Published:Updated:

கலெக்‌ஷன்... கமி‘சன்’ அரசியல்... எம்.ஆர்.கே. மீது குவியும் புகார்கள்...

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கதிரவன்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கதிரவன்

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அமைச்சர் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கிறார்.

கலெக்‌ஷன்... கமி‘சன்’ அரசியல்... எம்.ஆர்.கே. மீது குவியும் புகார்கள்...

அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அமைச்சர் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கிறார்.

Published:Updated:
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கதிரவன்
பிரீமியம் ஸ்டோரி
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், கதிரவன்

முதலிடத்தைப் பிடித்திருக்கிறார் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்! தமிழ்நாட்டில் எந்த அமைச்சர் மீதும் சொந்தக் கட்சியினரே இத்தனை புகார்களை அனுப்பியதில்லை எனும் அளவுக்கு அறிவாலயத்தில் குவிகின்றன அவர் மீதான குற்றச்சாட்டுகள். புகார் சொல்பவர்கள் முன்னாள் நிர்வாகிகளோ, ஓரங்கட்டப்பட்ட அதிருப்தியாளர்களோ அல்ல என்பதும் கவனிக்கப்படவேண்டிய விஷயம்!

கடலூர் கிழக்கு மாவட்டச் செயலாளரான அவரைப் பற்றி, அதே மாவட்டத்தின் வழக்கறிஞரணி அமைப்பாளர் கே.சிவராஜ், மீனவர் அணி அமைப்பாளர் என்.பி.என்.தமிழரசன், மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன், இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.ஜி.ஆர்.சுந்தர் ஆகிய நால்வரும் தலைமைக்கு எழுதிய கடிதத்தின் ஒரு பிரதி, நமது கைகளுக்கும் கிடைத்தது.

எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்
எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

“உள்ளாட்சித் தேர்தலின்போது, கடலூர் மேயர் பதவியை என் மனைவி கீதாவுக்குக் கேட்டிருந்தேன். அதற்காக அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் ஒரு கோடி ரூபாய் வாங்கச் சொன்னதாக அவரது உறவினரும், குறிஞ்சிப்பாடி ஒன்றியச் செயலாளருமான சிவக்குமார் போன் செய்தார். அடுத்த நாள் ஒரு கோடி ரூபாய் பணத்துடன் காட்டுமன்னார்கோயிலிலுள்ள எம்.ஆர்.கே பொறியியல் கல்லூரிக்குச் சென்று அமைச்சரின் மகனைச் சந்தித்தேன். பணத்தைத் தன் உதவியாளர் கோகுலிடம் கொடுக்கச் சொன்னார். பணம் கொடுத்ததை அமைச்சரிடம் சொன்னபோது, ‘மற்றவர்களையும் வெற்றி பெற வை. அப்போதுதான் உன் மனைவி மேயராக வர முடியும்’ என்றார். அதன்படி கூட்டணி வேட்பாளர்களுக்கும் சேர்த்து செலவுசெய்து வெற்றிபெறவைத்தேன். ஆனால், என்னுடைய மனைவியை மேயராக்காமல் நகரச் செயலாளர் ராஜாவின் மனைவி சுந்தரியை மேயராக்கினார். பெரும்பாலான உறுப்பினர்களின் ஆதரவு இருந்தும் கட்சியின் தலைமைக்குக் கட்டுப்பட்டு நான் இந்த விவகாரத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லவில்லை. மேயர் தேர்தல் நடந்த சமயத்தில் காவல்துறையை அனுப்பி எங்களை வீட்டுக் காவலில் வைப்பதுபோல வைத்திருந்தார்கள். இந்த விவகாரங்கள் குறித்து தலைமையே விசாரித்து உண்மையைத் தெரிந்துகொள்ளலாம்” என்பது மாவட்டப் பொருளாளர் வி.எஸ்.எல்.குணசேகரன் எழுதிய கடிதத்தின் சாரம்.

“நகரச் செயலாளர் ராஜாவுக்குத் தொழிலே கட்டப்பஞ்சாயத்து செய்வதுதான். கடலூரில் உள்ள மருத்துவமனைகள், பள்ளிக்கூடங்கள், கல்லூரிகள், தொழிற்சாலைகளில் அவரது ஆட்கள் வசூல் செய்துவருகிறார்கள். அவரின் மனைவியை மேயராக்கியதால் நமது கட்சியின் மதிப்பு குறைந்திருக்கிறது” என்பது இளைஞரணி துணை அமைப்பாளர் ஏ.ஜி.ஆர்.சுந்தரின் புகார்.

