Published:Updated:

`முதல்வரின் அந்தப் பாராட்டு; வெளிநாடு பயணம் எப்போது?’ - அமைச்சர் மெய்யநாதன் ஷேரிங்ஸ்

மெய்யநாதன்

காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறை அமைச்சர் மெய்யநாதன் நேர்காணல்...

`முதல்வரின் அந்தப் பாராட்டு; வெளிநாடு பயணம் எப்போது?’ - அமைச்சர் மெய்யநாதன் ஷேரிங்ஸ்

காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை ஆகிய துறை அமைச்சர் மெய்யநாதன் நேர்காணல்...

Published:Updated:
மெய்யநாதன்

சுற்றுச்சூழல், விளையாட்டுத்துறையில் செய்யவிருப்பவை, செஸ் ஒலிம்பியாட் போட்டிகளில் எழுந்த சர்ச்சைகள், கருணாநிதியின் பேனா வைப்பது தொடர்பாக எழுந்த கேள்விகள் எனப் பல்வேறு விஷயங்கள் குறித்து சுற்றுச்சூழல் - காலநிலை மாற்றத்துறை மற்றும் இளைஞர் நலன், விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் மெய்யநாதனிடம் சில கேள்விகளை முன்வைத்தோம்…

அமைச்சர் மெய்யநாதன்
அமைச்சர் மெய்யநாதன்

``எதை செஸ் ஒலிம்பியாட் வெற்றிக்கு முக்கியக் காரணமாக நீங்கள் நினைக்கிறீர்கள்?”

``செஸ் ஒலிம்பியாட் அனுமதி பெற்று 45 நாள்கள் என்ன செய்வது, எப்படிச் செய்வது என்ற ஆலோசனையிலேயே கடந்துவிட்டது. பொதுப்பணி, சுற்றுலாத்துறை அமைச்சர்கள், உதயநிதி, ஆ.ராசா ஆகியோர் அடங்கிய குழு ஒன்றை அமைத்தோம். அதன் பிறகு உணவு, வரவேற்பு என ஒவ்வொன்றுக்கும் தனித்தனியாக சிறு சிறு குழுக்கள் அமைத்தோம். இப்படி மைக்ரோ மேனேஜ்மென்ட் செய்ததற்கு முதல்வரின் ஆலோசனையும் ஒரு காரணம். நிறைவுவிழா, தொடக்க விழாக்களை உதயநிதி நடத்தினார். இப்படியான கூட்டு முயற்சிக்குக் கிடைத்தவெற்றிதான் இது.”

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

``முதல்வரின் பாராட்டு என்னவாக இருந்தது?”

``காமன்வெல்த் போட்டியில் வெற்றிபெற்ற வீரர்களுக்குப் பரிசுத்தொகை வழங்கும் நிகழ்வில் ‘செஸ் ஒலிம்பியாட் எப்படி இருந்தது?’ என்றார். ‘நாம் நினைத்ததைவிட ஆயிரம் மடங்கு வெற்றியை இதில் பெற்றிருக்கிறோம்’ என்றேன். ‘எல்லோரும் அதையேதான் சொல்கிறார்கள். ராஜ் பவனுக்குச் சென்றேன். அங்கேயும் இதையேதான் பேசுகிறார்கள்’ எனப் பெருமையாகச் சொன்னார். அவர் எப்படி எதிர்பார்த்தாரோ அப்படி நடத்திக்காட்டிவிட்டோம் என்ற மகிழ்ச்சி என்னிடமும் இருக்கிறது. தன்னுடைய அமைச்சர்கள் தான் ஒரு வேலையைச் சொன்னால் சிறப்பாகச் செய்துகாட்டுவார்கள் என்ற அவரின் நம்பிக்கையைக் காப்பாற்றிவிட்டோம் என்பதில் எனக்கு மிகப்பெரிய மகிழ்ச்சி.”

செஸ் ஒலிம்பியாட்
செஸ் ஒலிம்பியாட்

``செஸ் ஒலிம்பியாட் வெற்றிக்குப் பிறகு மற்ற சர்வதேசப் போட்டிகளையும் நடத்த அனுமதி கோரி கடிதம் எழுதியிருக்கிறீர்களே?”

“நாங்களாக எழுதவில்லை. செஸ் ஒலிம்பியாட் வெற்றியைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் போட்டிகளை நடத்த விருப்பம் தெரிவித்து, சர்வேத அமைப்புகள் பலவும் நமக்குக் கடிதம் எழுதினார்கள். அதையடுத்தே ஒன்றிய அரசுக்குக் கடிதம் எழுதினார் முதல்வர். செப்டம்பர் 12 - 18 வரை சர்வதேச மகளிர் டென்னிஸ் போட்டி நடத்தவிருக்கிறோம். கடற்கரைப் போட்டிகள் நடத்தவும் ஒன்றிய அரசிடம் அனுமதி கோரியிருக்கிறோம். தொடர்ந்து சர்வதேச அளவிலான போட்டிகளை நடத்துவோம்.”

