated:

முட்டாளாக இருக்கிறார் எம்.ஆர்.காந்தி! - அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!

மனோ தங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மனோ தங்கராஜ்

யாருக்கு மத நம்பிக்கை இருக்கு, யாருக்கு மத நம்பிக்கை இல்லைன்னு சான்றளிக்க எம்.ஆர்.காந்தி யார்... எந்த அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்..

முட்டாளாக இருக்கிறார் எம்.ஆர்.காந்தி! - அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!

யாருக்கு மத நம்பிக்கை இருக்கு, யாருக்கு மத நம்பிக்கை இல்லைன்னு சான்றளிக்க எம்.ஆர்.காந்தி யார்... எந்த அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்..

Published:Updated:
மனோ தங்கராஜ்
பிரீமியம் ஸ்டோரி
மனோ தங்கராஜ்

‘இந்துக் கோயில் நிகழ்ச்சிகளில், கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை வகித்து எந்த நிகழ்ச்சியையும் நடத்தக் கூடாது’ எனச் சொல்லி குமரி பா.ஜ.க தொடர் போராட்டம் நடத்திவருகிறது. அமைச்சர் மனோ தங்கராஜ், கோயில்களுக்குப் போவதும், அதை எதிர்த்து போராடும் பா.ஜ.க-வினரை போலீஸ் கைதுசெய்வதும் தொடர்கதையாகிவரும் சூழலில், தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் மனோ தங்கராஜிடம் பேசினேன்...

‘‘திடீரென கோயில் நிகழ்ச்சிகளில் ஆர்வமாகப் பங்கேற்பதற்கு என்ன காரணம்?’’

‘‘1996-ல் மாவட்ட பஞ்சாயத்துத் தலைவராக இருந்த காலத்திலிருந்தே பல கோயில் விழாக்கள், கும்பாபிஷேக நிகழ்ச்சிகளுக்கு மக்கள் அழைப்பின்பேரில் போய்வருகிறேன். தேர் வடம் பிடித்திருக்கிறேன். நான் கோயிலுக்குப் போவது ஒன்றும் புதுசு இல்லை.’’

‘‘ஆனால், நீங்கள் செருப்பு அணிந்து தேர் வடம்பிடித்ததாகச் சர்ச்சை கிளம்பியிருக்கிறதே..?’’

‘‘இயல்பாகவே அலுவலகங்கள், வீடுகளுக்குள் சென்றால் செருப்பைக் கழற்றிவைத்துவிட்டுச் செல்லும் பழக்கம்கொண்டவன் நான். அப்படிப்பட்டவன் கோயிலுக்குள் செருப்பு அணிந்துகொண்டு போவேனா... அப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை. நாங்கள் வடம்பிடிக்க வரக் கூடாது என்று இரண்டு நாள்களுக்கு முன்பே பா.ஜ.க-வினர் பிரச்னை செய்ய ஆரம்பித்துவிட்டனர். அதனால், உள்நோக்கத் துடனேயே இந்தப் பொய்யைப் பரப்புகிறார்கள்.’’

‘‘இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்குள் வரக் கூடாது என்று பா.ஜ.க எம்.எல்.ஏ எம்.ஆர்.காந்தி எதிர்க்கிறாரே?’’

‘‘யாருக்கு மத நம்பிக்கை இருக்கு, யாருக்கு மத நம்பிக்கை இல்லைன்னு சான்றளிக்க எம்.ஆர்.காந்தி யார்... எந்த அடிப்படையில் அவர் சான்றளிக்கிறார்... பொதுமக்களே அமைச்சரைக் கோயிலுக்கு அழைக்கும் சூழலில், ‘வராதே’ என்று சொல்ல பா.ஜ.க-வுக்கு என்ன உரிமை இருக்கிறது... கன்னியாகுமரி மாவட்ட இந்து மக்களின் ஏகோபித்த பிரதிநிதியா எம்.ஆர்.காந்தி... பா.ஜ.க-வுக்கு இருக்கும் இந்து வாக்குவங்கியைவிடவும் தி.மு.க-வின் இந்து வாக்குவங்கி அதிகம்.’’

‘‘கோயில்களில் அரசாங்கம் வளர்ச்சிப் பணிகளைச் செய்யவில்லை. இந்து சமய அறநிலையத்துறைதான் செய்கிறது என்று எம்.ஆர்.காந்தி கூறியிருக்கிறாரே?’’

‘‘அறநிலையத்துறையும் அரசாங்கமும் ஒண்ணுதான்னு தெரியாத முட்டாளாக இருக்கிறார் எம்.ஆர்.காந்தி. தி.மு.க ஆட்சியில் கன்னியாகுமரி மாவட்ட கோயில்களில் சுமார் 50 கோடி ரூபாய்க்கான திருப்பணிகள் நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. இதைப் பொறுக்க முடியாமல்தான் அவர் அப்படிச் சொல்கிறார்.’’

