Published:Updated:

``நாங்கள் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறோம், எங்களுக்கு வாரிசு அரசியல்தான்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

கனிமொழி, செஞ்சி மஸ்தான்

"உங்களை எந்த இடத்திலும் இல்லாமல் போகச் செய்யும் நெருப்பு தமிழ்நாட்டிலே இருக்கிறது. சூடு, சுயமரியாதை தனியாக தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு" - எம்.பி கனிமொழி

Published:Updated:

``நாங்கள் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறோம், எங்களுக்கு வாரிசு அரசியல்தான்" - அமைச்சர் செஞ்சி மஸ்தான்

"உங்களை எந்த இடத்திலும் இல்லாமல் போகச் செய்யும் நெருப்பு தமிழ்நாட்டிலே இருக்கிறது. சூடு, சுயமரியாதை தனியாக தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு" - எம்.பி கனிமொழி

கனிமொழி, செஞ்சி மஸ்தான்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தி.மு.க சார்பில் பேராசிரியர் அன்பழகனின் நூற்றாண்டு பொதுக்கூட்ட விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில், திமுக துணைப் பொதுச்செயலாளர் கனிமொழி, சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர். முதலில் பேசிய அமைச்சர் செஞ்சி மஸ்தான், "தமிழ் வாழ்க! இந்தி ஒழிக! என்று கூறி பொது வாழ்வில் தன்னை இணைத்துக் கொண்டவர் கலைஞர். அன்று, மத்தியிலேயே ஆட்சியில் இருந்த இந்திரா காந்தி அவர்கள், அவசர சட்டம் கொண்டுவரும் நேரத்தில், கருணாநிதி அதை எதிர்த்தார் என்பதற்காக... ஆட்சி கலைக்கப்பட்டு, திமுக உடன்பிறப்புகள் 500-க்கும் மேற்பட்டோர் சிறைவாசம் சென்றனர். அதில் தளபதி ஸ்டாலினும் உள்ளடங்கியவர். அவ்வாறு சிறைவாசத்தை அனுபவித்தவர் அவர். தளபதி அவர்கள் சிறையில் இருந்தபோது தியாகத்தின் வடிவில் பிறந்தவர் தான் உதயநிதி ஸ்டாலின்.

விழா மேடை
விழா மேடை

இந்த வரலாற்றை தெரிந்தும், மூடி மறைப்பதற்காக, அரசியல் லாபத்திற்காக, இன்றைக்கு அரசியலில் விலைப்போகாத சில கட்சித் தலைவர்கள்... 'வாரிசு அரசியல்' என்று சொல்கிறார்கள். நாங்கள் பெருமையோடு ஏற்றுக் கொள்கிறோம், எங்களுக்கு வாரிசு அரசியல் தான். எங்களுக்கு வாரிசு இருக்கிறது, கொள்கை ரீதியான வாரிசு. உதயநிதி, இளைஞர்களுக்கு ஒரு முகவரியாக திகழ்வார். "உதயநிதி அமைச்சரானால் பாலும், தேனும் ஓடுமா" என்றார் எடப்பாடி பழனிசாமி. அவருக்கு நான் நன்றி சொல்ல கடமைப் பட்டுள்ளேன். அவர் என்ன நினைத்து சொன்னாரோ தெரியவில்லை. ஆனால், உண்மையைத்தான் சொல்லி இருக்கிறார். நீண்ட காலமாக பாலாறில் தண்ணீரே ஓடவில்லை. தளபதி ஆட்சிக்கு வந்த பின்னர், உதயநிதி பொறுப்பேற்ற சமயத்தில் தான் பாலாற்றில் தண்ணீரே ஓடுகிறது. விழுப்புரம் மாவட்டம், வெள்ளிமேடு பேட்டை பகுதியில் பாலில் தண்ணீரை கலந்து எடுத்து சென்றவர்கள்... "பாலோடுமா..?" என்கிறார்கள்.

