கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் இணைந்து நடத்தும் புத்தகத் திருவிழா நாகர்கோவில் கோணம் அரசு பாலிடெக்னிக் மைதானத்தில் நேற்று மாலை தொடங்கியது. தமிழக தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் மனோ தங்கராஜ், மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர் ஆகியோர் புத்தகக் கண்காட்சியை திறந்துவைத்தனர்.

நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ.மகேஷ், எஸ்.பி.ஹரிகிரன் பிரசாத், மாவட்ட வன அலுவலர் இளையராஜா உட்பட பலர் கலந்துகொண்டனர். இதில் மாவட்ட வன அலுவலர் இளையராஜா, "அம்பேத்கர், ஆபிரகாம் லிங்கன் ஆகியோரை நாம் வாசிக்க வேண்டும். அவர்கள் சாதி வெறி, இனவெறிக்கு எதிராகப் போராடியவர்கள். வாசிப்பு பழக்கம் இளைஞர்களைத் தலைவர்களாக மாற்றும். `நூலக வாசல் திறக்கப்படும்போது சிறைச்சாலை வாசல் மூடப்படுகிறது’ என சுவாமி விவேகானந்தர் தெரிவித்தார். எனவே, இளைஞர்கள் செல்போனில் மூழ்காமல் புத்தகங்களை வாசித்து முன்னேற வேண்டும்" என்றார்.
மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், "புத்தகக் கண்காட்சியின் முக்கிய நோக்கம் அனைத்து மாணவர்களும், இளம் வயதிலிருந்து புத்தகத்தை வாசிக்கும் பழக்கத்தை உருவாக்க வேண்டும் என்பதுதான். பள்ளிப்பருவத்திலேயே புத்தகங்களை வாசித்தால் கல்லூரியிலும், வேலைக்குச் செல்லும்போதும் நம்பிக்கையை உருவாக்கும். சமுதாயத்தை அறிவார்ந்த நிலைக்கு உயர்த்துவதில் புத்தக வாசிப்புக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. ஆசிரியர்களும், பெற்றோர்களும் குழந்தைகளைப் புத்தகம் வாசிக்க ஊக்குவிக்க வேண்டும்.

மாவட்ட மைய நூலகம் நாகர்கோவிலில் செயல்பட்டுவருகிறது. மாவட்ட மைய நூலகம் முழுமையாக கம்ப்யூட்டர் மயமாக்கப்பட்டிருக்கிறது. மாவட்டத்தில் 21 கிளை நூலகங்கள், கிராமப்புறங்களில் 109 கிராமப்புற நூலகங்கள் செயல்பாட்டில் இருக்கின்றன. கிராமங்களிலும், நகரங்களிலும் மக்களுக்குப் புத்தகங்கள் வாசிக்க எளிதில் கிடைக்க வேண்டும் என்பதற்காக அரசு ஏற்பாடு செய்திருக்கிறது. மாணவர்கள் இ-புத்தகம் டிஜிட்டல் மூலமாக வாசிக்க திட்டங்கள் கொண்டுவரப்படவிருக்கின்றன. எல்லோரும் வாசிக்கும் வகையில் அவர்கள் வசிக்கும் பகுதியிலேயே ஏற்பாடு செய்யப்பட்டுவருகிறது. இந்தக் கண்காட்சியின் முழுப் பலனை அனைவரும் அடைய வேண்டும்" என்றார்.
அமைச்சர் மனோதங்கராஜ், "தமிழக முதல்வர் எல்லா நிலையிலும், எல்லா மக்களுக்கும் அனைத்து விதமான வாய்ப்புக்களையும் கொடுக்க வேண்டும் என பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்திவருகிறார். அதன்படி உலகத்தரம் வாய்ந்த புத்தகங்களைக்கொண்டு சென்னையில் புத்தகத் திருவிழா நடத்தப்பட்டது. அதைத் தொடர்ந்து அனைத்து மாவட்டங்களிலும் புத்தகக் கண்காட்சி செயல்படுத்தப்பட்டுவருகிறது. ஐடி துறை சார்பில் திருக்குறள் ஓவியப் போட்டி, வாசிக்கும் போட்டி, திருக்குறளை நாடகமாக நடித்துக்காட்டும் நிகழ்ச்சிகள் நடத்திவருகிறோம். தமிழ் இணையத்தில் டிஜிட்டல் திருக்குறளை பதிவேற்றம் செய்திருக்கிறோம். வாசிப்பு எவ்வளவு முக்கியம் என எல்லோரும் கூறினார்கள். நீங்கள் நிறைய படிக்க வேண்டும். புரிந்துகொண்டு படித்து அந்த அறிவை வாழ்க்கையில் பயன்படுத்த வேண்டும். சரித்திரம் படைத்த தலைவர்கள் வாசிப்பை நேசித்தவர்களாக இருந்தார்கள். நானும், கலை இலக்கியம், ஆன்மிகம், வரலாற்றுப் புத்தகங்களைப் படித்து வருகிறேன்.

