கள்ளச்சாராயம் குடித்து இதுவரை 23 பேர் உயிரிழந்திருக்கும் நிலையில், மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றுவந்தவர்கள் தற்போது வீடுகளுக்குத் திரும்பிவருகின்றனர். இதற்கிடையே, இந்தக் கள்ளச்சாராய விற்பனையில் தொடர்புடையதாக கூறப்படும் நபர்கள் அடுத்தடுத்து கைதுசெய்யப்பட்டனர். மேலும், திண்டிவனம் பகுதியின் பிரபல சாராய வியாபாரியான மரூர் ராஜா மீதும் குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. திண்டிவனம் நகராட்சியின் 20-வது வார்டு தி.மு.க பெண் கவுன்சிலர் ரம்யாவின் கணவரான இவர், அமைச்சர் செஞ்சி மஸ்தானுடன் இருந்த புகைப்படங்களுடன் சர்ச்சைக் கருத்துகள் எழுந்தன.

இதைத் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டு, கண்டனத்தைப் பதிவுசெய்திருந்தார் பா.ஜ.க-வின் மாநிலத் தலைவர் அண்ணாமலை. இது குறித்து கடந்த வாரம் தனியார் தொலைக்காட்சி ஒன்று கேட்ட கேள்விக்கு தொலைபேசி வாயிலாக பதிலளித்திருந்த அமைச்சர் மஸ்தான், "அந்த நபரின்மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. அவர் பா.ம.க-வில் இருந்தார்... அ.தி.மு.க-வில் இருந்தார். டாக்டர் ராமதாஸுக்கும் உறவினர், சி.வி.சண்முகத்திற்கும் உறவினர். ஆக, இவ்வாறு கட்சி மாறி வந்து புகைப்படம் எடுத்துக்கொள்வதை வைத்து அப்படிச் சொல்ல முடியாது" என்று பேசியிருக்கிறார். இது பா.ம.க தொண்டர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியிருந்தது.
இந்த நிலையில், கடந்த 23-ம் தேதி மாலை திண்டிவனத்திலுள்ள தனியார் மண்டபம் ஒன்றில் விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க-வின் செயற்குழு ஆலோசனைக் கூட்டம் நடைபெறவிருந்தது. இதை அறிந்த பா.ம.க தொண்டர்கள், அமைச்சர் மஸ்தானுக்கு கறுப்புக்கொடி காட்டத் திட்டமிட்டிருந்தனர். அதற்காக பா.ம.க மாவட்டச் செயலாளர் ஜெயராஜ் தலைமையில் திரண்ட 100-க்கும் மேற்பட்ட பா.ம.க-வினர் கறுப்புக்கொடி ஏந்தி ஊர்வலமாகச் சென்றனர். அப்போது போலீஸாருக்கும், பா.ம.க-வினருக்குமிடையே தள்ளு முள்ளு ஏற்பட்ட நிலையில், பா.ம.க-வினர் அனைவரும் கைதுசெய்யப்பட்டு திண்டிவனம் தனியார் மண்டபம் ஒன்றில் அடைக்கப்பட்டனர். இந்தச் சம்பவம் திண்டிவனம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதைத் தொடர்ந்து, அறிவிக்கப்பட்டதைப்போலவே விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க செயற்குழு ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்றார் அமைச்சர் மஸ்தான்.

அப்போது பேசியிருந்த அவர், "சகோதரர்கள் கறுப்புக்கொடி காட்டி வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார்கள் என்று கேள்விப்பட்டேன். எனக்கும் வருத்தம்தான். அதைப்போல சம்பவம் நடக்கக் கூடாது. அவ்வாறு நடப்பதற்கு நான் என்றும் உறுதுணையாக இருக்க மாட்டேன். எனது எண்ணம், சொல், செயல் எப்போதுமே சரியாக இருக்கும். நான் யாரைப் பற்றியும் எங்கு பேசும்போதும்கூட ஒருமையில் உச்சரிப்பதைத் தவிர்ப்பவன். நான் சொல்ல வந்தது என்னவென்றால்... என்னிடத்திலே, அமைச்சர் என்ற முறையில், ஆளுங்கட்சி என்ற முறையில், பல்வேறு கட்சியிலிருந்து விலகியவர்கள் தி.மு.க-வில் வந்து இணைந்தனர். கடந்த இரண்டாண்டுக்காலத்தில், குறிப்பாக திண்டிவனம் பகுதியிலிருந்து சுமார் 2,000-க்கும் மேற்பட்ட பா.ம.க-வினர் தி.மு.க-வில் வந்து இணைந்தனர். அதேபோல் அ.தி.மு.க-விலிருந்தும் பல பேர் விலகி வந்து தி.மு.க-வில் இணைந்தார்கள். அவர்களுக்குப் பல்வேறு காலகட்டங்களில் உள்ளாட்சியில் போட்டியிடும் வாய்ப்பையும் வழங்கினோம். அதை எதிர்க்கட்சிகளால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.
எனவே யாருக்கும், எப்போதும் வருத்தம் இல்லாமல்தான் எனது செய்தி இருக்கும். கட்சிக்குப் புதிதாக வருபவர்களிடம் உறவினர்கள் பற்றிக் கேட்பேன். அதுபோலத்தான், அவரிடமும் கேட்டேன். மருத்துவர் ராமதாஸுடன் நான் எந்த அளவுக்கு பழகியிருக்கிறேன் என்பது அவருக்கும் தெரியும். யாருடைய மனதையும் புண்படுத்துவதாக அந்தச் செய்தி இருக்காது. அதை நீங்கள் தவறாக நினைத்துக்கொண்டால்... அதற்கும், எனது தவறான சிந்தனைக்கும் வருத்தம் தெரிவிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன்" என்று குறிப்பிட்டார்.