``நிதி நிலைமை எனச் சொல்வதன் மூலம் திட்டங்களைச் சொல்லிவிட்டுத் தப்பிவிடுவதுபோல இருக்கிறதே?”

“நிச்சயமாக இல்லை. அறிவிக்கப்பட்ட திட்டங்கள் என்னென்ன, அதன் நிலை என்ன, எப்போது நிறைவேற்றப்படும் என அனைத்தையும் முதல்வருக்குச் சொல்லியாக வேண்டும். இல்லையென்றால் தலைவரிடமிருந்து தப்ப முடியாது. அதை மனதில்வைத்துத்தான் ஒவ்வோர் அமைச்சரும் செயல்பட்டுக்கொண்டிருக்கிறோம். எனவே, இவையெல்லாம் நிச்சயம் செயல்பாட்டுக்கு வரும்.”

விளையாட்டு!
விளையாட்டு!

``தமிழ்நாட்டில் பல பள்ளிகளில் விளையாட்டு மைதானங்களே இல்லையே... அதற்கு என்ன திட்டம் வைத்திருக்கிறீர்கள்?”

“விளையாட்டு மைதானங்கள் இல்லை என்பது உண்மைதான். அப்படியிருக்கும்போது விளையாட்டுத்துறையைக் கண்டிப்பாக முன்னேற்ற முடியாது. விளையாட்டுத்துறையை பள்ளி, கல்லூரி, பல்கலைக்கழகங்களுக்குக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற எண்ணம் இருக்கிறது. பள்ளி சார்ந்த விளையாட்டுப் போட்டிகள் நடத்துவதும் கொரோனாவால் தடைப்பட்டிருந்தது. அவற்றையெல்லாம் சரிசெய்யும் வேலை இப்போது நடந்துகொண்டிருக்கிறது. இன்னும் அதிகமாக அதைக் கொண்டு சேர்க்கவும் நடவடிக்கை எடுத்துவருகிறோம்.”

``கடற்கரை ஓரத்தில் கருணாநிதியின் பேனாவுக்கு சிலை வைப்பதும் சர்ச்சையாகியிருக்கிறதே?”

“தமிழ்ச் சமுதாயம் இன்றைக்கு அடைந்திருக்கும் உயர்வுக்கு முக்கியக் காரணம் முன்னாள் முதல்வர், முத்தமிழறிஞர், தலைவர் கலைஞர் இட்ட கையெழுத்துகள்தான். மக்களின் அனைத்துப் பிரச்னைகளுக்கும் தீர்வு சொன்னது அந்தப் பேனா. இன்றைக்குத் தமிழ்நாட்டில் இருக்கும் நவீன கட்டமைப்புகள், கல்வி, பொருளாதாரம், சமூகம் என அனைத்துத் தளங்களிலும் அடைந்திருக்கும் மேம்பாட்டுக்குக் காரணம் தலைவரின் பேனாதான். அதை எதிர்காலச் சந்ததியினர் தெரிந்துகொள்ளும் வகையில் அதற்கான சிலையை அமைக்கவிருக்கிறோம். 80 ஆண்டுகளுக்கும் மேல்லாக, தமிழ்நாட்டு மக்களுக்காக உழைத்தவரின் அடையாளமான பேனாவுக்குச் சிலை வைப்பதில் எந்தத் தவறும் இருப்பதாக எனக்குத் தெரியவில்லை.”

மாதிரி பேனா சின்னம்
மாதிரி பேனா சின்னம்

``தமிழ்நாட்டில் குப்பை மேலாண்மையில் இன்னும் பல்வேறு குற்றச்சாட்டுகள் சொல்லப்படுகின்றனவே?”

“சுற்றுச்சூழலை எந்தவித பாதிப்பும் இன்றி மீட்டெடுக்க வேண்டும் என்பதுதான் முதல்வரின் நோக்கம். பெருங்குடி, வண்டிப்பாளையம், வெள்ளலூர் எனத் தமிழ்நாட்டில் இருக்கும் குப்பைக் கூடங்களை பயோ மைனிங் முறையில் அகற்றும் பணிகள் நடந்துவருகின்றன. இவையெல்லாம் உடனடியாக முடிந்துவிடாது. கொஞ்சம் கொஞ்சமாக, சொல்லப்போனால் மூன்று ஆண்டுகளில் இவற்றையெல்லாம் சரிசெய்துவிடுவோம் என்ற நம்பிக்கை இருக்கிறது.”