எடப்பாடி பழனிசாமி அவர்களே... ஏரியில் தூர் வாருவதில் லாபம் காண வேண்டும் என்பதற்காக, தலையில் ஒரு பச்சை துண்டை கட்டிக்கொண்டு, கையில் மண்வெட்டியை எடுத்துக்கொண்டு, நான் விவசாயி என்று போலியாக புகைப்படம் கொடுத்தாலும்... ஒரு விவசாய குடும்பத்தை சேர்ந்த நீங்கள், விவசாயிகளுக்கு ஏற்பட்ட பாதிப்பிற்கு குரல் கொடுத்தீர்களா..? மோடி அவர்கள், விவசாயிகளுக்கு பாதிப்பான சட்டங்களை கொண்டு வந்தாரே! அந்த நேரத்தில் என்ன செய்தீர்கள்..? மௌனம் காத்தீர்கள். திமுக தான், தமிழகத்தின் மக்களை திரட்டி, வழிநடை பயணம் சென்று, 'விவசாயிகளுக்கு நாங்கள் இருக்கிறோம். ஒன்றிணைவோம் வாருங்கள்' என்றார். திராவிட மாடலின் லட்சியம்.... நாங்கள் யாருக்கும் அடிமை அல்ல, யாரையும் அடிமைப்படுத்த மாட்டோம்" என்றார்.

செஞ்சி மஸ்தான்
செஞ்சி மஸ்தான்

அவரைத் தொடர்ந்து பேசிய எம்.பி கனிமொழி, "எங்கெல்லாம் பாஜக ஆட்சியில் இல்லையோ அங்கெல்லாம் ஒரு கவர்னரை போட்டுவிடுகிறார்கள். அந்த கவர்னர், தான் ஒரு கவர்னர் என்பதையே மறந்து, ஏதோ கட்சியினரை போலவும், ஆர்.எஸ்.எஸ்-இல் இருப்பவர்களை மாதிரியும் மேடைக்கு மேடை முழுங்கி கொண்டிருப்பதை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். இன்று தமிழகத்தில் ஒரு கவர்னர் இருக்கிறார். அவரிடம் நாம் கேட்பது, ஆன்லைன் ரம்மி வேண்டாம் என்று. அதை எங்களுக்காக கேட்கவில்லை. எத்தனை குடும்பங்கள் அந்த ஆன்லைன் ரம்மியால் பாதிக்கப்படுகிறது என்பதை நினைவில் வைத்துதான் கேட்கிறோம். தமிழக சட்டத்துறை அமைச்சர் அவர்கள், பலமுறை அவருக்கு விளக்கம் அளித்தும்... மேதாவி என சொல்லப்படக்கூடிய கவர்னருக்கு அது புரியவில்லை என்றால் அதன் பின்னணியின் காரணம் என்னவென்று நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

பலரின் குடும்பங்களை பாதிக்கும், உயிரைக் குடிக்கும் ஆன்லைன் ரம்மியை தடை செய்ய வேண்டும் என்று மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதலமைச்சராக இருக்கும் ஸ்டாலின் அவர்கள் ஒரு சட்டம் இயற்றி அனுப்பினால், மாதக் கணக்கிலே அதை வைத்துக்கொண்டு, "எந்தெந்த வகையில் நாம் பிரச்னைகளை உருவாக்க முடியும்; அவர்களை, மக்களுக்கு நல்லது செய்ய விடக்கூடாது" என்பதற்காகவே ஒரு கவர்னரை நியமித்து அனுப்பி இருக்கிறார்கள் என்று எண்ணக்கூடிய அளவிலே இன்று நிகழ்வுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. கவர்னர் பதவி என்பது தேவையில்லாத ஒன்று. திராவிட மாடல் என்றால் என்ன? என்று கேட்கிறார்களே... அவர்களுக்கு சொல்கிறேன், தந்தை பெரியாரின் கனவு திராவிட மாடல், பேரறிஞர் அண்ணா செயல்படுத்த நினைத்ததை இன்று செயல்படுத்தி வருகின்றோமே அது திராவிட மாடல், கலைஞரின் திட்டங்கள் திராவிட மாடல், அதுதான் தளபதி நடத்தும் திராவிட மாடல் ஆட்சி.