எம்.ஆர்.கே சாதிய உணர்வோடு செயல்படுவதாகவும் தலைமைக்குப் புகார் போயிருக்கிறது. “அரசு வழக்கறிஞர்கள் நியமனத்தில் அமைச்சர் தன் சமூகத்தைச் சேர்ந்தவர்களுக்கே முன்னுரிமை அளித்திருக்கிறார். கடலூர் செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு நடத்திய அனுபவமே இல்லாதவரை, குற்றவியல் வழக்கறிஞராக நியமித்திருக்கிறார். கடலூரில் நகர, ஒன்றிய, பேரூர், மாவட்ட அளவிலான கட்சிப் பொறுப்புகளிலும் சிறுபான்மைச் சமூகங்களைப் புறக்கணித்துவிட்டு அவரது சமூகத்தினருக்கே வாய்ப்பு கொடுக்கிறார். இதனால்தான் தேர்தலில் புவனகிரி, சிதம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை இழந்தோம். இப்போது மட்டுமல்ல, எப்போதுமே அந்த உணர்வோடுதான் செயல்படுகிறார்” என மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் கே.சிவராஜ் தன் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

கதிரவன்
கதிரவன்

மேற்கண்ட குற்றச்சாட்டுகளெல்லாம் மீனவர் அணி அமைப்பாளர் என்.பி.என்.தமிழரசன் அனுப்பியுள்ள புகாரிலும் இடம்பெற்றிருக்கிறது.

அவர் பொறுப்பு அமைச்சராக இருக்கும் தருமபுரியிலிருந்து இரு கவுன்சிலர்கள் நம்மை நேரில் சந்தித்துப் பேசினார்கள். “தருமபுரியில் டெண்டர் விவகாரங்களில் அ.தி.மு.க-வினருக்கே முக்கியத்துவம் தருகிறார் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம். அதுவும் உயர்கல்வித்துறை முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் கைகாட்டும் ஆட்களுக்கே டெண்டர்களை ஒதுக்குகிறார். கமிஷனிலேயே குறியாக இருப்பதாகவும், வசூலுக்காக கடலூரில் மட்டுமின்றி தருமபுரிக்கும் உதவியாளர்களை நியமித்திருப்பதாகவும் சொல்கிறார்கள். இந்த விவகாரங்களையெல்லாம் முழுவதுமாக நிர்வகிப்பது அமைச்சரின் மகன் கதிரவன்தான். இரு மாவட்டங்களிலும் தன்னைத் தவிர வேறு யாரும் வளர்ந்துவிடக் கூடாது என்பதை அவரது ஒவ்வொரு செயலும் தெளிவுபடுத்துகிறது. தருமபுரியில் இருக்கும் பேருந்து நிலையத்தை மேம்படுத்துவோம் என்பதுதான் தி.மு.க-வின் தேர்தல் வாக்குறுதி. ஆனால், தனியாருக்குப் பயனளிக்கும் வகையில், அவர்களிடம் பலன் பெற்றுக்கொண்டு புதிய பேருந்து நிலையம் அமைக்க அறிவிப்பாணை வெளியிட்டிருக்கிறார்” எனத் தங்கள் பங்குக்கும் புகார்களை வாசித்தார்கள்.

“அடுத்த தேர்தலில் தன் மகன் கதிரவனை எம்.பி-யாக்குவதற்காக இப்போதே காய்நகர்த்திவருகிறார் அமைச்சர். மாவட்டத்தில் இருக்கும் கட்சியின் சீனியர்கள் அதை விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் அவர்கள் உள்ளடி வேலை பார்ப்பார்கள் என்பதைத் தெரிந்துகொண்ட அமைச்சர், தனது தீவிர ஆதரவாளரான கடலூர் நகரச் செயலாளர் ராஜாவை வைத்து அவர்களை ஒடுக்கத் தொடங்கிவிட்டார். சீனியர்கள் யாரையும் மதிப்பதில்லை. அமைச்சரின் மகன் கதிரவனுக்குத் துதி பாடுபவர்களுக்கு மட்டும்தான் பதவி கொடுக்கிறார்கள்” என்று குமுறுகின்றனர் மூத்த நிர்வாகிகள்.

மேயர் பதவி, கான்ட்ராக்ட் விவகாரங்களில் எதிர்பார்த்தது கிடைக்காததால்தான் ஒரு படையே எம்.ஆர்.கே-வுக்கு எதிராகக் கிளம்பியிருக்கிறது என்பது அமைச்சர் ஆதரவாளர்களின் கருத்தாக இருக்கிறது.

இருப்பினும் இது குறித்து விளக்கம் கேட்டு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தைத் தொடர்புகொண்டோம். அவர் நம் அழைப்பை ஏற்கவில்லை. ‘வாட்ஸ்அப்’ மற்றும் குறுந்தகவல் அனுப்பியிருக்கிறோம். விளக்கம் கொடுத்தால் அதையும் சேர்த்துப் பிரசுரிக்கத் தயாராக இருக்கிறது ஜூனியர் விகடன்.