“அமைச்சர்கள் இப்போது வெளிநாடு செல்வது தொடர்கிறது... நீங்க எப்போ செல்லப்போகிறீர்கள்?”

``சுற்றுச்சூழல் குறித்து பிற நாடுகளில் என்னவெல்லாம் முன்னெடுப்புகள் செய்துகொண்டிருக்கிறார்கள் என்பதை அறியவும், விளையாட்டுக் கட்டமைப்பை மேலைநாடுகள் அளவுக்கு மேம்படுத்தவும் அறிந்துகொள்ளத் திட்டமிட்டிருக்கிறோம். விரைவில் முதல்வரின் அனுமதியோடு அதற்கான பயணத்தைத் திட்டமிடுவேன்.”

எண்ணூர் கடற்கரை
எண்ணூர் கடற்கரை

“காலநிலை மாற்றம் தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லையே ஏன்?”

“காலநிலை மாற்றத்தைக் கண்காணிக்க தமிழ்நாடு காலநிலை மாற்றம் என்ற இயக்கத்தைத் தொடங்கியிருக்கிறார்கள். காலநிலை மாற்றத்தால் கடற்கரைப் பகுதிகள்தான் அதிகமாக பாதிக்கப்படுகின்றன. அதைச் சீர்செய்ய 172 கோடி ரூபாய் நிதி இந்த ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. கடற்கரைகளில் பயோ சீல்டு பனை மரங்கள், புங்கை மரங்கள் நடுவதற்கு நடவடிக்கை எடுக்கவிருக்கிறோம். மாவட்டத்தில் காலநிலை மாற்றத்தைக் கண்காணிக்க ஒரு குழு அமைத்திருக்கிறோம். சுனாமி, புயல், வெள்ளம், மழை போன்றவற்றால் ஏற்படும் பாதிப்புகளிலிருந்து பாதுகாத்துக்கொள்ளவும் முயற்சிகள் எடுத்துவருகிறோம்.”

“சாயம் உள்ளிட்ட தொழிற்சாலைகளின் கழிவுகளால் ஏற்படும் நுரைகளிலிருந்து மக்களுக்கு எப்போது விடுதலை கிடைக்கும்?”

“தமிழ்நாட்டில் 10 பொது சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒன்றிய அரசிடம் அனுமதி கோரி மனு கொடுத்திருக்கிறோம். முதற்கட்டமாக மூன்று இடங்களில் சுத்திகரிப்பு நிலையங்கள் அமைக்க ஒப்புதல் கிடைத்திருக்கிறது. மேலும், ‘நடந்தாய் வாழி காவேரி’ திட்டத்தையும் முதல்வர் முன்னெடுத்துவருகிறார். இவையெல்லாம் நடந்துவிட்டாலே கழிவுகள் இல்லா மாநிலமாக உருவாக்கிவிடுவோம்.”

செஸ் ஒலிம்பியாட் சின்னம் - முதல்வர் ஸ்டாலின்
செஸ் ஒலிம்பியாட் சின்னம் - முதல்வர் ஸ்டாலின்
ashwin

“விளையாட்டுத்துறையில் புதிதாக என்னென்ன முன்னெடுப்புகள் செய்திருக்கிறீர்கள்?”

“செஸ், ஒலிம்பியாட் வெற்றிக்குப் பிறகு விளையாட்டுத்துறையில் முன்பைவிட முதல்வர் கூடுதல் கவனம் செலுத்துகிறார். மாவட்ட விளையாட்டு அரங்கங்களை மேம்படுத்த முதல்வர் 30 கோடி ரூபாய் ஒதுக்கியிருக்கிறார். புதிய விளையாட்டு அரங்கங்களையும் அமைக்கவிருக்கிறோம். ஏழு சிறிய உள் விளையாட்டு அரங்கங்கள், மாவட்டம்தோறும் 2 கோடி ரூபாயில் விளையாட்டு அரங்கங்கள், சென்னையில் ஒரு விளையாட்டு நகரம், நான்கு ஒலிம்பிக் அகாடமிகள், மதுரை அலங்காநல்லூரில் ஜல்லிக்கட்டு விளையாட்டு அரங்கம், மாநகராட்சிப் பகுதிகளில் தனியாக விளையாட்டு மைதானங்கள், சனி, ஞாயிறுகளில் போட்டிகள் எனப் பல்வேறு திட்டங்களைத் தீட்டியிருக்கிறோம். சென்னை விளையாட்டு நகரம் தவிர மற்ற அனைத்தையும் நிதி நிலைமைக்கு ஏற்ப விரைவில் செயல்பாட்டுக்குக் கொண்டுவரவிருக்கிறோம்.”