கனிமொழி
கனிமொழி

திராவிட ஆட்சி தான் இன்று இந்தியாவிலேயே முதலிடத்தில் இருக்கிறது. எதிர்க்கட்சிகள் சில மாநிலங்களில் ஆட்சியைப் பிடித்தாலும், அதை உடைத்து ஆட்சியைப் பிடிக்கிறார்கள் மத்தியில் ஆள்பவர்கள். எங்கள் தமிழக அரசின் நிதியில் கட்டிய கல்லூரிகளில், நுழைவு தேர்வு என்ற பெயரில் மாணவர்களுக்கு தேர்வை வைத்து, எங்களது பிள்ளைகள் உள்ளே போக முடியாது என்று சொன்னால், நாங்கள் பார்த்துக் கொண்டிருப்போம் என்று நீங்கள் எதை வைத்து நினைக்கிறீர்கள். இது தமிழ்நாடு... தந்தை பெரியாரின் நாடு. அந்த வழியிலே வந்து ஆட்சி செய்பவர்தான் முதல்வர் ஸ்டாலின். அவர் இருக்கும் இடத்தில், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம் என நினைத்தீர்கள் என்றால் நான் உங்களுக்காக வருத்தம் மட்டும் தான் படமுடியும், வேறு வழி இல்லை. 

உங்களை எந்த இடத்திலும் இல்லாமல் போகச் செய்யும் நெருப்பு தமிழ்நாட்டிலே இருக்கிறது. சூடு, சுயமரியாதை தணியாத தமிழ்நாடு எங்கள் தமிழ்நாடு. அதிமுக-வில் இருப்பவர்கள் தொடர்ந்து ஒன்றிய அரசாங்கம் சொல்லக்கூடிய அனைத்திற்கும் தலையாட்டி கொண்டுள்ளீர்கள். ஆட்சியில் இருக்கும் போதும், இப்போதும் அப்படிதான் உள்ளீர்கள். தமிழ்நாட்டிற்கு எதிராக அவர்கள் சட்டம் கொண்டு வந்தாலும் அதை எதிர்க்க உங்களுக்கு துணிவில்லை, திராணியில்லை. 

சாலைகளில் வரவேற்பு பேனர், மக்கள் கூட்டம்
சாலைகளில் வரவேற்பு பேனர், மக்கள் கூட்டம்

பொருளாதாரம் பற்றி ஒன்றிய நிதி அமைச்சரிடம் கேள்வி கேட்டால், "நம் நாணயத்தின் மதிப்பு குறையவில்லை. டாலர் மதிப்பு தான் ஏறிக்கொண்டே போகிறது" என்கிறார். பெட்ரோல், டீசல் விலை குறைந்தாலும் ஒன்றிய அரசு அந்த விலையை குறைத்து தருவது இல்லை. அதனால் பாதிக்கப்படுவது என்னவோ மக்கள்தான்  ஏதாவது மாநில தேர்தல் வந்தால், எரிபொருட்களின் விலையினை ஏறாமல் பார்த்துக் கொள்வார்கள். தேர்தல் முடிந்ததும் அதன் விலைகள் உயரத் தொடங்கிவிடும். இதுதான் மத்தியில் இருப்பவர்கள் நடத்தும் அரசியல் நாடகம். இறுதியாக கூறி விடைபெறுகிறேன், தமிழ்நாட்டிலே வேறு யாரும் கால் வைக்க முடியாது என்கிற நிலையை எப்போதும் உருவாக்கி காட்டுவோம்" என்றார். கனிமொழியை வரவேற்பதற்காக, திண்டிவனத்தில் சாலையோரமாக தி.முக-வினரால் பல பேனர்கள் வைக்கப்பட்டிருந்தது. இந்த பேனர்களை வைத்தவர்களை கனிமொழி மேடையிலேயே பாராட்டியதும் குறிப்பிடத்தக்கது.