பயணத்தின்போதும் புத்தகங்களை வைத்திருப்பேன். பொதுவாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நேரம் கிடைப்பது பெரும் சவால். நேரம் இருப்பவர்கள் புத்தகத்தை வாசித்தால் அது மிகப் பயனுள்ள நேரமாக அமையும். சிலர் வாழ்க்கையில் எந்த முடிவும் எடுக்காமல் இருப்பார்கள். அவர்களுக்கு முன் அனுபவம் இருக்காது. புத்தகம் மூலம் எல்லாவற்றையும் புரிந்துகொள்ள முடியும், எளிதில் முடிவு எடுக்க முடியும். பண்டைய இலக்கியங்களைப் படித்தால் மக்கள் எவ்வாறு வாழ்ந்தார்கள் எனப் படிக்க முடியும்.
முதலில் ஒரு புத்தகம் படிப்பது சாதனையாக இருக்கும். அதன் பிறகு நமக்குப் பழகிவிடும். பெற்றோர்கள் குழந்தைகளை புத்தகம் படிக்க வைய்யுங்கள். ஒரு குழந்தையால் ஒரு விஷயத்தில் 12 நிமிடங்கள்கூட கவனம் செலுத்த முடியாது, அந்தத் தன்மை இன்னும் குறையும் என்கிறார்கள் வல்லுநர்கள். புத்தகம் படிக்கவைத்தால் அந்த தன்மையை மீட்டெடுக்க முடியும்.

இன்று கடவுள் பெயரில் பெரிய சண்டை நடக்கிறது. `விருப்பு வெறுப்புக்களுக்கு அப்பாற்பட்டிருக்கும் அற்புதமான தன்மை இறைத்தன்மை’ என திருக்குறளில் திருவள்ளுவர் சொல்லியிருக்கிறார். எனவே, வெறுப்பை மட்டும் கொண்டவர்கள் இறைவனை நெருங்க முடியாது. நம் தமிழ் இலக்கியங்களிலுள்ள சித்தர் பாடல்களில், `நட்டக்கல்லும் பேசுமோ நாதன் உள் இருக்கையில்’ எனச் சொல்கிறார்கள். உள்ளத்தின் தூய்மைப் பற்றி மிகத்தெளிவாக எடுத்துச்சொல்லும் தமிழ்ச் சமூகம் அற்புதமானது. நம் நாட்டின் சட்டங்களைப் பற்றி மாணவர்களுக்குச் சொல்லிக்கொடுக்க வேண்டும் என திட்டமிட்டிருக்கிறேன். குடியாட்சி தத்துவம் அழிந்துவிடக் கூடாது. வைக்கம் சத்தியாகிரகம் 100-வது ஆண்டு, தோள்சீலை போராட்டத்துக்கு 200-வது ஆண்டு. ஆடை அணிய முடியாத நிலை, கோயில் சாலையில் மக்கள் நடக்க முடியாத நிலை எல்லாம் மனிதர்கள் ஏற்டுத்தியது. மனித சமூகம் நன்றாக வாழ, நிஜமான ஆன்மிகத்தைப் பார்க்க அறிவால்தான் முடியும்" என்றார்.