முட்டாளாக இருக்கிறார் எம்.ஆர்.காந்தி! - அமைச்சர் மனோ தங்கராஜ் காட்டம்!

‘‘நீங்கள் தேர் வடம்பிடித்து இழுத்ததைக் கண்டித்து பா.ஜ.க மாநிலத் தலைவர் அண்ணாமலையே அறிக்கை விட்டிருக்கிறாரே?’’

‘‘பா.ஜ.க-வைப் பார்த்து இந்துக்களே சிரிக்கிறார்கள். பிரிவினை அரசியல் பண்ணலாமென்று பா.ஜ.க-வினர் நினைத்தார்கள்... ஆனால் அது நடக்கவில்லை. நோன்பு திறப்புக்கு அண்ணாமலை போயிருக்கிறார். பொன்.ராதாகிருஷ்ணன்கூட ஓட்டுக்காக கிறிஸ்தவ பிஷப்பைப் போய்க் கும்பிட்டவர்தான். ‘இந்து மாணவர்களுக்குக் கல்வி உதவித்தொகை தருவோம், படித்த இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு தருவோம்’ என்று சொன்ன பா.ஜ.க-வினர் அதையெல்லாம் செய்யாததை மறைக்க, மலிவான அரசியலில் இறங்கியிருக்கிறார்கள்.’’

‘‘ `பிற மத நிகழ்ச்சிகளில் நாங்கள் தலையிடுவதில்லை, மனோ தங்கராஜ் ஏன் இந்துக் கோயில் நிகழ்ச்சிகளுக்கு வருகிறார்?’ என்று பா.ஜ.க தலைவர்கள் கேட்கிறார்களே?’’

‘‘நீங்களும் வாங்கன்னுதான் நாங்க சொல்றோம். தேவசகாயம் பிள்ளைக்குப் புனிதர் பட்டம் வழங்கப்பட்ட நன்றி அறிவித்தல் நிகழ்ச்சிக்கு பொன்.ராதாகிருஷ்ணனையும், எம்.எல்.ஏ காந்தியையும் முறைப்படி அழைப்பிதழில் பெயரிட்டு, கூப்பிட்டிருந்தார்கள். ஆனால், அவர்கள்தான் அந்த நிகழ்ச்சிக்கு வரவில்லை. மாற்று மதங்களை எதிரியாகப் பார்க்கக்கூடியவர்கள் பா.ஜ.க-வினர். அவர்கள் ஆன்மிகத்தை மதவெறியாக மாற்றுகிற முயற்சியில் ஈடுபடக்கூடியவர்கள். நாங்களோ எல்லா மதங்களையும் மதிக்கக்கூடியவர்கள்.’’

‘‘கோயில் நிகழ்ச்சிகளுக்கு நீங்கள் தலைமையேற்பது தொடரும் என்கிறீர்களா?’’

‘‘ஐந்து தேர்தல்களில் இந்து மக்களின் வாக்குகளைப் பெற்று ஜெயித்தவன் இந்த மனோ தங்கராஜ். அந்த மக்கள் அழைப்பதால் அனைத்து கோயில் நிகழ்ச்சிகளிலும் நான் கலந்து கொள்கிறேன். இனியும் கலந்துகொள்வேன்.”

‘‘ `இந்து மத நம்பிக்கை இல்லாதவர்கள் கோயிலுக்கு வரக் கூடாது’ என்று விதிமுறை இருப்பதாகச் சொல்கிறார்களே?’’

‘‘அப்படியெல்லாம் இல்லை. பா.ஜ.க-வினருக்கு ஆன்மிகம் படிக்க ஆசையிருந்தால், என்னிடம் வரச்சொல்லுங்கள்.’’

‘‘பா.ஜ.க., தன்னை வளர்த்துக்கொள்ள உங்களைக் கருவியாகப் பயன்படுத்துகிறதா?’’

‘‘இது பா.ஜ.க-வுக்கு அழிவைத்தான் தேடித்தருமே தவிர... எந்த வளர்ச்சியையும் தராது. இதனால் இந்துக்களின் ஆதரவு அவர்களுக்குக் குறையும். அமைச்சர் கோயிலுக்கு அழைக்கப்படுகிறார், போகவேண்டிய புரோட்டோகால் இருப்பதால் போகிறார். அதைத் தடுப்பேன் என்று சொல்லுகிற ஒரு கட்சிக்காரனை மக்கள் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்... எனக்கு எதிராக அற்ப பாலிடிக்ஸ் செய்து அவர்களால் ஜெயிக்க முடியாது!’’

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism